இதுவரை நடாத்திய கற்பனைக் கதையாடல்கள் போதும்! இனிமேலாவது யதார்த்தமான உரையாடல்களை தொடங்குவோமா?

இலங்கையில் இம் மாதம் 16ந் திகதி இடம் பெற்ற தேர்தலில் புதிய ஜனாதிபதியாக திரு கோத்தபாயா ராஜபக்ச அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் தனது பதவியேற்பு வைபவத்தை சிங்கள பௌத்த மக்களின் புனித நகராகவும், சிங்கள பௌத்த தேசத்தின் தலைநகராகவும், ‘மகாவம்ச’ இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘துட்டகைமுனு-எல்லாளன் போர்’ நடைபெற்ற இடமாகவும் அமைந்துள்ள அநுராதபுரத்தில் கடந்த 17ல் நடாத்தி முடித்துள்ளார். அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆற்றிய தனது பதவியேற்புரையில் “சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டும் வெற்றி பெறுவேன் என்று எனக்குத் தெரியும். வேண்டுகோள் விடுத்தும் தமிழ் முஸ்லீம் மக்கள் எனக்கு ஆதரவு தரவில்லை. நான் எனக்கு வாக்களித்த -வாக்களிக்காத அனைவருக்கும் உரிய ஜனாதிபதியாகும். நாட்டு மக்கள் அனைவரையும் என்னுடன் ஒத்துழைக்குமாறு  வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ‘வெறுப்பு’ என்கிற ஒரேயொரு கண்ணோட்டத்திலேயே தங்கள் வாக்குளைப் போட்டுள்ளனர். எவருக்கும் ஆதரவாக வாக்களிக்கவில்லை. அது மட்டுமல்ல தங்களின் அரசியல் அபிலாசைகள் என்ன என்று கூட சிந்திக்கவில்லை. எந்த வேட்பாளரதும் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் பரிசீலித்துப் பார்க்கவும் இல்லை. அதே சமயம் சிங்கள மக்கள் அவர்களது வாக்குகள் மூலம் தங்களின் பாதுகாவலர் கோத்தபாயா ராஜபக்ச தான் என்பதை மிகவும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் பலர் ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படல் வேண்டும்’ என வலியுறுத்தப்பட்ட ஒவ்வொரு சமயத்திலும் ‘அது நீக்கப்பட்டால் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பாதிக்கப்படும்’ என்கிற ‘கட்சி நலன் மட்டும் கருதும் வாதத்தை’ முன்னிறுத்தி வந்தனர். இத் தேர்தல் அவர்களுடைய வாதத்தைச் செல்லாக்காசாக்கி விட்டுள்ளது. 
இந்த அரசியல் சூழலில் அரசியல் தரகர்கள் ஆளுக்காள் உணர்ச்சிகளைத் தூண்டும் அறிக்கைகளும், கோரிக்கைகளும் விடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த உணர்ச்சியைக் கிளறும் அரசியல் தான் இன்றைய எமது கையறு நிலைமைக்குக் காரணம். கடந்த கால முடிவுகள் யாவுமே உணர்ச்சியின் உச்ச வரம்பில் நின்று எடுக்கப்பட்டவைகளே. அதனால் தான் இன்று அடுத்து என்ன நடக்குமோ? எப்படி இருக்குமோ? என்ற அச்சமும் அடக்கப்பட்டு விட்டோம் என்ற ஒரு மனோநிலையும் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதனால் வானதூதர்கள்(ஏகாதிபத்திய) வந்து காப்பாற்ற மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. 
இத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இப்போதாவது தமிழ் மக்கள் உணர்ச்சி வசப்படுவதை நிறுத்திவிட்டு தங்களைச் சுற்றி உள்ள புதிய சூழலை, யதார்த்தத்தை உணர்வு பூர்வமாக நிதானத்துடன் அணுகி ஆராயந்து கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரம் படைத்த புதிய ஜனாதிபதி தனக்கு இசைவான ஒரு அரசாங்கத்தை தற்காலிகமாவோ அல்லது அடுத்த பாராளுமன்றத் தேர்தல் மூலமாகவோ ஏற்படுத்தப் போவது நிதர்சனமானதொன்று. அதில் கேள்விக்கிடமில்லை. சர்வதேச சமூகம் அவருடன் தான் தங்களது தொடர்புகளை, வர்த்தக நடவடிக்கைகளை, பல தரப்பட்ட ஒப்பந்தங்களை ஏற்படுத்தப் போகின்றன. இலங்கையின் எல்லைக்கப்பால் இருந்து எவரும் இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக மானசீகமாக அல்லது உண்மையாக இது வரை சிந்தித்துச் செயற்பட்டது கிடையாது. இனிமேலும் சிந்திக்கவோ, செயற்படவோ மாட்டார்கள். இது கடந்த கால படிப்பினை. 
இந்த யதார்த்தத்தை தமிழர்களாகிய நாம் நன்கு உணர்ந்து அதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டு எம்மிடம் கையில் உள்ளதை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? எது செய்யக் கூடாது? என்பவை பற்றி ஒரு ஆழ்ந்த, பரந்த பரிசீலனை செய்ய வேண்டும். அறிக்கைகளுக்கும், செய்திகளுக்கும் காது கொடுக்காது கள நிலைமையை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும். 
‘சிங்கள சிறீ’ எதிர்ப்பில் ஆரம்பித்த எமது அரசியல் பயணம் சீரழிந்த நிலையைத் தான் விட்டுச் சென்றுள்ளது. இன்று சிங்களமும் தமிழும் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுகின்றது. அதே போல் இன்றும் நாட்டில் ஏதாவது ஒரு தீப்பொறியைப் பற்ற வைக்க முற்படுகின்ற சக்திகளை இனம் கண்டு அவர்களை நிராகரிக்க வேண்டும். 
இத் தேர்தலில் இடம் பெற்ற ‘வாக்களிப்பு வடிவம்’ எவரும் எவருக்கும் எதிரான அதாவது பரஸ்பரம் சராசரிச் சிங்கள மக்களும் சராசரிச் தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் எதிராக செயற்பட்டதற்கான அர்த்தமோ, அடையாளமோ, அறிகுறியோ அல்ல. மாறாக இரு தரப்பினரும் அடிப்படையில் ஒரு வகை ‘அச்ச உணர்வு’ ஒன்றுடன் மட்டுமே தங்கள் வாக்குளைப் பயன்படுத்தியுள்ளனர். ஆம். இரு தரப்பினரும் வன்முறை அரசியலை நிராகரித்துள்ளனர். எவரும் சமூக பொருளாதார காரணிகளுக்காக வாக்களிக்கவில்லை. 
ஆனால் இன்று நாட்டின் சகல மக்களுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகளுக்கு அப்பால் அவர்களது நாளாந்த வாழ்வில் தாக்கத்தைச் செலுத்தும் பொதுவான பிரச்சனைகள் நிறையவே உள்ளன. உணவு, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், தொழில், வேலை வாய்ப்பு ஆகிய அன்றாடப் பிரச்சனைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அடிப்படைகளாக நாட்டின் பொருளாதாரக் கட்டுமானம் அதன் வளர்ச்சி அபிவிருத்தி என்பன அடங்கியுள்ளன. இனிவரும் காலங்களில் இவை தொடர்பான அணுகுமுறைகளில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து செயற்பட வேண்டும். அதனூடாகவே நாம் தற்போது காணப்படும் ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் ஏற்படுத்தப்படக் கூடிய நெருக்கடிச் சூழலைத் தவிர்த்து தற்போது நலிந்த நிலையில் உள்ள ஜனநாயக இடைவெளியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தமிழராகிய நாம் இது வரைபகை முரண்பாடு என்ற பாதையிலேயே பயணித்து வந்துள்ளோம். அப் பயணம் எம்மை எங்கே கொண்டு வந்து விட்டுள்ளதையும் இன்று காண்கிறோம். இன்று முன் எமக்கு உள்ள சாத்தியப்பாடான, கட்டாயம் மேற் கொள்ள வேண்டிய, தவிர்க்க முடியாத ஒரேயொரு பயணம் நட்பு முரண்பாடுஎன்ற பாதையே ஆகும். கொம்பு சீவி விட்டு அதில் ஆதாயம் தேடும் அரசியல் பிராணிகள் இதற்கு ‘அடங்கிப் போதல்’ என வியாக்கியான விளங்கங்கள் கொடுக்கக் கூடும். ஆனால் இந்த அணுகுமுறை தற்போதுள்ள(கடந்த ஆட்சியின் பயனான) அரசியல் வெளிப் பரப்பைப் பாதுகாத்தபடி ஒரு ஆரோக்கியமான நம்பகத்தன்மையான உரையாடலை ஆரம்பிப்பதன் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டடையக் கூடிய ஒரு புறநிலைச் சூழலை உருவாக்கும் பொறிமுறையாகும். 
எம்முடைய இந்த ‘நட்பு முரண்பாடு’ என்னும் அணுகுமுறை ஒன்றே இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக சிங்கள மக்கள் மனங்களில் காலாகாலமாக விதைத்து வைக்கப்பட்டிருக்கும் எங்களைப் பற்றிய, எங்களது பிரச்சனைகள் பற்றிய, எங்களுடைய கோரிக்கைகள் பற்றிய சந்தேகங்களை அகற்றக் கூடிய சக்தி வாய்ந்ததாகும். இதன் ஊடாகவே, இந்த பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையிலேயே நாளைய எமது சந்ததிகள் இலங்கையில் சுதந்திரமாக வாழ்வதற்கான அரசியல் கட்டமைப்பையும் அதற்குதவும் அரசியல் கலாச்சாரத்தையும் ஏற்படுத்த முடியும். இதில் நாம் தவறிழைத்தோமானால் வரலாறு எம்மை மன்னிக்காது.
-குடாநாடான்-(19.11.2019ல் எழுதப்பட்டது).

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *