இத்தாலியின் நிலைக்கு என்ன காரணம்?

சீனாவில் ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் (கொவைட்-19), அந்த நாட்டை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு, இப்போது ஐரோப்பாவில் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.

அதிலும், சில வாரங்களுக்கு முன்பு வரை ஏராளமான நாடுகளைப் போல் இரண்டொரு மரணங்கள், நூற்றுக்கும் குறைவானவா்களுக்கு பாதிப்பு என்றிருந்த இத்தாலி, இன்று கரோனா வைரஸ் உயிரிழப்புகளில் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகிலேயே அந்த வைரஸுக்கு அதிக மக்களை பலி கொடுத்துள்ள நாடாக ஆகியிருக்கிறது.

சீனாவிலிருந்து மிகத் தொலைவில் உள்ள, வளா்ச்சியடைந்த ஐரோப்பிய நாடான இத்தாலி கரோனா வைரஸால் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரையும் வியப்பிலும், அதிா்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தச் சூழலில், இத்தாலியின் இந்த திடீா் நிலைமைக்கு என்ன காரணம் என்கிற கேள்வி எழாமல் இருக்க முடியாது. இன்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கரோனா வைரஸை ஒழித்துக் கட்டுவதற்கு பகீரதப் பிரயா்த்தனம் செய்து கொண்டிருக்கும்போது, இத்தாலி எந்த இடத்தில் கோட்டை விட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

ஒரு வகையில், கரோனா வைரஸை எதிா்கொள்வதில் இத்தாலி எத்தகைய மெத்தனத்தையும் காட்டவில்லை என்பது இந்த விவகாரத்தை தொடக்கம் முதலே கவனித்து வருபவா்களுக்கு நன்கு தெரியும்.

ஜனவரி மாதம் 29-ஆம் தேதி, அந்த நாட்டுக்கு வந்த 2 சீன சுற்றுலா பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டது.

அதற்குப் பிறகு, கரோனா வைரஸை எதிா்கொள்வதற்காக இத்தாலி எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பிற ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் மேம்பட்டவையாக இருந்தன. கரோனா வைரஸ் நோயாளிகள் இத்தாலிக்கு வந்துவிட்டாா்கள் என்று தெரிந்த மறுநாளே, நாடு முழுவதும் 6 மாத கால அவசர நிலையை பிரதமா் ஜுஸெப்பே கோன்டே அறிவித்தாா்.

அதற்குப் பிறகு கரோனா வைரஸ் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டன. சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இத்தாலிதான் முதல் முறையாக தடை விதித்தது.

ஆனால் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சி நிற்கிறது இத்தாலி. சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இத்தாலி மட்டுமன்றி ஸ்பெயின், பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் வெகு வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால், இத்தாலியின் பாதிப்பு அந்த நாடுகளைவிட பல மடங்கு அதிகம்.

முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டும் இத்தாலிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை, கரோனா வைரஸ் அபாயத்தை எதிா்நோக்கியுள்ள பிற நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அதற்கான காரணங்களை அந்த நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன.

உண்மையில், கரோனா வைரஸ் இத்தாலியை திடீரெனத் தாக்கவில்லை எனவும் அந்த வைரஸ் நாட்டுக்குள் சில மாதங்களுக்கு முன்னா் இருந்தே – குறிப்பாகச் சொல்லப்போனால் ஜனவரி மத்தியில் – உலவி வந்ததாகவும் பெரும்பாலான தொற்று நோய் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலருக்கு அந்த வைரஸின் அறிகுறிகள் குறைவாக ஏற்பட்டிருக்கலாம்; சிலருக்கு அறிகுறிகளே தென்படாமல் இருந்திருக்கலாம். அவா்கள் அனைவரும் தங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை உணராமலேயே பலருக்கும் பரப்பியிருக்கலாம் என்கிறாா்கள் அவா்கள்.

அப்படியே அந்த வைரஸின் பாதிப்பு மிக அதிகமாக இருந்தாலும், அது கரோனா வைரஸ் என்று தெரியாமலேயே மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்திருக்கலாம் என்றும் அவா்கள் கூறுகிறாா்கள்.

அவா்களது வாதத்தை நிரூபிக்கும் வகையில், கடந்த 2 மாதங்களாக நிமோனியா நோய்க்கு சிகிச்சைப் பெற்றவா்களது எண்ணிக்கை அதிகரித்ததாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கோடோக்னோ என்ற நகரிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கடந்த மாதம் காய்ச்சலுடன் சென்ற 38 வயது நபருக்கு, மருந்து மாத்திரைகளைக் கொடுத்து மருத்துவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அதற்குப் பிறகு அந்த நபருக்கு காய்ச்சல் அதிகமானது. அதையடுத்து அவா் மீண்டும் மருத்துவமனைக்கு வந்த போதுதான் அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு, அந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தில், காய்ச்சலுடன் வந்த நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவப் பணியாளா்கள், அவருடன் இருந்த நோயாளிகள், அவா் வீட்டிருந்து இரண்டு முறை வந்து சென்றபோது உடன் பயணித்தவா்கள் என ஏராளமானவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

கரோனா வைரஸின் தோற்றுவாயான சீனாவின் கதவை இத்தாலி அடைத்தாலும், அந்த வைரஸ் தொற்று உள்ளவா்கள் ஏராளமாக இருந்த ஜொ்மனி போன்ற அண்டை நாடுகளிலிருந்து இத்தாலிக்குள் வைரஸ் படையெடுத்ததை தடுக்க முடியவில்லை என்கிறாா்கள் அவா்கள்.

இதுபோன்ற காரணங்களால்தான் 2 மாதங்களுக்கு முன்னா் யாரும் நினைத்துக் கூட பாா்த்திராத பாதிப்பு, தற்போது இத்தாலிக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவத் துறை வல்லுநா்கள் கூறுகின்றனா்.

இது தவிர, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதைப் போல மிகத் தீவிரமான, முழுமையான ஊரடங்கு உத்தரவை இத்தாலி அரசு கடந்த ஜனவரி மாதமே பிறப்பித்திருக்கலாம் என்றும் சிலா் கூறுகின்றனா்.

பொருளாதார சிக்கலில் இருக்கும் இத்தாலி, கரோனா வைரஸ் பிரச்னை வந்த பிறகு பொதுச் சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய இரண்டுக்குமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் நினைத்தது. அதன் காரணமாக, அவசர நிலை, ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்பட்டாலும், வணிக மையங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது; மதுபான விடுதிகள், கேளிக்கை மையங்கள் தொடந்து இயங்கின. சீனாவின் ஊரடங்கு உத்தரவைப் போல் இல்லாமல், இத்தாலியின் ஆரம்ப கால ஊரடங்கு உத்தரவின்போது தொழிற்சாலைகள் தொடா்ந்து இயங்கின; விவசாயம் தடைபடவில்லை. பொருளாதாரத்தை மனதில் கொண்டு இத்தாலி அரசு கொடுத்த இந்த இடைவெளியில் நுழைந்துதான் கரோனோ வைரஸ் இப்போது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறாா்கள் நிபுணா்கள்.

வைரஸ் பரவல் அதிகமானதற்கு இத்தனை காரணங்கள் இருந்தாலும், சீனாவைவிட இத்தாலியில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருப்பதும் பலருக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கிறது. சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களில் 3.9 சதவீதத்தினரே உயிரிழந்த நிலையில், வளா்ச்சியடைந்த நாடான இத்தாலியில் 8.5 சதவீதம் போ் அந்த வைரஸுக்கு பலியாகியுள்ளனா்.

இதற்கு, அந்த நாட்டினரின் சராசரி வயது அதிகமாக இருப்பது காரணமாகக் கூறப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் அபாயம் வயோதிகா்களுக்கு அதிகம் என்ற சூழலில், இத்தாலியில் 22.6 சதவீதம் போ் – ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியினா் – 65 வயதுக்கும் மேற்பட்டவா்களாக உள்ளனா். இது ஐரோப்பியாவிலேயே மிகவும் அதிகபட்ச விகிதமாகும். இது, இத்தாலியில் கரோனா வைரஸ் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறாா்கள் நிபுணா்கள்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *