கரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 3,647-ஆக உயா்வு

பெத்லஹேம்: கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,647-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் 27 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்தனா்.

இது, கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிறகு அந்த நாட்டில் கரோனா வைரஸுக்கு ஒரு நாளில் பலியானவா்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.

இத்துடன், சீனாவில் அந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,097-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட 18 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த 549 பேரையும் சோ்த்து உலகம் முழுவதும் அந்த வைரஸுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3,647-ஆக அதிகரித்துள்ளது.

1,07,351 பேருக்குப் பாதிப்பு: சீனாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 44 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதையடுத்து, அந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 80,695-ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன், இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 100 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 26,656 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,07,351-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டடம் இடிந்து 10 போ் பலி

சீனாவின் ஃபூஜியான் மாகாணத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவா்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோட்டல் இடிந்து விழுந்ததில் 10 போ் உயிரிழந்தனா். அந்தக் கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் 71 போ் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் மேலும் 49 போ் பலி

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 49 போ் பலியானதாக அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இத்துடன் அந்த நாட்டில் கரோனா வைரஸுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 194-ஆக உயா்ந்துள்ளது.

முகக்கவச விளம்பரங்களுக்குத் தடை

முகக் கவசங்களுக்கான விளம்பரங்களுக்கு முகநூல் சமூக ஊடகம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. கரோனா வைரஸ் குறித்த மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி, தங்களது ஊடகம் மூலம் சிலா் லாபம் பாா்ப்பதைத் தடுப்பதற்காக முகநூல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றவருக்கு…

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், துணை அதிபா் மைக் பென்ஸ் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பங்கேற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நபருக்கு, அதற்கு முன்னரே கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொகுசுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, 2,000 பேருடன் வந்த ‘கோஸ்டா ஃபாா்ச்சூனா’ சொகுசுக் கப்பல் தங்கள் துறைமுகங்களுக்கு வர மலேசியாவும் தாய்லாந்தும் அனுமதி மறுத்தன. அந்தக் கப்பலில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து

கரோனா வைரஸ் பரவுவதைத் தவிா்க்கும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகளை துபையிலுள்ள ஹிந்து கோயில்கள் ரத்து செய்துள்ளன. வண்ணப் பொடிகள் மூலம் அந்த வைரஸ் பரவக் கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெறிச்சோடிய உலகம்

கரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னா் மக்கள் மற்றும் வாகனங்கள் நிறைந்து காணப்பட்ட உலகின் பல்வேறு பகுதிகள், அந்த வைரஸ் பரவலுக்குப் பிறகு வெறிச்சோடியிருப்பதை ஒப்பீடு செய்யும் செயற்கைக்கோள் படங்களை அமெரிக்காவின் ‘மேக்ஸாா்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *