கரோனா: நம்பிக்கையூட்டும் வூஹான்

உலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது.

சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்தச் செய்தி உலக நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. மரணமடைந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டிவிட்டது. கரோனா பாதித்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவின் பிறப்பிடமான சீனாவில் அதிகபட்சமாக 81 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். ஆனால் இத்தாலி பலி எண்ணிக்கையில் 7 ஆயிரத்து 500ஐ எட்டிவிட்டது. ஸ்பெயினிலும் பலி எண்ணிக்கை 3,600ஐ தொட்டு சீனாவை விஞ்சிவிட்டது.

கடந்த டிசம்பரில் வூஹானில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் தற்போதுதான் முதல் முறையாக அந்நகரில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அறிவித்துள்ளார்.

மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு, கரோனாவில் இருந்து மீண்டிருப்பதன் மூலம் வூஹான், உலக நாடுகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நாம் இப்போது மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்கிறோம், நிலைமை சீரடையப் போராடி வருகிறோம். அதே சமயம், இந்த நகரமும், நாடும், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை உலக நாடுகளுக்கு ஏற்படுத்துகிறது என்றும் டெட்ரோஸ் கூறினார்.

மேலும், முதியவர்களை இந்த தொற்று கடுமையாகத் தாக்கியது. இளைய வயதினரை மோசமாக பாதிக்கவில்லை. ஏராளமானோரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வைத்தது. அதே சமயம், இளைஞர்களுக்கும் இங்கே ஒரு தகவலைச்  சொல்ல விரும்புகிறேன். இளைஞர்களே நீங்கள் மட்டும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடவில்லை. உங்களையும் கரோனா தாக்கும், சில வாரங்கள் மருத்துவமனையில் வைக்கலாம், அவ்வளவு ஏன் உயிரையும் பறிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இளைஞர்கள் பலரும் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை பரப்பிவருகிறார்கள், வைரஸை அல்ல. கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி வரும் நிலையில், அந்த வார்த்தையை உலக சுகாதார அமைப்பு மாற்றியுள்ளது. நபர்களுக்கு இடையே இடைவெளியைப் பேணுமாறு வலியுறுத்துகிறது. அதன் மூலம் வைரஸ் பரவலைத் தடுக்கலாம் என்றும் எச்சரிக்கிறது.

அடுத்தகட்டமாக கரோனா மிகவும் பாதித்த ஹூபேய் மாகாணத்துக்குப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துப் போக்குவரத்துத் தடைகளும் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதே சமயம், கரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹானில் ஏப்ரல் 8-ம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வரவிருக்கிறது.

சுமார் இரண்டு மாதங்கள் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த வூஹான் ஏப்ரல் 8-ம் தேதி கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வர உள்ளது. மார்ச் 19ம் தேதி முதல் புதிதாக கரோனா தொற்று ஏற்படாததால், ஹுபேய் மாகாணத்துக்கு  கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் ஒவ்வொரு நாளும் இந்த மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அது தற்போது பூஜ்யமாகியுள்ளது. 

வூஹான் மாகாணம்தான் சீனாவிலேயே அதிகபட்ச பாதிப்பையும் உயிர் பலியையும் எதிர்கொண்டது. இங்கு மட்டும் 67,801 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 3,160 பேர் மரணம் அடைந்தனர். இதனால் ஜனவரி 23ம் தேதி முதல் வூஹான் முடக்கப்பட்டது. சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வீட்டுக்குள் வைக்கப்பட்டனர். போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன. விரைவில் இதே நிலையை ஒட்டுமொத்த ஹூபேய் மாகாணமும் அடைந்தது.

ஒரு பக்கம் கரோனாவுடன் சீனா போராடிக் கொண்டிருந்தபோது, நாடே உலகத்திடம் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டது. ஒரு பக்கம் கரோனா, மறுபக்கம் தொழில்கள் முடங்கி, பொருளாதார இழப்பு, உலக நாடுகளிடம் இருந்து ஒதுக்கப்பட்டது என பலமுனைப் போரை மிகச் சாமர்த்தியமாக எதிர்கொண்டது சீன அரசு. 

தற்போது கரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு, தொழில்கள் தொடங்கினாலும், உலக நாடுகளின் கதவுகள் அடைக்கப்பட்டதாகவே இருப்பதால், அது திறக்கும் வரை பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவே வேண்டும். மறுபக்கம் கரோனா பரவல் மேலும் தொடராமல், அதே சமயம் தொழில்களைத் தொடங்கவும் சீனா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதிகம் பாதிக்கப்படாத வடமேற்குப் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு, மீண்டும் மாணவ, மாணவிகள் வகுப்பறைகளை வந்தடைந்தனர்.

இன்றைய நிலையில், சீனாவில் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருப்பது நன்கு உறுதி செய்யப்படுகிறது. தற்போது சீனா இயல்பு நிலைக்குத் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

கரோனாவால் புரட்டிப் போடப்பட்ட சீனாவில் தற்போது எண்ணெய் உற்பத்தி, பெட்ரோகெமிக்கல், உலோகம் மற்றும் நிலக்கரி உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டது.

சமூக இடைவெளியல்ல

நாம் உடலளவில்தான் இடைவெளியைப் பேண வேண்டுமே தவிர, சமூகத்திடம் இருந்து இடைவெளியைப் பேண வேண்டாம். இதுபோன்றதொரு சிக்கலான நேரத்தில் நாம் மனநிலையை சீராக வைத்துக் கொள்வதும் அவசியம் என்று வலியுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு.

உடலளவில் இடைவெளியைப் பராமரித்துக் கொண்டே, சமூகத்திடம் பல்வேறு வகையில் தொடர்பு கொள்ள முடியும், மக்கள் உடலளவில் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு, மனதளவில் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய தருணம் இது என்றும் உலக சுகாதார அமைப்பின் அவசர கால நோய்ப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகிறார்.

கரோனா பாதிப்பு என்ற ஒற்றை வார்த்தையை நினைத்து அச்சப்படும் மக்கள், கரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கும் வூஹானை நினைத்து ஓரளவுக்கு நிம்மதி கொள்ளலாம். அதே விஷயத்தை மற்ற நாடுகளும், அரசுகளும் ஒரு ஊக்கமாகக் கொண்டு கரோனாவில் இருந்து மீள்வதற்கான வழிகளை இன்னும் வேகமாகக் கைகொள்ளலாம்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *