நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா? – சிரீன் அப்துல் சரூர்

“முஸ்லிம் கிராமங்கள் மாத்திரமே அபிவிருத்தியடைந்துள்ளதை நாம் பார்க்கின்றோம். தமிழ் கிராமங்களையல்ல. கத்தோலிக்க மற்றும் இந்துக் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான ஒரே வழி கோத்தாவிற்கு வாக்களிப்பதே” மன்னாரில் நாமல்ராஜபக்ச.

“நாம் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படவேண்டும். தமிழ் இளைஞர்களாகிய நாம் சிந்தித்துச் செயற்படவேண்டும்” ளுடுPP ற்காக கிரான் இளைஞர் முன்னணி விநியோகித்த துண்டுப்பிரசுரம்.

புத்தளத்தில் வாழும் மன்னார் வாக்காளர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் பஸ்களில் வாக்களிக்க வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. – உதவித் தேர்தல்கள் ஆணையாளர் – மன்னார்.

முஸ்லிம்கள் கோத்தாவிற்கு வாக்களிக்காவிட்டால் அவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும் – அலி சப்ரி – ஜனாதிபதி சட்டத்தரணி

என்ன காரணம் கூறப்பட்டாலும், 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையான வடக்கு கிழக்கு தமிழ் மக்களும், ஏன் கொழும்புத் தமிழ் மக்களும் கூட வாக்களிக்கவில்லை. இதன் விளைவு, பொதுவாகக்; கூறுவதுபோல், வரலாறாகியுள்ளது. அந்த வரலாற்றினை மீண்டும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. தமது வாக்குகளை அளிப்பதில்லை என்கின்ற தமிழ் மக்களின் தீர்மானத்தினால் பதவிக்கு வந்த ஜனாதிபதி அடுத்த 10 வருடங்களாக முழு நாட்டிற்கும் ஜனாதிபதியாக ஆட்சி செய்தார். அந்த ஆட்சியின் தாக்கம் சகலராலும் அனுபவிக்கப்பட்டது. மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தல் வந்துள்ள இந்த நிலையில் சிலர் அதனைப் பகிஸ்கரிக்கக் கோருவதும் பிரதான போட்டியாளர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக வேட்பாளர்களை நிறுத்துவதும் நிகழ்கின்ற இச்சந்தர்ப்பத்தில் 2005 ஆம் ஆண்டு மேற்கொண்ட பகிஸ்கரிப்பினால் அனுபவித்த பாடங்களை நினைத்துப்பார்ப்பது கட்டாயமாக மாறியுள்ளது.

இந்த நாட்டின் சிறுபான்மையினரின் தலைவிதி என்ன என அறிந்து கொள்ள எஞ்சியிருப்பது ஐந்து நாட்கள் மாத்திரமே. வடக்கிலும் கிழக்கிலும் ஒவ்வொரு பிரச்சார மேடையிலும் நான் பார்ப்பது சிறுபான்மையினர் மீது விதைக்கப்படும் இனவாதமும் வெறுப்புரைகளுமே. பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பெயர் போனது சிங்கள அரசாங்கங்கள். சுதந்திரம் கிடைத்ததில் இருந்து அவை செய்துவருவது அதைத்தான். ஆனால் இந்தத் தேர்தலில் நாம் முன்னெப்போதும் பார்த்திராத ஆழத்தினைத் தொட்டுள்ளது.

மொட்டுக் கட்சியின் முன்னணிப் பிரச்சாரகர்கள், குறிப்பாக வடக்கு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் வெறுப்பினைப் பரப்பி கோத்தாவிற்கு வாக்குச் சேகரிக்கின்றனர். சஜித்திற்கு வாக்களிக்க வேண்டாம் ஏனெனில் சஜித் முஸ்லிம்களுடன் இருக்கின்றார். கோத்தாவிற்கு வாக்களியுங்கள் ஏனெனில் அவர் முஸ்லிம்களை வைக்கவேண்டிய இடத்தில் வைப்பார் என்பதே இவர்களின் பிரச்சார சுலோகமாக இருக்கின்றது. கருணா மற்றும் பிள்ளையான் போன்றோரும் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நஞ்சைக் கக்கி வருகின்றனர். முஸ்லிம்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டுமானால் கோத்தாவிற்கு வாக்களியுங்கள் என்று அவர்கள் தமிழ் மக்களிடம் கேட்டு வருகின்றனர். இதிலுள்ள முரண்நகை என்னவென்றால் இதே மொட்டுக் கட்சி ஆதரவாளர்களே ஹிஸ்புல்லா இதே மொழியினைப் பயன்படுத்தி தீவிரவாத முஸ்லிம்களைத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்களவர்களுக்கு எதிராகவும் அணிதிரட்ட அவரை உசுப்பேற்றி வருகின்றமையாகும்!

நல்லாட்சி அரசாங்கம் அது கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு சிறுபான்மை மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டமையே இவ்வாறான தந்திரங்கள் உலாவருவதனைச் சாத்தியமாக்கியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் தங்களின் வாக்குகளை அளிக்கக்கூடாது என அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகின்றது. அவர்களின் பிரச்சினையினை கோத்தாவும் தீர்க்கப்போவதில்லை சஜித்தும் தீர்க்கப்போவதில்லை என அவர்களுக்குக் கூறப்பட்டு வருகின்றது. நீண்ட மௌனத்தின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி அதன் கடைசிக் கட்சிக் கூட்டத்தில் சஜித்திற்கு ஆதரவு வழங்குவது என வவுனியாவில் தீர்மானித்த பின்னர் காணாமற்போன குடும்பங்களைச் சேர்ந்த தாய் ஒருவர் சம்பந்தனை நோக்கி செருப்பினை எறிந்துள்ளார்.

மறுமுனையில் சஜித்திற்காக வாக்களிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி முஸ்லிம்கள் எள்ளி நகையாடப்படுகின்றனர் அல்லது அச்சுறுத்தப்படுகின்றனர். இம்மக்களின் சொந்தச் சமுதாயத்தினரே அச்சத்தினைப் பரப்பிவருகின்றனர். வாக்காளர்களைத் தூரப்படுத்த இவர்கள் பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான குழப்பத்தினை ஏற்படுத்துவதாகும். புர்கா மற்றும் நிகாப் அணியும் பெண்களினால் வாக்குச் சாவடியில் அச்சம் உருவாக்கப்படலாம் என்கின்ற காரணத்தினால் சமாதானமான தேர்தலுக்காக அதனைத் தடைசெய்வது அவசியம் எனப் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் நடந்த தேர்தல்களிலும் முஸ்லிம் பெண்கள் வாக்களித்துள்ளனர். வரிசையில் நின்றுள்ளனர். வாக்களிக்க முன்னர் தம் அடையாளத்தினைக் காட்ட முகத்திரையினை நீக்கிக் காட்டியுள்ளனர். சகல தேர்தல்களிலும் இவ்வாறே ஒரு பிரச்சினையுமின்றி நடந்துள்ளனர் என்கின்ற காரணத்தினால் இவ்வாறான வீண் பிரச்சாரங்கள் குழப்பத்தினையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்துகின்றன. அண்மைக் காலங்களில் தமது ஆடை காரணமாக அரசாங்க நிறுவனங்களிலும் பொதுப் போக்குவரத்துக்களிலும் தொல்லைகளுக்கு ஆளான பெண்களும் குறிப்பாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் காடையர்களினால் தாக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் உண்மையிலேயே அச்சமடைந்துள்ளதுடன் அவர்கள் முன்பு வாக்களித்த அதே எண்ணிக்கையில் வாக்களிக்கச் செல்வார்களா என்பது சந்தேகமே.

2018 ஒக்டோபர் 26 இல் நடந்த அரசியலமைப்புச் சதி கிலி ஏற்படுத்தும் நினைவூட்டலாகும். குறிப்பாக, ராஜபக்சவினை மறுதலித்த 6இ217இ162 வாக்காளர்களுக்கும் ஒரு நினைவூட்டலாகும். ஏனெனில் இந்த ராஜபக்சக்கள் அவர்கள் எதிர்பார்த்திராத வகையில் 2015 இல் எதை இழந்தார்களோ அதனை மீண்டும் பெறுவதற்கு எமது அடிப்படை ஜனநாயக நிறுவனங்களை இடித்துடைக்க ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதே அந்த நினைவூட்டலாகும். மஹிந்த பின்கதவு வழியாகப் பதவியினைப் பிடித்தபோது சிறுபான்மைக் கட்சிகளான வுNயுஇ ளுடுஆஊஇ யுஊஆஊஇ வுPயு ஒன்றாக நின்று அவரது அடாவடி முயற்சியினைத் தோற்கடித்தமை எமது ஒற்றுமையின் பலத்தினைப் பறைசாற்றி நிற்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழர்களைப் பகைமை கொள்ளச் செய்வதன் மூலம் சஜித் வெற்றிபெறுவதற்கான சிறுபான்மையினரின் உதவியினை அகற்றும் செயற்பாட்டினை மொட்டுக் கட்சி மேற்கொண்டு வருகின்றது. தாம் அனுபவித்த அட்டூழியங்களுக்குக் காரணமானவர்களை வேண்டுமென்றே மீண்டும் பதவிக்குக் கொண்டுவர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்துகொண்டு, கோத்தாவிற்கு எதிரானவர்களை வாக்களிக்கச் செல்லாது தடுக்கும் உத்தியினை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சிங்களத் தலைவர்களைத் தெரிவுசெய்வதால் எப்பயனும் இல்லை என்ற மந்திரத்தினை ஓதி இம்மக்களை வாக்குச் சாவடியில் இருந்து தூரமாக்கும் சதித்திட்டத்தினை இவர்கள் நிறைவேற்றிவருகின்றனர்.

இந்த வாக்காளர்களை ஏமாற்ற இவர்கள் பயன்படுத்தும் மூன்றாவது தந்திரம் கோத்தாவிற்கு ஒருபோதும் வாக்களிக்காதவர்களின் வாக்குச் சீட்டுக்களைச் செல்லுபடியற்றதாக ஆக்க எடுக்கும் முயற்சியாகும். கோத்தாவிற்கு ஆதரவாக மட்டக்களப்பில் பிரச்சாரம் செய்பவர்கள் தமிழ்ப் பெண்கள் குழுவொன்றிடம் தமது விருப்பு வாக்குகளைச் செலுத்த மூன்று புள்ளடிகளைப் போடுமாறு கேட்டுள்ளனர். அதாவது இந்தப் பெண்கள் கோத்தாவிற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதை அறிந்தே இவ்வாறு கூறியுள்ளனர். இரண்டடி நீளமும் 35 வேட்பாளர்களின் பெயர்களும் தாங்கிய வாக்குச் சீட்டே குழப்பத்தினை ஏற்படுத்தப் போதுமான காரணமாகும். 1 இல் இருந்து 3 வரை அடையாளமிடுவதும் அல்லது புள்ளடி அடையாளம் (ஓ) இடுவதும் அல்லது 1 இல் இருந்து 3 வரையான தெரிவினை அடையாளமிடுவதும் குழப்பத்தினை அதிகரிக்கின்றது.

சிறுபான்மையினரான முஸ்லிம்களும் தமிழர்களும் வேட்பாளர்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் நம்பிக்கை அற்றவர்களாகவே உள்ளனர் என்பதுடன் வாக்களிக்கச் செல்லும் ஆர்வம் குறைந்தவர்களாகவே உள்ளனர். எவ்வாறாயினும் இவர்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காகச் சென்றேயாகவேண்டும். இந்த நாட்டின் பிரசைகள் என்ற ரீதியில் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்வதற்கும் மற்றுமொரு பிரஜையினை நிராகரிப்பதற்கும் உரிமை கொண்டுள்ள இவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ள ஒருவர் பாவச்யெல்களில் வல்லவரா அல்லது ஓரளவு வல்லவரா என்கின்ற கள யதார்த்தத்திற்கு அப்பால், வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்படும் அந்த ஜனநாயகச் செயற்பாட்டின் உயிர்நாடி இந்நாட்டின் பிரசைகளான தாங்கள்தான் என்கின்ற உண்மையினை எச்சந்தர்ப்பத்திலும் மறக்கலாகாது. வாக்குரிமை என்பது நமது இருப்பின் அங்கீகாரம். நாம் இந்த நாட்டின் கௌரவமான பிரசைகள் என்பதற்கான சான்று. எனது வாக்கு இந்த நாட்டின் தலைவிதியினைத் தீர்மானிக்கும் வலிமையினை எனக்கும் வழங்கியுள்ளது எனும் பெருமிதத்தின் குறியீடு. இது பொய்யினையும் வெறுப்பினையும் பரப்பிச் செல்லும் போலி ஆசாமிகளின் பசப்பு வார்த்தைகளினாலும் அச்சுறுத்தல்களினாலும் நீர்த்துப்போகக்கூடாது.

மக்கள் எவ்வாறோ அவ்வாறே அவர்களுக்கான ஆட்சியும் வாய்க்கும் என்பதெல்லாம் கேட்டு அலுத்த கதைகள். மக்கள் ஒரு போதும் தவறான முடிவெடுக்க மாட்டார்கள் எனும் வழக்காறையும்; அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேணடும். ஆனால் வாக்களிக்கச் செல்லாமல் இருப்பது மக்களின் வலிமையினைக் குறைத்துவிடுகின்றது. அது பாவச்செயல்களில் வல்லவர்கள் கோலோச்சப் பாதை அமைத்துக் கொடுக்கின்றது. அப்பட்டமான பொய்கள், தவறான தகவல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் திரிபுபடுத்தல்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு மக்களின் உண்மையான தெரிவுகள் தங்குதடையின்றி புள்ளடிகளாகப் பதியப்பட்டு மக்கள் நேய ஆட்சியினை மலரச் செய்வது நம் எதிர்காலச் சந்ததியினருக்காக நம் இயற்கை வளங்களுக்காக எம் நாட்டின் ஒற்றுமைக்காக எமது கலாசார விழுமியத்திற்காக, எமது வன வளத்திற்காக, எமது கடல்வளத்திற்காக, எமது பாரம்பரிய நிலத்திற்காக எமது வாழியல் உரிமைக்காக நாம் ஆற்றவேண்டிய கடமையாகும். புள்ளடியிட்டு பாவிகளின் கதைகளுக்கு முற்றுப் புள்ளியிடுவோம். நம் தலைவிதியினை நாமே எழுதுவோம். பிரச்சாரகர்கள் எம் தலைவிதியினை வரைய நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் என்ற சிந்தனையுடன் வாக்களிக்கச் செல்வோம்.

சிறீன் அப்துல் சரூர் மனித உரிமை ஆர்வலரும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமாவார்

Share:

Author: Theneeweb

1 thought on “நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா? – சிரீன் அப்துல் சரூர்

  1. Hi, das ist ein Kommentar.
    Um einen Kommentar zu löschen, melde dich einfach an und betrachte die Beitrags-Kommentare. Dort hast du die Möglichkeit sie zu löschen oder zu bearbeiten.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *