அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து – 20 ஆண்டுகால போர் இன்றுடன் முடிவு

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச்சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் தோஹாவில் இன்று கையொப்பமானது.

இந்த ஒப்பந்தத்தின் படி, கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப்பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும். கடந்த 18 ஆண்டுக்கால போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தலிபான் தீவிரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் இருக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் 18 ஆண்டுக்கால போர் முடிவுக்கு வரும்.

தலிபான் தீவிரவாதிகள் தரப்பில் கமாண்டர் முல்லா பராதர், அமெரிக்கா தரப்பில் வாஷிங்டன் பேச்சுவார்த்தைக் குழுத்தலைவர் ஜல்மே காலிஜாத் ஆகியோருக்கு இடையே தோஹா ஹோட்டலில் இன்று ஒப்பந்தம் கையொப்பமானது.
இருவரும் கையொப்பம் செய்தபின் கைகுலுக்கிக்கொண்டு, இஸ்லாமிய முறைப்படி இறைவனுக்கு வணக்கம் செலுத்தினர்.

மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட தலிபான்கள்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ” இந்த ஒப்பந்தம் சிறப்பானது. ஆனால், ஒப்பந்தத்தில் உள்ளபடி, தலிபான்கள் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றி அல் கொய்தா தொடர்பை துண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், ” ஆப்கான் மக்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. தலிபான்களும், ஆப்கான் அரசும் ஒப்பந்தத்தில் உள்ளபடி செயல்பட்டால், ஆப்கானில் போரை முடிப்பதற்கு நமக்கு வலிமையான பாதை காத்திருக்கிறது, எங்கள் படைகளையும் திரும்ப அழைப்போம்” எனத் தெரிவித்தார்

இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த 14 மாதங்களில் அமெரிக்க ராணுவம், நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறும். முதல்கட்டமாக அடுத்த 135 நாட்களில் 8,600 வீரர்கள் வெளியேறுவார்கள்.

நேட்டோபடையின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் கூறுகையில், ” ஆப்கானிஸ்தானில் அமைதி கொண்டுவருவதற்கு முதல் படி. அமைதியை ஏற்படுத்துவதற்கான பாதை நீண்டது, கடினமானது. அமைதி என்பது எளிதாக இங்கு வரவில்லை, ஏராளமானவற்றை இழந்திருக்கிறோம். ஆனால், இதுதான் முதல்படி” எனத் தெரிவித்தார்.

கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதி தகர்த்தனர். அதன்பின் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது. இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளார்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் ராணுவத்தினர், பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்

தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகித் கூறுகையில், ” இந்த அமைதி ஒப்பந்தம் கையொப்பமான பின் எங்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாடு முழுவதும எங்கள் ராணுவ நடவடிக்கையை நிறுத்தி இருக்கிறோம் . இனிமேல் எந்த காரணத்தைக் கொண்டும் ஆப்கானிஸ்தான் மண்ணில் ஜிகாதி இயக்கங்களான அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இடமில்லை” எனத் தெரிவித்தார்

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *