தமிழ் தேசிய கூட்டமைப்பு திருகோணமலையில் வேட்பு மனு தாக்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று காலை 11 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது.

இதேவேளை, திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் அகில இலங்கை தமிழர் மகா சபை இன்று (18) பகல் வேட்பு மனுத்தாக்கல் செய்தது.

அகில இலங்கை தமிழர் மகா சபையின் எஸ்.கோபாலகிருஸ்ணன், விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் திகாமடுல்ல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்கவிடம் வேட்பு மனுக்களை இன்று பகல் கையளித்தனர்.

இவரது கட்சியில் விநாயகமூர்த்தி முரளிதரன், குலசேகரம் கணேசமூர்த்தி, கணபதிப்பிள்ளை உதயரமணன், கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி, இராஜநாயகம் இராஜேஸ்வரன், இராஜசிங்கம் சுவர்ணராஜ், சின்னத்தம்பி ராசமாணிக்கம், ளதருமலிங்கம் கவிதன், தியாகராசா ஞானேந்திரம், வயந்தராசப்பிள்ளை சந்திரசேகரன் ஆகியோர் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (18) பகல் வரை 3 அரசியல் கட்சிகள் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மொத்தமாக இன்று பகல் வரை 6 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதுடன் இதுவரை 20 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் வசந்த பிரியந்த தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தொடம்பல குசலசிறி ஹிமி தலைமையிலான அபே ஜனபல பக்சய, கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையிலான தமிழரசுக்கட்சி ( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைக் கையளித்தன.

நேற்றைய தினம், எச்.எம்.றுவான் குமார தலைமையிலான சிறிலங்கா சமாஜவாதி கட்சி, ஜீ.குமாரகுலசிங்கம் தலைமையிலான இலங்கை லிபரல் கட்சி, சீலரத்ன தேரர் தலைமையிலான ஜனசத பெரமுன கட்சி ஆகியனவும், கலந்தர் சாகுல் கமீட் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

அம்பாறை மாவட்டத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 10 பேர் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக் குழுவிலிருந்து போட்டியிடுவர். ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு கட்டப்பணம் செலுத்தும் காலம் நேற்று (17) முதல் ஆரம்பமாகியுள்ளன.

வேட்பு மனுத்தாக்கல் 12 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 19 ஆம் திகதியுடன் நிறைவடையும். அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தின் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் ஐந்து இலட்சத்து 13 ஆயிரத்து 979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *