கரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது?

கரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார்.

உலகைப் பெரிதும் அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உயர்ந்த வண்ணம் உள்ளது. 

லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள கரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகளும் தாமதமாகவே, படிப்படியாகவே தெரிய வருகிறது. பொதுவாக கரோனா அறிகுறிகளாக முதலில் காய்ச்சல், அதன்பின் வறட்டு இருமல், கடும் தலைவலி, தொடர்ந்து சுவாசக் கோளாறுகள் இருக்கும். ஆனால், சாதாரண வைரஸ்களாலும்கூட மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கலாம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். 

மற்ற வைரஸ்கள் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினால் கரோனா வைரஸோ நுரையீரல் முழுவதையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஆறில் ஒருவருக்கு மட்டுமே: கரோனாவை ஒரு தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் மிகவும் சாதாரணமாகவே உள்ளதாக தெரிவிக்கின்றது. அதுமட்டுமின்றி, கரோனா பாதிப்புக்கு ஆளான 80% மக்கள் எந்தவொரு சிறப்பு சிகிச்சையும் இன்றி குணமடைவதாகவும், ஆறில் ஒரு நபர் மட்டுமே தீவிரமாக நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 

நுரையீரலில் பெரும் பாதிப்பை கரோனா ஏற்படுத்துவதனால்தான் மரணம் நேரிடுகிறது என்று கூறுகிறார் ஆஸ்திரேலியா ராயல் ஆஸ்ட்ராலேசியன் மருத்துவக் கல்லூரியின் தலைவரும், சுவாச நோய்களுக்கான மருத்துவருமான பேராசிரியர் ஜான் வில்சன்.

கரோனா நுரையீரலில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது? 

மருத்துவர் ஜான் வில்சன் இதுகுறித்துத் தெரிவித்திருப்பதாவது:

கரோனா பரவுவதை நான்கு நிலைகளாகக் கூறலாம். 

► ‘சப்-கிளினிக்கல்’ என்று சொல்லப்படும் வைரஸ் தொற்று இருப்பவர்கள். ஆனால், அவர்களிடம்  அறிகுறிகள் தென்படாது. 

► அடுத்ததாக மேல் சுவாசக் குழாயில் தொற்று ஏற்படுவது. தொற்று ஏற்பட்ட  நபருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அல்லது வெண்படல அழற்சி போன்ற லேசான அறிகுறிகள் இருக்கலாம்.

ஆனால், குறைவான அறிகுறிகளைக் கொண்டவர்கள்தான் மற்றவர்களைவிட அதிகமாக வைரஸைப் பரப்பும் தன்மை கொண்டவர்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதை அவர்களே உணர்ந்திருக்க மாட்டார்கள். 

► மூன்றாவதாக, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் மூலமாக பரவுவது. 

► நான்காவது, நிமோனியா அறிகுறிகளுடன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். 

வூஹானில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், 6% பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

வயதானவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்னைகள் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

கரோனா தொற்று, முதலில் இருமல் மற்றும் காய்ச்சலை உருவாக்கி இறுதியாக சுவாசப் பாதையை அடையும். அதாவது, நுரையீரலுக்கும் வெளிப்புறத்திற்கும் இடையில் காற்று செல்லும் பாதையில் வைரஸ் குடிபுகும். 

இதன் காரணமாக சுவாசப் பாதையில் வீக்கம் ஏற்படுகிறது. மேலும், நரம்புகளிலும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து, சிறு துகள்கள்கூட வாய்வழியாகத் தொண்டைக்குச் செல்லும்போது இருமல் ஏற்படுத்தும். 

ஆனால், இது அதிகமாகும்பட்சத்தில்,  வைரஸ் காற்றுப் பாதையில் இருந்து அதன் முடிவில் உள்ள வாயு பரிமாற்ற மையத்திற்குச் செல்லும். இறுதியாக நுரையீரலின் அடிப்பகுதியில் உள்ள காற்றுப் பைகளுக்குச் செல்லும். அப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், நிமோனியா அறிகுறிகள் அதிகம் தோன்றும். 

இதன் காரணமாக நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாத நிலை ஏற்படும். நுரையீரலுக்குத் போதிய ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் இதர உடலியக்க செயல்பாடுகள் தடைபடும்.

வழக்கமாக நுரையீரல், காற்றில் உள்ள ஆக்சிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு ஆகிய இரண்டையும் எடுத்துக்கொண்டு, அதில் ஆக்சிஜனை மட்டும் பிரித்து உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி உடல் இயக்க செயல்பாட்டுக்கு உதவுகிறது. 

ஆனால், கரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்காததால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கிறது. உடலின் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு  கார்பன் டை ஆக்சைடை அகற்றும் வேலையை குறைக்கிறது. இந்த ஒருகட்டத்திற்கு செல்லும்போது தான் மரணம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார். 

ஆஸ்திரேலியாவின் ‘நுரையீரல் அறக்கட்டளை’ அமைப்பின் தலைவரும், முன்னணி சுவாச மருத்துவருமான பேராசிரியர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் கூறுகிறார்: 

கரோனாவைத் தடுக்கும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நிமோனியாவுக்கான அனைத்து வகையான மருந்துகளையும் முயற்சித்து வருகின்றனர். இதற்கான மருந்தை விரைவில் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம். 

தற்போது நுரையீரலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கிறோம். அதனை பராமரிக்கும்போது நுரையீரல் செயல்பாடுகள் சரியாக இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், கரோனா நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். சில சூழ்நிலைகளில் இதையும் தாண்டி சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டியிருக்கும். 

எங்களுக்குத் தெரிந்த பெரும்பாலான வகையான நிமோனியா பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் அனுமதித்து  ஆண்டிபயாடிக் மருந்துகளை  அளிக்கிறோம். ஆனால், கரோனாவுக்கு எதிர்ப்பு மருந்துகள் மட்டும் போதாது. இது நிமோனியாவை விட வித்தியாசமானது. கரோனா, நிமோனியாவை விட கடுமையானதாக இருக்கலாம் என்பதற்கு தற்போது பல சான்றுகள் உள்ளன. 

எனவே, கரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால், சமூக இடைவெளியைப் பின்பற்றி நம்மையும், நம்மை சார்ந்தோரையும் கரோனாவில் இருந்து காப்போம்.  

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *