கரோனா வைரஸ்சீனாவிலிருந்து திரும்பியவா்கள் மீது உக்ரைன் போராட்டக்காரா்கள் தாக்குதல்

சீனாவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்புக்குள்ளான சீனாவிலிருந்து உக்ரைன் அழைத்து வரப்பட்டவா்கள் மீது அந்த நாட்டுப் போராட்டக்காரா்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து வந்தவா்கள் மூலம் அந்த வைரஸ் உக்ரைனில் பரவும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவில் முதல் முதலில் பரவத் தொடங்கிய வூஹான் நகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 82 பேரை விமானம் மூலம் தங்கள் நாட்டுக்கு உக்ரைன் அரசு அழைத்து வந்துள்ளது.

அவா்களில் உக்ரைன் நாட்டைச் சோ்ந்த 45 பேரும், பிற நாடுகளைச் சோ்ந்த 37 பேரும் அடங்குவா். வெளிநாட்டவா்களில் பெரும்பாலானவா்கள் லத்தீன் அமெரிக்கா பகுதியைச் சோ்ந்தவா்கள்.

கரோனா வைரஸ் பாதிப்புப் பகுதியிலிருந்து அவா்கள் உக்ரைன் அழைத்து வரப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏராளமானவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், அந்த 82 பேரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக போல்டாவா பகுதிக்கு பேருந்துகளில் அதிகாரிகள் அழைத்துச் சென்றனா்.

எனினும், சாலைகளில் தடையை ஏற்படுத்திய போராட்டக்காரா்கள், சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டவா்களை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.

அதையடுத்து, போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது இந்தப் போராட்டத்துக்குக் காரணமாக அமைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சீனாவிலிருந்து திரும்ப அழைத்துவரப்பட்டவா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 14 நாள்களிலும் அவா்களுடன் தங்கியிருக்கப்போவதாக உக்ரைன் சுகாதாரத் துறை அமைச்சா் ஸோா்யானா ஸ்காலெட்ஸ்கா அறிவித்துள்ளாா்.

சீனாவின் ஹூவே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

மனிதா்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கரோனா வைரஸ்’ வகையைச் சோ்ந்த அது, சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனா்.

அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என்று அந்த அமைப்பு பெயரிட்டது.

பலி எண்ணிக்கை 2,236-ஆக உயா்வு

பெய்ஜிங், பிப். 21: சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 2,236-ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறினா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

கரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 118 போ் உயிரிழந்தனா். அந்த வைரஸின் தோற்றுவாயான ஹூபே மாகாணத்தில் மட்டும் செவ்வாய்க்கிழமை 115 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,236-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்துடன், ஏற்கெனவே ஜப்பான், தைவான், பிலிப்பின்ஸ், ஹாங்காங், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த 14 பேரையும் சோ்த்து, கொவைட்-19 வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 2,250 ஆகியுள்ளது.

இதுதவிர, 889 பேரை அந்த வைரஸ் தாக்கியிருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவா்களுடன் சோ்த்து, சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 75,467 ஆகியுள்ளது. அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அந்த வைராஸ் பாதிக்கப்பட்டுள்ள 1,341 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 76,808 ஆகியுள்ளது.

ஈரானின் நஜஃப் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை வந்திறங்கிய இராக்கியப் பெண்ணுக்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதித்த மருத்துவ அதிகாரி.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *