புதிதாய் பேசுவோம் வாருங்கள் – – சேகுதாவூத் பஸீர்


 
1)
கோட்டபய ராஜபக்சவை சிங்களவர்களின் பயமே ஜனாதிபதியாக்கியது. இது மக்கள் தீர்ப்புத்தான் ஆனால்; சாதாரண ஊடகர்கள் எழுதுவது போல மகேசன் தீர்ப்பு அல்ல. இது சிங்கள மக்களின் தீர்ப்பு மட்டுமே ஆகும். கோட்டா ஜனாதிபதியானதும் சிங்களவர்களின் பயம் அகன்றுவிட்டிருக்கக்கூடும்.

சிறுபான்மையினரின் அரசியல்வாதிகளாலும் தமிழ் மொழி ஊடகங்களாலும் ஊட்டப்பட்ட தமிழ் பேசும் மக்கள் கொண்டிருக்கும் பயம் இன்னும் அகலவில்லை; மாறாக இரட்டிப்பாகி இருக்கவும் கூடும்.

2)
கோட்டா அவர்கள் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்று 24 மணி நேரம் ஆகுமுன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு பறந்தோடி வந்து ஜனாதிபதியை சந்தித்து இந்திய பிரதமர் மோடியின் வாழ்த்தையும்,டில்லி வருமாறு விடுத்த அழைப்பையும் கையளித்துச் சென்றுள்ளார். டில்லி வருவதற்கு ஜனாதிபதி சம்மதித்து எதிர்வரும் 26 ஆம் திகதி அங்கு செல்லவுள்ளார். இது புதிய அரசின் முதலாவது இராஜதந்திர நகர்வாகும். அதாவது இந்தியாவின் அவசரக்குடுக்கை போக்குக்கு உடன்பட்டதன் மூலம் இலங்கை வல்லரசுகளின் தலையீட்டை மறுத்து நட்பை ஏற்கும் தனது இராஜதந்திர அணுகுமுறையின் தன்மையை வெளிக்காட்டியுள்ளது.

இவ்வாறே; இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்து தனது நாட்டு ஜனாதிபதியின் வாழ்த்தையும், பீஜிங்க்குக்கு வருகை தருமாறு விடுத்த அழைப்பையும் விடுத்துள்ளார்.ஆனால்சீன தூதுவர் நீங்கள் எம் நாட்டுக்கு வருவதற்கு அவசரம் வேண்டாம், இங்குள்ள உங்களது அத்தியாவசிய உடனடி நிர்வாக வேலைகளை முடித்த பின்னர் வாருங்கள், ஆவலோடு காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இது, இந்தியாவின் எல்லைப்புற நாட்டுடனான அவசர உறவை முந்திக்கொண்டு செய்தல் என்ற இராஜதந்திர உரிமைக்கு சீனா கொடுத்துள்ள மரியாதையாகும். இந்த சீனாவின் மதிப்புமிகு இராஜதந்திர அணுகுமுறையின் பெறுபேற்றை எதிர்காலத்தில் காணலாம்.

3)
இனி, இந்துமாக்கடல் பிராந்தியத்தின் பூகோள அரசியல் என்பது இங்குள்ள நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளூடாகத்தான் தீர்மானிக்கப்படும்.ஆகவே- இலங்கையில் குறுந்தேசியவாத இனத்துவ அரசியல் செய்யும் சிறுபான்மைக் கட்சிகள் புதிய சூழ்நிலைகளைக் கருத்தில் எடுத்து புதிய வியூகங்களை வகுத்தல் காலத்தின் தேவையாகும்.

3)
இலங்கை முஸ்லிம்கள் மலேசியாவில் வாழும் சிறுபான்மை சீன சமூகம் பின்பற்றும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளைப் பின்பற்றவேண்டும்.மலேசிய சீனர்கள் அங்குள்ள ஆட்சியமைக்கும் தகுதி பெற்ற முஸ்லிம் பெரும்பான்மைக் கட்சியையே ( UMNO) நீண்டகாலமாக ஆதரித்துவந்தனர்.இதனால் இன்றுவரை அவர்களே மலேசிய வணிகத்தில் கணிசமான அளவு ஆதிக்கத்தை செலுத்துகின்றனர்.

2018 இல் மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் சீனர்கள் மலேசிய பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கமைவாக மாற்றத்துக்காக வாக்களித்ததை போன்று இலங்கை முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சிங்களவர்களின் விருப்பத்துக்கமைவாக நடந்துகொள்ளவில்லை. மலேசியச் சீனர்களின் அரசியல் கட்சிகளுடைய தலைவர்களைப் போல நுண்ணறிவுள்ள அரசியல் தலைவர்கள் – அஷ்ரஃபுக்கு பிற்பட்ட காலத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை என்பதே இதற்கான காரணமாகும்.

மலேசியாவில் பூமி புத்ர(மண்ணின் மைந்தர்) என்ற மலேசிய முஸ்லிம்களை மட்டும் முன்னேற்றும் பொருளாதாரத் திட்டப்பணி அந்நாட்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட போது அங்குள்ள சீனத் தலைவர்கள் அத்திட்டத்துக்கான ஆதரவை வழங்கினர்.இத்திட்டம் இனவாதமானது என்று அத்தலைவர்கள் கொதித்தெழவில்லை.இந்த தூர நோக்கான முடிவினால் இன்றுவரை மலேசிய பொருளாதாரத்தின் ஆணிவேர் மலேசிய சீனர்களின் கைகளிலேயே உள்ளது.

காலையில் கண்விழித்த பின் தினகரன் பத்திரிகையைத்தானும் வாசிக்காத அல்லது மும்மொழி பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை மட்டும் வாசிக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றிருக்கும் தலைவர்களை மாற்றாமல் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதூர்காலத்தில் சுமூக வாழ்வுமில்லை சமூகவாழ்வுமில்லை.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *