கை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்

கொரோனா, கூட்டுறவுக் கடைகளுக்குச் சனங்களை மறுபடியும் கொண்டு வந்து விட்டிருக்கு” என்று சொல்லிச் சிரித்தார் சண்முகம். ஒரு காலம் கூட்டுறவுச் சங்கத்தில் நல்லதொரு சேவையாளராகக் கொடிகட்டிப்பறந்தவர் சண்முகம். இப்பொழுது ஓய்வு பெற்றுக் கொண்டு விவசாயம் செய்கிறார். கொரோனா அபாயம் வந்து உலகே அடங்கிப் போயிருப்பதால் பொருட்களைப் பெறுவதில் நெருக்கடி என்ற நிலை உருவாகியுள்ளது. எப்போதையும்போல இந்த நெருக்கடியிலும் கூட்டுறவுக் கடைகளே கைகொடுக்க முன் வந்திருக்கின்றன. அதனால்தான் சனங்கள் மறுபடியும் சங்கக் கடைகளின் முன்னுக்குக் க்யூவில் நிற்கிறார்கள். காலம் எப்படி மாறி விட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவுச் சங்கங்களின் அவசியத்தைப்பற்றி நான் எழுதியபோது சிலர் கேட்டார்கள், “இனிக் கூட்டுறவுக் கடைக்கெல்லாம் சனங்கள் வருவார்களா? சனங்களுடைய வாழ்க்கை முறை மாறியதை நீங்கள் கவனிக்கவில்லைப் போலிருக்கு. அந்தக் காலம் மலையேறி விட்டதே. காலை ஒன்பது மணிக்குத் திறந்து நான்கு மணிக்கு மூடப்படும் கூட்டுறவுக் கடைக்கு எல்லோருக்கும் போக வசதிப்படாது. தனியார் கடையில் இந்தப் பிரச்சினையெல்லாம் கிடையாது. வேண்டிய வேளையில் விரும்பிய மாதிரிப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அலுவலகத்துக்குப் போய் வருவோருக்கு அவர்களுடைய நேரமே முக்கியம். அதுக்கு எது தோதுப்படுகிறதோ. அதையே விரும்புவார்கள். அதை விட தனியார் கடைக்கார்கள் கடன் வேறு கொடுப்பார்கள். கூட்டுறவுக் கடையில் இதற்கெல்லாம் சாத்தியமில்லை. இதை விடப் பொதி செய்யப்பட்ட முறையில் பொருட்கள் இருந்தால்தான் பலருக்கும் வசதியாக இருக்கும். அதையே பலரும் விரும்புகிறார்கள்” என்று.

கூட்டுறவுக்கடையைப் புறக்கணிப்பதற்கான நியாயங்களாக இவை இருந்தாலும் நிலைமை அவ்வாறில்லை. எனக்குத் தெரியப் பல கூட்டுறவுச் சங்கங்கள் தங்களுடைய விற்பனை நிலையங்களில் சிலவற்றையேனும் நவீன முறையில் மாற்றி வைத்திருக்கின்றன. Coop City என்ற பேரில் நகர்ப்புறங்களில் அவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி நகரில் மட்டும் இப்படி இரண்டு Coop City உண்டு. காலை 8.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை வேறு இயங்குகின்றன.

இவற்றில் பொதி செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமல்ல, ஓரளவுக்குப் பெரிய பல்பொருள் அங்காடி மற்றும் Super Market ல் கிடைக்கக் கூடிய அத்தனை பொருட்களும் இங்கே உண்டு. இவையும் ஒரு வகையில் சிறிய அளவிலான Super Market தான். எந்தப் பொருளையும் கட்டுப்பாட்டு விலையில் தாராளமாகப் பெற்றுக் கொள்ள முடியும். மரக்கறி, பழம் உட்பட. ஆனாலும் சனங்களுக்கு இந்தக் கடைகளுக்குச் செல்வதில் ஆர்வம் குறைவு. மிக மட்டுப்பட்டளவிலானவர்கள் மட்டும் Coop City களுக்குச் செல்வதைக் கண்டிருக்கிறேன்.

நவீனப்படுத்தப்பட்ட இந்தக் கடைகளுக்கே செல்லப் பஞ்சிப்படுவோர் எப்படி ஊர்களுக்குள்ளிருக்கும் பழைய முறையிலான சங்கக் கடைகளுக்குப் போகப்போகிறார்கள்? இதனால் பல சங்கங்கள் தங்கள் கிளைகளை பல இடங்களிலும் மூடி விட்டன. விற்பனை போதுமானதாக இல்லை என்பதால் கிளை முகாமையாளர்களுக்குப் போதிய சம்பளமும் கிடைப்பதில்லை. இதைத்தான் பொறுத்துக் கொண்டாலும் கடையைத் திறந்து வைத்துக் கொண்டு சும்மா தூங்கிக் கொண்டிருக்க முடியாதல்லவா.

இதன் விளைவாக எங்கள் தெருவிலிருந்த சங்கக் கடையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. சங்கக்கடையுடன் உறவு கொண்டிருந்தோருக்கு இது துக்கமான விசயம். கடையை நடத்துங்கள். நாங்கள் சிலராவது அதில் பொருட்களை வாங்குகிறோம் என்று சங்க நிர்வாகத்திடம் கேட்டுப்பார்த்தோம். அவர்களும் சம்மதித்தார்கள். ஆனால், என்னதானிருந்தாலும் குறைந்தளவுக்கேனும் வியாபாரம் நடக்க வேண்டும் அல்லவா. இதற்காக திறந்து மூடும் நேரத்தை அதிகரித்துப் பார்த்தார்கள். விற்பனை கூடுதலாக இருந்தால் அதற்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என்று முகாமையாளருக்குச் சொன்னார்கள். இதற்கென பாண், மரக்கறி, முட்டை உள்பட உள்ளுர் உற்பத்திகளையும் சேர்த்து விற்பனை செய்தார்கள்.

ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய முன்னேற்றமில்லை. பதிலாக முன்னரை விட நட்டமே அதிகரித்தது. மேலதிக பொருட்கள் நட்டத்தையே உண்டாக்கின. சனங்கள் அந்தளவுக்குப் பிடிவாதமாகக் கூட்டுறவுக் கடையைப் புறக்கணித்து அவமானப்படுத்தினார்கள்.

முன்பு அப்படியல்ல. அப்பொழுது கூட்டுறவுச் சங்கங்களுக்கென்று தனியானதொரு மவிசு இருந்தது. சங்கக்கடை மனேஜர் என்பது கூட மதிப்பானதொரு தொழிலாக இருந்தது. கல்யாணத்தின்போது மாப்பிள்ளைக்கு அது ஒரு சிறப்பு அடையாளமாகக் கூட இருந்ததுண்டு. மனேஜரோடு நட்பு வைத்துக் கொண்டால் தட்டுப்பாட்டுப் பொருட்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற அளவுக்கு அது ஒரு வலுமிக்க உத்தியோகம். இப்பொழுது அதெல்லாம் தலைகீழாகி விட்டது. வேறு கதியில்லாதவர்களே கூட்டுறவுச் சங்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றமாதிரி.

கூப்பன் காலத்தில் பங்கீட்டுப் பொருட்கள் சங்கக் கடைகளின் மூலமே விநியோகிக்கப்பட்டன. பிறகு நிவாரணப் பொருட்கள். இடையில் துணியை, எரிபொருளை எல்லாம் சங்கக்கடைகளே மையமாக நின்று பகிர்ந்தளித்தன. பின்னர் பாடசாலைகளுக்கான உணவுப் பொருட்களை கூட்டுறவுச் சங்கங்களே வழங்கிக் கொண்டிருந்தன. இடர் காலத்தில் எல்லாம் கூட்டுறவுச் சங்கங்களே சனங்களுக்கு ஆறுதலாக இருந்தன.

முக்கியமாக பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்காலத்தில் அதை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் பொறிமுறையும் அதற்கான கட்டமைப்பும் அதிகாரமும் கூட்டுறவுச் சங்கங்களுக்கே இருந்தன.

இதனால் கட்டுப்பாட்டு விலையில் ஓரளவுக்கு மக்கள் பொருட்களைப் பெறக் கூடியதாக இருந்தது. யுத்த காலத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் சமூகத்தின் உயிர் என்று சொல்ல வேணும். அந்தளவுக்கு அவற்றின் பங்களிப்பு முதன்மையாக இருந்தது.

யுத்த காலத்தில்தான் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மரணக் குழி தோண்டப்பட்டது என்பதையும் இங்கே நினைவு கொள்ள வேண்டும். இயக்கங்கள் தலையெடுக்கும் வரையில் கூட்டுறவுச் சங்கங்கள் சனங்களிடையே ஒரு புதிய பண்பாட்டியக்கமாக இயங்கி வந்தன. அப்போது மெய்யாகவே சங்கங்களை மக்களே இயக்கி வந்தனர். அன்று அவர்களுக்கு சங்கங்கள் பல வழிகளிலும் உதவியும் வந்தன. உணவுப் பொருட்கள், உடைகள் போன்றவற்றுக்கு மட்டுமல்ல, வேறு வழிகளிலும் சங்கங்கள் ஆதரவாக இருந்தன. வெங்காயச் சங்கம், நெல்லுச் சங்கம், கடற்சங்கம், விவசாயச் சங்கம், சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம், தென்னை – பனை வள அபிவிருத்திச் சங்கம் என பல விதமான சங்கங்கள் வேறு இருந்தன. ஒவ்வொரு சங்கமும் அவரவருக்கான உதவிகளைச் செய்து வந்தன. உற்பத்திகளுக்கு ஊக்கமளித்தன. பிறகு உற்பத்திகளை நியாய விலையில் கொள்வனவு செய்தன. தொழிலுக்கு இலகு கடன்களைக் கொடுத்தன. சனங்கள் சங்கங்களை தங்களுடைய உறவு போலக் கொண்டாடினர்.

இயக்கங்கள் வந்து ஒவ்வொரு சங்கத்திலும் கையை வைத்ததோடு கதை வேறு விதமாகியது. இதில் முக்கியமான பொறுப்பை வகித்தது புளொட் அமைப்பே. அப்பொழுது பெரும்பாலும் எல்லாச் சங்கங்களின் கஜானாவும் காலியாகின எனலாம். பிறகு புலிகளின் காலத்தில் தங்களுடைய தேவைகளுக்கேற்றவாறு அவற்றை ஒழுங்கமைத்தனர். அதற்கிசைவான நிர்வாகத்தை உருவாக்கினர். தலைவர்களை நியமித்தனர். சங்கங்களுக்கும் சனங்களுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்தது. ஆனாலும் யுத்த காலம் என்பது நெருக்கடிக் காலம் என்பதால், தவிர்க்க முடியாமல் பொருட்களின் விநியோகம் சங்கங்களின் வழியாகவே நடந்தது. அதோடு அரச கட்டுப்பாடில்லாத பகுதிகளுக்கான பொருள் விநியோகத்தை கூட்டுறவுச் சங்கங்களின் வழியாகவே செய்ய வேணும் என்ற நிலையிருந்ததால் சங்கங்கள் மையமாக இயங்கின. அதனால் தப்பிப்பிழைத்தன.

யுத்தத்துக்குப் பிந்திய சூழலில் உருவான நிலைமைகள் கூட்டுறவுச் சங்கங்களை இயங்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்றது. சங்கங்களின் உடமைகள், வளங்கள் எல்லாமே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தன. சில சங்கங்களின் வாகனங்கள், கடைகள், நிர்வாகப் பணிமனை, சொத்துகள் எல்லாம் அழிந்தன. இவற்றை மீள் நிலைப்படுத்திக் கொள்வதற்கான உதவிகள் போதுமானதாகக் கிடைக்கவில்லை. அரசாங்கமும் இதில் போதுமான கரிசனையை எடுக்கவில்லை. அரசியல் தலைவர்களிடத்திலும் கூட்டுறவுச் சங்கங்களைப் பற்றிய சரியான தெளிவோ போதிய அக்கறையோ இருக்கவில்லை. அவர்களே வேறு விதமாக பிஸினஸை ஆரம்பித்துள்ள நிலையில் இதற்கு எப்படி ஆர்வம் கொள்வார்கள்?

அப்படி அக்கறைப்பட்டவர்களும் சங்கங்களின் நிர்வாகத்தை தமக்குச் சாதகமாக வைத்திருக்க விரும்பினார்களே தவிர, சங்கங்களை வளப்படுத்தவோ, சன மயப்படுத்தவோ முயற்சிக்கவில்லை.

அரசாங்கத்தின் கூப்பன் முறை இல்லாமல் போனதும் பாடசாலைகளுக்கான உணவுப் பொருட்களை வேறு வழியில் விநியோகிக்கும் ஏற்பாடு நடந்ததும் சங்கங்களுக்கும் சனங்களுக்குமான உறவைக் குறைத்தது. நிவாரணத்தை சனங்கள் வேறு வழிகளில் பெறத் தொடங்கினார்கள். முக்கியமாக தொண்டு நிறுவனங்கள் இந்த இடத்தில் வேறு விதமாகச் செயற்பட்டன.

இதனால் சங்கங்களைச் சனங்கள் சீந்துவாரில்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சங்கங்கள் தம்மை எப்படித் தொடர்ந்தும் தக்க வைப்பது? எப்படித் தொடர்ந்து இயங்குவது என்று தெரியாமல் தத்தளித்தன. அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத நிலையில் பல சங்கங்கள் அப்படியே முடங்கின. சில மிகச் சிரமப்பட்டு இழுத்துக் கொண்டிருந்தன.

இதையிட்டே அந்தப் பதிவை எழுதினேன்.

அதில் சங்கங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவை எங்களுடைய வாழ்க்கையோடு எப்படி ஒன்றாகக் கலந்திருந்தன என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இனியும் கூட நெருக்கடிக் காலமென்று வந்தால் சங்கங்களே பொருத்தமான ஏற்பாடாக இருக்கும். சங்கங்கள் இல்லை என்றால் அனர்த்த காலத்தில் அல்லது நெருக்கடி காலத்தில் சாதாரண மக்களுக்கு எந்த ஆதரவுமிருக்காது, தனியார் துறையினர் பதுக்கலிலும் கொள்ளை லாபத்திலும் திளைப்பார்கள். சமூகம் மிக மோசமாகப் பாதிக்கும் எனச் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இதொன்றும் புதிய சேதியல்ல. ஆனால், அதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருந்தது என்பதே முக்கியமானதாக இருந்தது.

இந்தச் சூழலில்தான் 2016 – 2019 வரையில் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் விரிவுரையாளராகிய அகிலன் கதிர்காமர் கூட்டுறவுச் சங்கங்களை மீள் நிலைப்படுத்துவதில் ஆர்வம் கொண்டு செயற்படத் தொடங்கினார்.

சங்கங்களை பல்வேறு வழியில் அவர் புதுப்பிக்க நல்ல பல முயற்சிகளை எடுத்தார். வினைத்திறனுள்ள நிர்வாகத்தை உருவாக்குதல் தொடக்கம் புதிய புதிய வடிவங்களில் எல்லாம் சங்கங்களைத் திட்டமிட வைத்தார். முக்கியமாக கால மாற்றத்துக்கு ஏற்ற வகையில் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி சார்ந்து இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவற்றைப் பயிற்றுவித்தார். இதற்காகப் பெருமளவு நிதி ஊட்டத்தை பல்வேறு திட்டங்களின் வழியாக அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்தார். இப்படிப் பல காரியங்கள் நடந்து கொண்டிருந்தன.

இதனால் மெல்ல மெல்ல ஒவ்வொரு சங்கமும் மீள் நிலைக்குள்ளாகி வந்தன. குறிப்பாக உள்ளுர் உற்பத்திகளுக்கான ஊக்கம், சந்தைப்படுத்தலில் அக்கறை என அகிலனின் வழிகாட்டல்கள் இருந்தன.

இப்பொழுது கொரோனா வந்து சங்கங்களின் முன்னால் சனங்களை வரிசை கட்ட வைத்துள்ளது. இந்த வரிசை – கொரோனா வரிசை என்பது கவனக்கத்தக்கது.

இனியாவது சங்கங்களுக்கு சனங்கள் மதிப்பளித்தால் நல்லது. அவசர காலங்களில் – நெருக்கடி காலங்களில் சீரான உணவு மற்றும் பொருள் விநியோகத்துக்கு இன்றளவிலும் உள்ள ஒரே அமைப்புக் கூட்டுறவுக் கடைகள் மட்டுமே. இல்லையென்றால் பதுக்கலும் கறுப்புச் சந்தையும்தான் தலைவிரித்தாடும். அதைக் கட்டுப்படுத்துவது கூட்டுறவு ஒன்றே. எல்லாவற்றுக்கும் அப்பால் கூட்டுறவு என்பது மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கான ஒரு சிறந்த அமைப்பு. உற்பத்திக்கும் கொள்வனவுக்கும் சந்தைப்படுத்தல் மற்றும் சீரான விநியோகத்துக்கு ஒரு சிறந்த வடிவம்.

கூட்டுறவு என்ற சொல்லே எவ்வளவு அர்த்தமானது. அழகானது. அது ஒரு அழகிய பண்பாட்டின் வடிவம்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *