ஜனாதிபதித் தேர்தல் – சில கேள்விகளும் குறிப்புகளும் – கருணாகரன்

–     

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸவின் தேர்தல் வெற்றி பல முனைகளிலும் பல கேள்விகளை எழுப்புகிறது. சில குறிப்புகளையும் எழுதத் தூண்டுகிறது.

முதலில் கேள்விகள்

1.   இலங்கையில் ஜனநாயக இடைவெளி எப்படியிருக்கும்?

2.   கோட்டபாய தெரிவானால் (வெற்றியடைந்தால்) பயங்கரவாதம் தலைவிரித்தாடும் என்று சொன்னவர்கள் இனி என்ன மாதிரியான நிலைப்பாட்டினை எடுப்பர்?

3.   வெள்ளைவான் அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்படுமா?

4.   அப்படியென்றால் அதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள், வழிகள் என்ன?

5.   கோட்டபாயவின் வெற்றி நல்லதல்ல என்ற கருத்தோடிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்கு வந்து செல்லும் நிலையில் மாற்றம்  நிகழுமா?

6.   அடுத்த தடவை நல்லூர்த் திருவிழாவுக்கு புலம்பெயர் தமிழ் மக்களின் வருகை குறையுமா?

7.   சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை (கோட்டபாயவை) தமிழ் மக்கள் நெருங்குவதும் உரையாடுவதும் எவ்வாறு?

8.   எவ்வளவோ முயன்றும் தடுத்து நிறுத்த முடியாத கோட்டாவின் வெற்றிக்குப் பிறகு தமிழ் மக்களின் நிலை?

9.   கோட்டாவின் வெற்றியைத் தமிழ் பேசும் சமூகங்களால் தடுத்த நிறுத்த முடியாமல் போனதேன்?

10. சஜித்தை வெற்றியடைய வைக்க முடியாமல் போனதேன்?

11. கோட்டபாய வெற்றியடைவதற்கான வாய்ப்பும் சூழலுமே தெற்கில் உண்டென்று சாதாரணமாகப் பலருக்கும் தெரிந்த அளவுக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதை மதிப்பிடத் தவறியதேன்? குறிப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இதைக் குறிகாட்டிய பிறகும் இதை உய்த்துணர முடியாமல் இருந்தது ஏன்?

12. வெற்றிக்கான வாய்ப்புகள் சஜித்துக்குக் குறைவு என்று தெரிந்து கொண்டே அவருக்கான ஆதரவை வழங்குவதற்கு ரெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சியும் முன்வந்தது ஏன்?

13. கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக்கும் அது வகுத்த வியூகத்துக்கும் அப்பால் கோட்டா வெற்றியடைந்துள்ள சூழலில் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

14. நிலைமையைச் சரியாக ஆராய்ந்து மதிப்பிடத் தெரியாத ஒரு கட்சி – ஒரு தலைமை – மக்களுக்குத் தொடர்ந்தும் தலைமைப்பொறுப்பிலிருக்க முடியுமா? அதற்கான தகுதி அதற்குண்டா?

15. இந்தத் தவற்றை உணர்ந்து அது தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் தீர்மானத்தை எடுக்குமா? தெற்கில் அமைச்சர்கள் தமது பதவிகளை உடனடியாகவே துறந்து வருகிறார்கள். சஜித் பிரேமதாஸ கட்சியில் தான் வகித்த உயர் பதவியையே துறந்திருக்கிறார். அதைப்போல நடந்த அரசியல் தவறுக்காக கூட்டமைப்பின் வழிநடத்தற்பொறுப்பில் (தலைமையில்) இருப்பவர்கள் தமது அந்தப் பதவிகளையேனும் கைவிடுவரா?

16. தமிழர்கள் இனி வரும் நாட்களில் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டினை எடுக்கப்போகிறார்கள்?

17. இனமுரண்பாட்டு அரசியல் மேலும் கூர்மைப்பட்டிருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இது எதிர்காலத்துக்கு என்ன மாதிரியான பயன்களையும் விளைவுகளையும் தரும்?

18. தமிழ் மக்கள் அரசியல் தீர்மானங்களை எப்படி எடுக்கிறார்கள்?

19. அவர்களுடைய அரசியல் நோக்கு முறைமை எவ்வாறானது?

20. அது அறிவு மயப்பட்டதா? உணர்ச்சி மயப்பட்டதா?

21. உணர்ச்சி வசப்பட்ட அரசியலையே தமிழர்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான காரணம் என்ன?

22. தமிழ் பேசும் சமூகங்கள் இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு ஒன்றிணையக் கூடிய வாய்ப்புகள் உண்டா?

23. புதிய அரசாங்கம் ஒன்று அமையுமா? அல்லது பழைய அரசாங்கமே சில காலங்களுக்காவது தொடருமா?

24. புதிய அரசாங்கம் என்றால் அதன் கட்டமைப்பு எப்படியிருக்கும்?

25. கோட்டபாய ராஜபக்ஸவின் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் எப்படி அமையப் போகின்றன?

26. கோட்டா சுயாதீனமாக இயங்குவாரா? அல்லது பலரும் கருதுவதைப்போல அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்ஸவின் கட்டளை, அறிவுரை, வழிகாட்டல்களின்படிதான் நடந்து கொள்வாரா?

27. தமிழ், முஸ்லிம் மக்களின் நலன், நிலை தொடர்பாக கோட்டாவின் நிலைப்பாடு என்ன? எப்படி அதை அறிவது?

28. தமிழ் பேசும் சமூகங்களின் ஆணையோடும் அனுசரணையோடும் வந்த கடந்த ஆட்சியே (ரணில் அரசாங்கம்) இந்தச் சமூகங்களுக்கு எதையும் உருப்படியாகச் செய்யாதபோது தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவின்றி வந்தவர் எதையும் செய்வார் என்று எதிர்பார்க்கலாமா?

29. கோட்டபாய பெற்ற வெற்றி அடுத்த பாராளுமன்றத் தேர்தலை நோக்கிச் செலுத்துமா? அப்படியென்றால் அதிலே மூன்றில் இரண்டை பொதுஜன பெரமுன பெற்றால் அதைத் தொடர்ந்து என்னவெல்லாம் நடக்கும்? தமக்கு வாய்ப்பான முறையில் மாற்றியமைக்க மாட்டார்களா? மறுபடியும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி? 20 சரத்தின் மூலமாக மறுபடியும் மகிந்த அதிபராகப் போட்டியிடுவதற்கான சூழல் எல்லாம் உருவாகாதா?

30. ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம், ஊடக அச்சுறுத்தல், ஜனநாயகத்துக்கான நெருக்கடி அல்லது அச்சுறுத்தல் போன்றவற்றைப் பற்றியெல்லாம் அக்கறைப்படவில்லை என்றுதான் சிங்கள மக்களுடைய ஆதரவைப் புரிந்து கொள்ள முடியுமா?

31. இன ரீதியாகப் பிளவுண்டிருக்கும் சமூகங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

32. தமிழ் பேசும் மக்கள் ஒரு நிலைப்பாட்டோடும் சிங்கள மக்கள் இன்னொரு நிலைப்பாட்டோடும் இருந்தால் இலங்கையின் எதிர்காலம். சனங்களின் பாதுகாப்பு?

33. கோட்டபாயவின் வெற்றியையும் அவரையும் சர்வதேச சமூகம் எப்படி நோக்கப்போகின்றது?

சில குறிப்புகள் –

1.   சிறுபான்மையினரின் வாக்குகளும் ஆதரவும் தயவும் இல்லாமல் தாம் ஒரு தலைவரைத் தெரிவு செய்ய முடியும் என்பதைச் சிங்கள மக்கள் நிரூபித்திருக்கின்றனர். அப்படியென்றால், இது எதிர்காலத்தில் பாராளுமன்றத்தையும் அந்த வழியிலேயே உருவாக்கக் கூடுமல்லவா. அது பன்மைத்துவத்துக்குச் சவாலாகுமே!

2.   தமிழ் பேசும் மக்கள் – சிங்களத் தரப்பு என இரண்டு அலைவரிசை வெளிப்படையாகவே தோன்றியுள்ளது. இது போருக்குப் பிந்திய அரசியலுக்கு முற்றிலும் எதிரானது. ஆபத்தானது. போருக்குப் பிந்திய அரசியலானது பலரும் ஒரு மையத்தில் கூடிப் பேசக்கூடியதாக இருக்க வேண்டும். அது முரண்பாடுகளைக் களைவதாகவும் நல்லிணக்கத்துக்குரியதாகவும் பகை மறப்புக்கானதாகவும் இருப்பது அவசியம். இதை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறார்கள்?

3.   போர்க்குற்றவாளி, தண்டிக்கப்பட வேண்டியவர் என்று நீங்கள் சொன்னால், அதை நாம் ஏற்க மாட்டோம். அப்படிச் சொன்னாலும் அவரை நாம் எங்கள் தலைவர் என்றே ஏற்கிறோம் என்று சிங்களச் சமூகம் தமிழ் மக்களுக்குக் கூறியுள்ளது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *