முடக்குதிரைகள். – – கருணாகரன்

தமிழர்களுடைய அரசியல் மேலும் பலவீனப்படும் நிலையே காணப்படுகிறது. அதை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான மூலோபாயமும் தந்திரோபாயமும் எவரிடத்திலும் காணப்படவில்லை. இவ்வளவுக்கும் இப்பொழுது தமிழ் மக்களிடம் ஏராளம் கட்சிகளும் அணிகளும் உள்ளன. உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் ஏராளம் தலைவர்களிருக்கிறார்கள். அமைப்புகள், கட்சிகள் எனப் பலவும் உண்டு.

ஆனால், 2009 க்குப் பின்னரான – போருக்குப் பிந்திய கால (Post war periot) – அரசியலை முன்னெடுத்துச் செல்வதைப் பற்றி இவை எவையும் கவனம் செலுத்தியதாக இல்லை. தமிழ்ச் சமூகமும் இதைப்பற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை. தமிழ்ச்சமூகத்திலுள்ள அரசியல் ஆய்வார்கள், அறிஞர்களிடத்திற் கூட இதைக்குறித்த பிரக்ஞை இல்லை என்றே சொல்லமுடியும். இந்த ஆய்வாளர்களிற் பலரும் ஏதாவது ஒரு கட்சிக்கு அல்லது ஒரு தலைமைக்குக் காவடி எடுப்பவர்களாகவே இருந்தனர். இன்னும் அப்படித்தானிருக்கின்றனர்.

இதற்கப்பால் யாராவது அல்லது எந்தத் தரப்பாவது அப்படிக் கவனம் செலுத்தியிருந்தால் தமிழர்களின் அரசியல் இப்படிக் கீழிறக்கம் கண்டு நகர முடியாமல் முட்டிக் கொண்டிருந்திருக்காது.

2009 உடன் போரை மையப்படுத்திய ஆயுதப்போராட்ட அரசியல் முடிவுக்கு வந்த பிறகான சூழலை எப்படிக் கையாள்வது என்பதைக் குறித்து இன்று வரையில் எவரிடத்திலும் எந்தச் சிந்தனையும் இல்லை. புரிதலும் இல்லை. தெளிவுமில்லை. அதாவது போருக்குப் பிந்திய சூழலில் சமூகம், அரசியல், சர்வதேச நிலைப்பாடுகள், மக்களின் நிலை என்பவற்றைக் குறித்த அறிவு எவரிடத்திலும் இல்லை. போருக்குப் பிந்திய சூழலை பிற சமூகங்களும் பிற நாடுகளும் எப்படிக் கையாண்டன? ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட சூழலைப் பிற சமூகங்கள் எப்படி எதிர்கொண்டன? என்பதைப்பற்றிய தேடலை  எவரும் செய்யவில்லை. இதுவே பின்வந்த அரசியலில் பெரிய தடுமாற்றத்தைப் பலருக்கும் கொடுத்தது.

ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் இல்லாத வெற்றிடத்தை நிரப்பும் வகையில் எந்தச் சக்திகளும் இருக்கவில்லை என்பதே உண்மை.  முன்னர் புலிகள் ஆதிக்கச் சக்தியாக தமிழ் அரசியற் பரப்பிலிருந்தனர். அவர்களைக் கடந்து அரசியல் செய்வதாயின் அது அரசுடன் இணைந்ததாகவே இருந்தது. புலிகளுக்குப் பிறகு அரசுடன் இணைந்திருப்போர் வேறு விதமான அரசியலை – மாற்று அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு எந்தத் தரப்பும் முன்வரவில்லை.

ஆயுதப்போராட்டச் சூழலில் இரண்டு நிலைப்பட்ட அரசியல் தன்மைகளே இருந்தன. ஒன்று, அரசை எதிர்ப்பது. எதிர்த்துப் போர் செய்வது. அடுத்தது, அரசுடன் இணைந்து நின்று புலிகளை எதிர்த்துக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பது. இரண்டுமே ஆயுதந் தாங்கிய அரசியலாக இருந்தன. இதனால் இரண்டினாலும் கொந்தளிப்பும் அழிவுகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

2009 இல் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபோது தமிழ் அரசியற் பரப்பு முற்றாகவே மாறியது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத ஒரு குழப்ப நிலை சனங்களிடத்திலும் காணப்பட்டது. அரசியலாளர்கள், ஆய்வாளர்கள், கட்சிகள், அமைப்புகள் என எல்லாத் தரப்பினரிடத்திலும் இருந்தது. முக்கியமாகப் போரினால் பாதிப்பைச் சந்தித்திருந்த காரணத்தினால் அரச எதிர்ப்புத் தூக்கலாக இருந்தது.

இதேவேளை சற்றுக் குறைவானதாக இருந்தாலும் இன்னொரு சாரார் கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு புதியதொரு அரசியலை முன்னெடுக்க வேண்டும் எனக் கருதினர். ஆனால், இவர்களால் அந்தப் புதிய அரசியலை முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்க முடியவில்லை. இதற்குக் காரணம், போர்ப்பாதிப்பு உண்டாக்கிய உணர்ச்சிகரமான எதிர்மனநிலையே ஆகும். இந்த மனநிலையானது அரச எதிர்ப்பிலேயே மையங்கொண்டது. இது அரச எதிர்ப்பை அரசியல் முறையாகவும் அதற்கான ஆயுதமாகவும் கொள்வோருக்கு வாய்ப்பானது. அவர்கள் தொடர்ந்தும் அந்த வழியிலேயே தமிழ் மக்களை வழி நடத்தினர். இதற்கு ஏற்றவாறு புதிய தடத்தில் தமிழ் அரசியல் பயணிப்பதைத் தடுக்கும் நோக்கில் அரசும் செயற்பட்டது.

ஆக மொத்தத்தில் பழைய தடத்திலேயே தமிழ் அரசியல் சுலபமாகப் பயணிக்கத் தொடங்கியது. ஆனால் அது எந்தப் புதிய இடத்தையும் சென்று சேரவில்லை. இதன் விளைவே இன்று அதனால் புதிய பயணத்தை மேற்கொள்ள முடியாமலிருக்கிறது. புதிய அரசியலைக் குறித்துச் சிந்திக்கக் கூச்சப்படுகிறது. அதாவது அரசை எதிர்ப்பதற்கான, வெற்றியடைவதற்கான  நியாயமான போராட்டங்களை அது முன்னெடுக்கவில்லை. அந்த வழிமுறையை முன்மொழிந்த, வழிமொழிந்த, வலியுறுத்திய எவரும் அதற்கான போராட்டத்தில் ஈடுபடவேயில்லை. அந்தப் போராட்டங்களை மக்களே அங்கங்கே முன்னெடுத்தனர். உதாரணம், காணாமலாக்கப்பட்டோருடைய உறவினர்களின் போராட்டங்கள், காணி மீட்புப் போராட்டங்கள், தொல் அடையாளங்கள், மரபுரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்கள், வேலைவாய்ப்புப் போராட்டங்கள், ஏனைய உரிமைசார் போராட்டங்கள் என எதையும் இந்த எதிர்ப்பாளர்கள் முன்னின்று நடத்தவில்லை. பதிலாக சனங்கள் நடத்தும் போராட்டங்களில் இவர்கள் அவ்வப்போது வந்து தங்கள் தலையைக் காட்டியலும் முகத்தைக் காட்டியதுமே நடந்தது. இன்னும் இதுவே நடந்து கொண்டிருக்கிறது.

இது இந்தப் போராட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான சூழலையும் பலத்தையும் கொடுக்கவில்லை. எந்தப் போராட்டத்தையும் முன்னெடுப்பதற்கு பலமான இயக்கமும் (அமைப்பு அல்லது கட்சி அல்லது இயக்கம்) தலைமையும் (ஆளுமை) வேண்டும். இல்லையென்றால் அந்தப் போராட்டம் வீரியமற்றதாக, தொடர்ந்து முன்னெடுக்க முடியாததாக, விரிந்து செல்ல முடியாததாகவே இருக்கும்.

2009 இற்குப் பின்னர் நடந்த – நடந்து கொண்டிருக்கும் அனைத்துப் போராட்டங்களும் இப்படிக் குறுகியதாக – துண்டு துண்டானவையாகவே இருப்பது இதற்குச் சிறந்த உதாரணம். இதை விரிந்த பரப்பிற்குக் கொண்டு செல்வதாயின் முன் சொன்னமாதிரி பேரியக்கம் அல்லது பேரமைப்பே வேண்டும். அந்தப் பேரமைப்பு என்பது எண்ணிக்கையிலும் வடிவத்திலும் பெரியதாக இருக்க வேண்டியதென்றில்லை. அது உள்ளடக்கத்திலும் சிந்தனைத் திறனிலும் அர்ப்பணிப்பிலும் செயலூக்கத்திலும் பேரியக்கத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

அத்தகைய இயல்பும் திறனும் தன்மையும் இன்றுள்ள எந்தக் கட்சியிடத்திலும் இல்லை. அமைப்புகளிடத்திலும் இல்லை. இதற்கான சிந்தனைத் திறன் கொண்ட ஆளுமைகளும்  தமிழ்ப்பரப்பில் இல்லை. இதை வெளிப்படையாகச் சொல்வதற்கோ பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதற்கோ யாரும் கூச்சப்படத் தேவையில்லை. குறைந்த பட்சம் அரச ஒடுக்குமுறையும் பாரபட்சமும் இன்னமும் நீடிக்கிறது என்று குற்றம் சாட்டும் எந்தத் தலைவரும் எந்தக் கட்சியும் அதற்கெதிரான வலுமிக்க போராட்டத்தையாவது இந்தப் பதினொரு (2009 – 2020) ஆண்டு காலத்தில் நடத்தியதுண்டா? அந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டோ அடிதடிப்பட்டோ இருக்கிறார்களா? அப்படி எவரேனும் உள்ளே தள்ளப்பட்டிருந்தால் இந்தப் போராட்டத்தை இவர்கள் விசுவாசமாக நடத்தினர் என்று கொள்ள முடியும். இந்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் எண்ணம் இருக்கிறது எனலாம். அதாவது ஒடுக்குமுறைக்கும் பாராபட்சத்துக்கும்  எதிரான (அரச எதிர்ப்பு) போராட்டத்தை முன்னெடுக்கும் நேர்மை இருந்தது எனக் கருத முடியும்.

இது பொய்த்துப் போனதால்தான் அரச எதிர்ப்புப் போராட்டம் வெற்றியடையாதது மட்டுமல்ல, அந்த வழிமுறையிலான (தமிழ்) அரசியலும் தோற்றுப்போனது. இதற்கு இந்த அரசியலை முன்மொழிந்து கொண்டிருப்பவர்கள் சொல்லும் நியாயம், (சாட்டு அல்லது காரணம்) தமிழ் மக்களுடைய பிரச்சினையையும் அரசாங்கத்தின் பாரபட்சங்களையும் அரசியற் தவறுகளையும் தாம் சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதாகும். இது ஒரு அரசியல் நடவடிக்கையா? அதுவும் பாதிக்கப்பட்ட சமூகமொன்றின் அரசியல் வழிமுறை என்றால், இதை விடப் பகடி வேறென்ன? இது சுத்தமாகவே மக்களை ஏமாற்றும் செயல். இதை ஊடகங்களும் முன்னின்று செய்தன. இது மிகப் பெரிய அவலம்.

இதற்கு நிகரானது அரசாங்கத்தோடு இணைந்திருப்போரின் அரசியல். அது இந்த அரசாங்கம் என்றில்லை. 2009 க்குப் பின்னர் ஆட்சியிலிருந்த தரப்புகளோடு இணைந்து நின்ற அனைத்துத் தரப்பினரும் அவர்களுடைய  அரசியலும் தமிழ்ச்சமூகத்தை எந்த வகையிலும் ஈடேற்றவில்லை. பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, கருணா, சம்மந்தன் என அனைவரும் இதில் தோல்வியைக் கண்டவர்களே. அப்படி யாராவது வெற்றியைக் கண்டவர்கள் என்றால் அந்த வெற்றி என்ன என்று அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும். அந்த வெற்றியை அவர்கள் அடையாளப்படுத்த வேண்டும். சில சிறிய காரியங்களை இவர்களில் யாரும் செய்திருக்கலாம். அதற்கான பெறுமதிகளும் இருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் சில்லறைகளே.

பெரும் நெருக்கடிகள், அடிப்படையான பிரச்சினைகள் என எவையும் இன்னும் தீர்க்கப்படவில்லை. அவற்றைத் தீர்ப்பதற்கான சிறு ஆயத்தங்கள் கூட நடக்கவில்லை. அதைப்பற்றிப் பேசுவதற்கான தயாரிப்போ துணிச்சலோ கூட இவர்களிடத்தில் இல்லை. குறைந்த பட்சம் இந்தப் பிரச்சினையைக் கையாள்வதாயின் தனித்தனியாக அதைச் செய்ய முடியாது. அதற்கு அடிப்படையான ஒரு கூட்டிணைவு முக்கியம் என்ற உணர்வும் நம்பிக்கையும் கூட இவர்களிடத்திலே இல்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றிப்பேச வேண்டுமானால் அதற்கு அனைத்துத் தரப்பின் அங்கீகாரமும் தேவை என முப்பது ஆண்டுகாலமாக அரசாங்கம் சொல்லி வருகிறது. அந்த அடிப்படையில்தான் அது சர்வகட்சி மாநாடு, அனைத்துக் கட்சிகளின் சந்திப்பு, வட்டமேசை மாநாடு என்றெல்லாம் செய்து வருவதை இந்த இடத்தில் கூர்ந்து சிந்திக்க வேண்டும். இந்த விசயத்தில் அரசாங்கம் எப்படிச் சிந்திக்கிறது? அதற்கான அடிப்படைகள் என்ன? என்பதை உணர்ந்தால் அவ்வாறான ஒரு தீர்வை முன்மொழிவதற்கும் பேசுவதற்கும் அப்படி ஒரு கூட்டு அவசியம் என்பது புரியும். இதுவொன்றும் புதியதல்ல. 1985 இலும் அதற்குப் பின்னர் 1987 வரையிலும் நடந்த – முன்வைக்கப்பட்ட திம்புக் கோட்பாட்டு உருவாக்க முறைமையே.

இதை இன்றுள்ள தலைமைகள் சிந்திக்க மறுப்பதேன்? புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களும் இதைக்குறித்துச் சிந்திப்பதாக இல்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கம் தமிழ்த்தேசிய – எதிர்த்தேசிய, புலி ஆதரவு – புலி எதிர்ப்பு நிலைப்பாட்டினர் எல்லோரும்தான் இதில் தவறிழைத்திருக்கின்றனர். எல்லோரிடத்திலும் குதிரைகள் உண்டு. ஆனால், அவை ஒரு போதுமே ஓட முடியாத குதிரைகள். முடக்குதிரைகள். பல குதிரைகள் கற்பனைக் குதிரைகள். அந்தக் குதிரைகள் யதார்த்தத்தில் ஓடுவதுமில்லை. களைப்பதுமில்லை. அந்தக் குதிரைகளில் பயணம் நடக்கும் என்று நம்புவதில் அர்த்தமும் இல்லை.

இப்படியான ஒரு சூழலில்தான் அடுத்த பாராளுமன்றத் தேர்தலும் வருகிறது. அந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ்த்தலைமைகளால் தவறாகவே வழிநடத்தப்படப்போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.

போர்ப்பாதிப்பு மன நிலையானது ஒரு உளவியற் சிக்கல். அதைக் கவுன்ஸிலிங் மூலமாக கடந்து செல்ல வேண்டும். இந்தக் கூட்டு உளவியற் சிக்கலைத் தமிழ்ச்சமூகம் கடக்கவில்லை என்றால் அதனுடைய எதிர்காலம் இருட்குழியிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை. இதற்கு நல்லதொரு உதாரணம், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் இரண்டு ஆண்டுகளைக் கடந்த போராட்டம் இன்று அடைந்திருக்கும் நிலை. அந்த உறவுகள் பட்டுக் கொண்டிருக்கும் தொடர் பாதிப்பும் தொடர் துயரும்.. முடிவுறாக் கதை. இதை அறிந்தவர்கள் யார்? உணர்ந்தவர்கள் யார்?

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *