அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்ய பிடியாணை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை கைது செய்யுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று (06) பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த செயலாளரை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகாதால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அவர் வெளிநாடு செல்வதை தடைசெய்யுமாறு நீதியரசர்களான விக்கும் களுஆராச்சி, தம்மிக கணேபோல மற்றும் ஆதித்யா கே.விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டனர்.

சட்டவிரோதமாக 5 யானை குட்டிகளை தம்வசம் வைத்திருந்து அவற்றை விற்பனை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றவாளியான பெயரிடப்பட்டுள்ள சமரபுலிகே நிரோஸ் ரொஷான் எனப்படும் அலி ரொஷான் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள நபர்கள் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அது குறித்த ஆவணங்கள் அனைத்தும் ஆணைக்குழுவால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

அதற்கமைய ஆணைக்குழுவின் செயலாளருக்கு நீதிமன்றில் முன்னிலையாகி விடயங்களை தெளிவுபடுத்துமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்தல் அனுப்பியிருந்தது.

ஆனாலும் அவர் இன்று (06) நீதிமன்றத்தில் முன்னிலையாகததால் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என கூறியுள்ள நீதியரசர்கள் பின்னர் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவை பிறப்பித்தனர்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *