குறைவான வாக்குகளை பெற்றுக்கொண்டமையே தோல்விக்கு காரணம்…

சஜித் பிரேமதாஸவின் வெற்றியை தடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் சிறிகொத்தவுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில், ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலி;ல் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நிறுத்துவதற்கான யோசணையை தானே முன்வைத்ததாக தெரிவித்துள்ள அவர், சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கு தன்னால் பாதகம் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கும் கருத்தினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் வடக்கு, கிழக்குக்கான பொறுப்பினை தான் ஏற்றுக்கொண்டதாகவும், அதன்மூலம் அதிகளவான வாக்குகளை தன்னால் பெற்றுக்கொடுக்க கூடியதாக அமைந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக ஏனைய பகுதிகளில் குறைவான வாக்குகளை பெற்றுக்கொண்டமையே தோல்விக்கான காரணமாக அமைந்தது.

இதேநேரம், சிங்கள மற்றும் பௌத்த அமைப்புக்களின் ஆதரவு இல்லாமல் போனது.

இவ்வாறனதொரு நிலைமை இதற்கு முன்னர் கட்சிக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் எந்த பலனும் ஏற்படபோவதில்லை.

அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் இருப்பின், கட்சி கூட்டத்தில் அது தொடர்பில் விவாதித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

கட்சியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, கட்சிக்கான புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்வதற்கான காலம் ஏற்பட்டுள்ளது.

புதிய கொள்கைத்திட்டம் ஒன்றை முன்வைத்து அந்த தலைவரிடம் பொறுப்பினை கையளிக்க வேண்டும்.

தவறு ஏதேனும் நிகழ்ந்தால் அது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை தவிர்த்து, அந்த தவறு இடம்பெற்றதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும்.

அதன்பின்னர் அதனை திருத்திக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *