ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : ‘கூட்டமைப்பு தமிழ் மக்களை ஒரு ஆட்டு மந்தைக் கூட்டம் போலவே மேய்த்திருந்தது’ – எதிர்வினை (வி. சிவலிங்கம் )

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்
‘கூட்டமைப்பு தமிழ் மக்களை ஒரு ஆட்டு மந்தைக் கூட்டம் போலவே மேய்த்திருந்தது’
(பத்தியாளர் யதீந்திரா)

எதிர்வினை
(வி. சிவலிங்கம் )

கடந்த 16-11-2019ம் திகதி இலங்கைத் தேசம் தழுவிய ரீதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் வெளிவந்துள்ளன. இம் முடிவுகள் குறித்து மேற்குறிப்பிட்ட பத்தியியாளர் வெளியிட்டுள்ள அபிப்பிராயங்கள் தமிழ் வாக்காளர்களை மிகவும் பிற்போக்கு நிலையில் வைத்து அணுகப்பட்டுள்ளதாகக் கருதியதால் இவ் எதிர்வினை தரப்படுகிறது.

முதலில் ஜனாதிபதித் தேர்தல் என்பது நாட்டின் அரசியல் சட்டத்திற்கு அமைவானதாகவும், ஜனநாயக செயற்பாட்டின் அங்கமாகவும் கொள்ளுதல் அவசியமானது. இத் தேர்தலில் நாட்டின் பிரதான சமூகங்கள் அதிக அளவில் பங்களித்துள்ளதோடு, தேசிய அளவில் தத்தமது சமூகங்களின் நிலைப்பாட்டினையும் தெளிவாகக் காட்டியுள்ளன. இந் நிலையில் தமிழ் மக்களைத் தனியாகப் பிரித்து அம் மக்கள் அளித்துள்ள வாக்குகளைத் தனியாக விமர்சனம் செய்வது பொருத்தமானது அல்ல. ஏனெனில் புதிய ஜனாதிபதிக்கு எதிராக தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லீம், மலையக மக்களும் பெருமளவாக வாக்களித்துள்ளனர். இந் நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் தனியாகப் பிரித்து அதற்கு விளக்கம் அளிப்பது அல்லது தேர்தலில் கூட்டமைப்பின் வழிநடத்தலே காரணம் என முழுமையான தேர்தல் பின்புலங்களை கவனத்தில் கொள்ளாமல் தெரிவிப்பது காத்திரமான விமர்சனமாக அமைய முடியாது.

அவரது பத்தியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் வாசகனைத் தவறாக வழிநடத்திச் செல்ல எடுத்த முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது. ஒருவகைப் பிரச்சார உத்தியென்றே கொள்ளவேண்டும். அக் கட்டுரையில் கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சார நெடி காணப்பட்ட போதிலும். மறு பக்கத்தில் அக் கட்சியினர் தமிழ் மக்கள் மத்தியில் காத்திரமான பலத்தைக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்வதையும் காண முடிகிறது. இங்கு கூட்டமைப்பினரின் அரசியலை விமர்ச்சிப்பது என்பதை விட நேர்மையான விமர்சனம் அவசியம் என்பதே பிரதான நோக்கமாகும். இரண்டு அல்லது அதற்கு மேலான பல முரண்பட்ட சிந்தனையின் வெளிப்பாடகவே கட்டுரையின் கருத்துக்கள் உள்ளன.

உதாரணமாக,
‘ சஜீத் பிரேமதாஸ வெற்றி பெறப் போவதான ஒரு தோற்றமே தமிழ் மக்களுக்குக் காண்பிக்கப்பட்டது. அதனை நம்பியே தமிழ் மக்களும் அதிகமாக வாக்களிப்பில் கலந்துகொண்டு சஜீத் பிரேமதாஸவை ஆதரித்தனர். ஒரு வேளை சஜித் பிரேமதாஸவின் வெற்றி வாய்ப்பு தொடர்பில் சந்தேகம் இருக்குமாயின் தமிழர்கள் இந்த அளவிற்கு வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள். சஜீத்தின் வெற்றி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கூட்டமைப்பும், அதற்கு ஆதரவானவர்களும் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.’

மேற்குறித்த கருத்துக்கள் தமிழ் மக்களை முற்றிலுமாக கூட்டமைப்பின் வழிகாட்டுதலுக்குள் இருப்பதான தோற்றம் காட்டப்படுகிறது. மக்கள் சஜித்திற்கு ஆதரவாக செயற்பட்டார்களா? அல்லது கோதாவைத் தோற்கடிக்க எண்ணினார்களா? என்பதே பிரதான கேள்வியாகும். ஆனால் கட்டுரையாளர் சஜீத் பற்றியே கவனத்தைச் செலுத்தியுள்ளார். சஜீத் வெற்றி பெறுவதான தோற்றப்பாடு தமிழ் மக்களுக்கு இருந்தது என்பதை விட கோதா தோற்கடிக்கப்படவேண்டும் என்பதே தோற்றப்பாடாக இருந்தது. சிங்களப்பகுதி நிலவரங்கள் குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் குழப்பநிலை காணப்பட்டபோது தமிழ் மக்கள் எவ்வாறு சஜீத் சிங்கள மக்களால் காப்பாற்றப்படுவார் என எண்ண முடியும்? கூட்டமைப்பினரின் வேண்டுகோளை மக்கள் ஏற்றார்கள் எனில் கூட்டமைப்பின் வாக்கு வங்கி வெவ்வேறு தேர்தல்களிலும் ஏன் குறைந்து செல்கிறது? கூட்டமைப்பிலிருந்து வெளியேறி பல்வேறு அமைப்புகள் ஏன் தோற்றம் பெறுகின்றன? தமிழ் மக்கள் மத்தியிலே சுயமான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. கூட்டமைப்பினால் அதற்கு வெளியில் செல்ல முடியாது. எனவே தமிழ் மக்களின் கருத்திற்கு ஏற்ற வகையில் கூட்டமைப்புத் தனது நிலைப்பாட்டை எடுப்பதாக கொள்ள முடியுமே தவிர கூட்டமைப்பின் மகுடியில் மக்கள் ஆடுவதாகக் கொள்ள முடியாது. கூட்டமைப்பிற்கு மாற்றான நம்பிக்கை தரும் அரசியல் தலைமை இல்லாத நிலையில் மக்கள் கூட்டமைப்பின் வழியில் செல்வது தவிர்க்க முடியாதது. அதன் அர்த்தம் கூட்டமைப்பினர் பொருத்தமான தலைமையை வழங்குவதாக கொள்ள முடியாது.

சஜீத் வெற்றி பெறப் போவதான ஓர் தோற்றப்பாட்டினை கூட்டமைப்பு ஏற்படுத்தியது என்பதை விட கோதபய தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, நாட்டின் இதர தேசிய சிறுபான்மை இனங்களும் தெளிவாகவே உணர்ந்திருந்தன. இது எவ்வாறு கூட்டமைப்பின் வித்தையால் ஏற்பட்டது? 2015ம் ஆண்டில் எவ்வாறான அரசியல் புறச் சூழல் நிலை காணப்பட்டதோ அவ்வாறான நிலையே சிறுபான்மையினர் தொடர்பாக 2019 இலும் காணப்பட்டது.

கம்பன் கழக விவாத நிகழ்வில் ஊடகவியலாளர் ஒருவர் சஜீத்தை ஆதரிப்பது சரியானது எனக் குறிப்பிட்ட போது அங்கிருந்த அனைவரும் கரகோஷம் செய்தனர். அவர்கள் அனைவருமே யாழ். மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த படித்த சமூகத்தினர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் வினோதமானது. ஏவ்வாறு அங்கு சமூகமளித்த அனைவரையும் மத்தியதர வர்க்கத்தினர் எனக் கணித்தார்? படித்த மத்தியதர வர்க்கத்தினர் சுயாதீனமாக சிந்தித்தச் செயலாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதா? அல்லது அவர்களும் பத்தியாளர் குறிப்பிடுவது போல மந்தை ஆடுகளா? இவ்வாறு தாம் வாழும் சமூகத்தை ஏளனமாக கிண்டல் செய்வது, மந்தை ஆடுகளுக்கு ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமான அணுகுமுறையாக அமையாது. பத்தியாளர் தம்மை உயர் மட்டத்தில் வைத்து அணுகுவது முறையான விமர்சனமும் அல்ல. அக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருமே யாழ். மத்தியதர வர்க்கத்தினரைச் சார்ந்தவர்கள் என அடித்துக் கூறுகிறார். அவர் இம் முடிவிற்கு எந்த அடிப்படையில் சென்றார்? நாட்டின் பிரச்சனைகளை மிக ஆழமாக புரிந்து செயற்படும் சமூகப் பிரிவாக மத்தியதர வர்க்கம் கருதப்படுகிறது. சாமான்ய மக்களைவிட பிரச்சனைகளை முன்கூட்டியே புரிந்து செயற்படும் பிரிவினராகும். இம் மக்களே கீழ்மட்ட மக்களின் கருத்துக்களை மாற்றவும், அம் மக்களை மேலே இழுத்துச் செல்லும் ஊக்கியாகவும் உள்ளனர்.

இக் கட்டுரையில் கோட்டபயவின் வெற்றிக்கான காரணங்களாக மூன்று அம்சங்களைத் தெரிவித்து, அவற்றின் அடிப்படையில்தான் அவரின் வெற்றியை மதிப்பிடவேண்டும் என்கிறார். இம் மூன்று அடிப்படைகளுக்கு வெளியில் செல்ல முடியாது என்பது போன்ற விவாதத்திற்குள் செல்கிறார். சிங்கள மக்கள் அவரால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்று பிரிவிற்குள் அடங்குவதாகக் கூறுகிறார். புரிந்து கொள்ளவே முடியவில்லை. நடைபெற்ற தேர்தலின் பின்னணிபற்றி அவரின் கவனம் செல்லாதது வியப்பானது. இத் தேர்தல் நாட்டின் அடிப்படை அரசியல் யாப்பின் அடிப்படையில் நடத்தப்பட்டது. அரசியல் யாப்பு என்பது பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியின் அடிப்படையாகும். தேர்தல் என்பது நீண்ட ஜனநாயக செயற்பாடுகளின் ஓர் பிரதான அங்கமாகும். தேர்தல் மட்டும் ஜனநாயக செயற்பாட்டை உறுதி செய்வதில்லை. ஓர் பொருளின் உற்பத்தியின் தரம் என்பது முடிவுப் பொருளால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் செயற்பாடு கண்காணிக்கப்படுகிறது. அதுவே முடிவுப் பொருளின் தரத்தைத் தீர்மானிக்க உதவுகிறது. தேர்தலும் அவ்வாறானது. தேர்தலுக்கு முதலுள்ள செயல்முறைகளே தேர்தல் முடிவுகளின் தரத்தை நிர்ணயிக்கின்றன. நாட்டின் ஜனநாயகக் கட்டுமானம், கட்சி அரசியல்முறையில் காணப்படும் ஜனநாயகத் தன்மை, மக்களை அரசியல் மயப்படுத்தும் முறைமை, ஊடகங்களின் பங்களிப்பு, தேர்தலில் பணம் வகிக்கும் பங்கு என பல அம்சங்கள் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கின்றன. தேர்தல் என்பது ஓர் நீண்ட செயற்பாட்டின் ஓர் அங்கமே தவிர அது முடிவல்ல. ஆனால் பத்தியாளர் தேர்தலின் முடிவே முடிவானது என்கிறார். சிங்கள பெரும்பான்மைக்குள் உள்ள பெரும்பான்மையினர் இத் தேர்தலின் முடிவை நிர்ணயித்துள்ளனர். இம் முடிவை ஜனநாயகம் என்பதா? அல்லது பெரும்பான்மையினரின் தேர்தல் சர்வாதிகாரம் என்பதா?

ஆனால் பத்தியாளர் அவற்றின் எதனையும் அடையாளம் காணவில்லை. அவர் கூறும் காரணங்கள் இவ்வாறு அமைகின்றன.

  1. போரின் வெற்றியின் சொந்தக்காரர் அவர். முதன்முதலாக தமக்காக வாக்குக் கேட்கிறார். அவருக்கு வாக்களிக்கவேண்டியது தமது கடமை என ஒரு தொகுதி சிங்கள மக்கள் நிச்சயம் கருதியிருப்பர்.

இந்த அனுமானத்திற்கு அவர் சென்றதற்கான ஒரு உதாரணத்தையம் முன்வைக்கவில்லை. அவ்வாறான சாட்சியம் எதனையும் முன்வைக்காமல் அது ஒரு முக்கிய காரணம் என அடித்துக்கூறுவது எவ்வகையில் பத்திரிகைத் தர்மம்? குறைந்தபட்ச ஆதாரம் இல்லாமல் அவ்வாறு கூறுவது நியாயமானதா? 2005ம் ஆண்டில் மகிந்தவை அதே காரணங்களால்தான் பதவியில் அமர்த்தினார்கள் எனப் பொதுவான அபிப்பிராயம் உண்டு. 2015ம் ஆண்டு மக்கள் ஏன் அவரைத் தோற்கடித்தார்கள்? போரின் வெற்றியை யார் பொறுப்பேற்பது? மகிந்தவா? கோதபயவா? அல்லது சரத் பொன்சேகாவா? போரின் வெற்றியை எத்தனை பேர் தமதாக்குவது? சிங்கள மக்கள் போர் வெற்றியின் சொந்தக்காரருக்கு கடன் தீர்த்திருக்கிறார்கள் எனக் கூறுவது சுத்த அபத்தம்.

  1. ஈஸ்ரர் தாக்குதல்களும், அவை சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக படித்த மத்தியதர வர்க்கத்தினரின் மனோநிலையில் ஏற்படுத்திய புதிய அச்ச மனநிலையும், அரச மட்டத்தில் காணப்பட்ட முரண்பட்ட போக்கு, தடுப்பதற்கு உருப்படியாக எம் முயற்சியும் எடுக்காத நிலை என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு புதிய தலைமை தேவை என்ற சிங்கள கருத்துருவாக்கம்.

இந்த இரண்டாவது காரணியில் சிங்கள மத்தியதர வர்க்கத்தின் நிலைப்பாட்டினை மிகவும் நேர்த்தியாக முன்வைக்கிறார். நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து புதிய தலைமையின் அவசியத்தைச் சிங்கள மத்தியதர சமூகம் சிந்தித்துள்ளதாக கூறுகிறார். அவ்வாறெனில் தமிழர் தரப்பிலுள்ள மத்தியதர வர்க்கம் அவ்வாறான வகையில் தமது பாதுகாப்புத் தொடர்பாக சிந்தித்திருக்க முடியாது எனக் கருதி கூட்டமைப்பின் மந்தைகளாகக் காணுகிறார். அவர் அவ்வாறு கிண்டலாகப் பார்ப்பது ஏன்? ஒரு புறத்தில் தமிழ் மத்தியதர வர்க்கத்தினரைக் கூட்டமமைப்பின் மந்தைகளாக வர்ணிக்கும் அவர் சிங்கள மத்தியதர வர்க்கத்தினரை சிங்கள பெருந்தேசியவாதத்தின் மந்தைகளாக ஏன் காணமுடியவில்லை? கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற ஒரே பயங்கரவாத சம்பவம் ஈஸ்ரர் ஞாயிறு படுகொலையாகும். அதைத் தவிர அந்த நாலரை ஆண்டுகளில் நாட்டில் சீரான அமைதி காணப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, ஈஸ்ரர் தின படுகொலையாளர்கள் மிகவும் சிறிய பிரிவினர் என்பதை பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற சில வாரங்களுக்குள்ளாகவே பெரும்பாலான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டார்கள். இது எவ்வாறு சாத்தியமானது? பாராளுமன்ற தெரிவுக்குழு, ஜனாதிபதி விசாரணைக்குழு என்பவற்றின் அறிக்கைகள் பாதுகாப்பு பிரிவின் செயற்பாடுகளில் உள்ள பிரச்சனைகளை உணர்த்தியது. பாதுகாப்பு பிரிவினர் அரச அதிகாரிகளின் உத்தரவுகளை எதிர்பார்த்து செயற்படாமல் இருந்தார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியுமா? அவ்வாறெனில் தமிழர் தரப்பில் ஏதாவது அவ்வாறு நடைபெற்றிருந்தால் இதுதான் வழிமுறையாக இருந்திருக்குமா? ஈஸ்ரர் தின சம்பவங்கள் மிகவும் திட்டமிட்டே பாதுகாப்பு பிரிவினரால் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் என்பதை தேர்தல் பிரச்சாரங்கள் தெளிவாக உணர்த்தின. ஆண்டகை மல்கம் ரஞ்சித் அவர்கள் அரசியல்வாதிகள் மேல் நம்பிக்கை இல்லை என்கிறார். சர்வதேச விசாரணை அவசியம் என்பதை மறைமுகமாக அழுத்துகிறார்.

2015 இல் மைத்திரி – ரணில் அரசு தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் அந்த அரசு நிம்மதியாக செயற்பட முடியவில்லை. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு, இரண்டு எதிர்க்கட்சிகள், புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற முடியவில்லை. அரசியல் யாப்பிற்கு விரோதமாக அரசைக் கைப்பற்ற முயற்சி, சிங்களபௌத்த பிக்குகள் இலங்கை பௌத்த நாடு என வற்புறுத்ததல், படை வீரர்களை விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது எனக் கூச்சல்கள் எனப் பல தடைகள் காணப்பட்டன. இவை யாவும் 2019ம் ஆண்டு தேர்தலை நோக்கிய பயணங்கள் என்பதை பத்தியாளரால் காண முடியவில்லை.

  1. கடந்த 5 வருடகால ஆட்சியில் இடம்பெற்ற குளறுபடிகள் காரணமாக ஏற்பட்ட அதிருப்தி.

ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிரச்சகைளைக் காரணம் காட்டுகிறார். இது ஒரு ஒரு பிரதான காரணம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அப் பிரச்சனை எவ்வாறு அணுகப்பட்டது? என்பதே கவனத்திற்குரியது. மைத்திரியுடன் இணைந்த ரணில் அரசைக் கலைக்க எடுத்த முயற்சிகளும், அதற்குத் தடையாக கூட்டமைப்பினர் உதவிய விதமும் நாட்டில் இனவாத அரசியலை உக்கிரப்படுத்த உதவின. பெரும்பான்மைக் கட்சிகளின் கபட நோக்கத்தை சிறுபான்மை இனங்களின் கட்சிகள் தடுப்பதால் அதற்கான பழிவாங்கல் மிகவும் திட்டமிடப்பட்டே செயற்பட்டன.

இங்கு பத்தியாளர் புதிய ஒரு கேள்வியை எழுப்பி, புதிய விளக்கம் தர முயற்சிக்கிறார். அதாவது சஜீத் பிரேமதாஸ வடக்கு, கிழக்குத் தவிர்ந்த எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. எனவே இதனை இனரீதியான பிளவு எனக் கூறலாமா? என வினவி கோட்டபயாவின் வெற்றி முற்றிலுமாக இனவாத அடிப்படையிலானது எனக் குறிப்பிடுவது சரியானதொரு பார்வையாக இருக்க முடியாது என்கிறார். இதற்குத் தனது தரப்பு நியாயமாக தம்மால் குறிப்பிடப்பட்ட மூன்று காரணங்களின் அடிப்படையில்தான் மதிப்பிடவேண்டும் என்கிறார். அவரது குத்துச்சண்டை அவர் போட்ட கூட்டிற்கள்தான் நடைபெறவேண்டும் என்கிறார். இது எந்த வகையான பத்திரிகா தர்மம் அல்லது அறிவுபூர்வமான விவாதம் என்பது புரியவில்லை.

சிங்கள பெரும்பான்மை மக்கள் யாரை நிராகரித்தார்களோ அவரையே தமிழ் மக்கள் ஆதரித்துள்ளதாகக் கூறுகிறார். 48 சதவீதமான மக்கள் கோதாவிற்கு வாக்களிக்கவில்லை. இதனை நிராகரிப்பு என்பதா? அல்லது கொள்கைகளை ஏற்கவில்லை என்பதா? இதில் கணிசமான சிறுபான்மைத் தேசிய இனங்கள் கோதாவிற்கு வாக்களிக்கவில்லை. இது நாட்டில் வாழும் தேசிய இனங்களிடையே ஏற்பட்டுள்ள பாரிய பிளவு என சர்வதேச ஊடகங்கள், உள்நாட்டு ஊடகங்கள் கூறுகையில் இவர் மட்டும் இனரீதியான பிளவு அல்ல என்கிறார்.

2005ம் ஆண்டு மகிந்த பதவியைப் பெற்ற காலம் முதல் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான கொடுமைகள், அதன் காரணமாக அம் மக்கள் வாக்களித்த விதங்கள், 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட இனவாத பிரச்சார உத்திமுறைகள் யாவும் நாட்டில் இனரீதியான பிளவுகளை ஏற்படுத்தியிருப்பதை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை.

2015 இல் மைத்திரி வெற்றிபெற்றது போல இம்முறை சஜீத் வெற்றி பெறுவார் என்பது தமிழ் மக்களின் பொதுப் புத்தியாக இருந்ததாகவும், அப் பொதுப் புத்தியைத் தாண்டி மக்கள் சிந்தித்துவிடக்கூடாது என்பதில் கூட்டமைப்பும் கடுமையாக பணிபுரிந்ததாக வர்ணிக்கிறார். 2015ம் ஆண்டில் காணப்பட்ட அரசியல் நிலமைகளும், 2019 இல் காணப்படும் நிலமைகளும் முற்றாக வேறானவை. ஆனாலும் இரண்டு கட்சிகள் இணைந்த போதிலும் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு சாத்தியமில்லை என்பதை புதிய நிலமைகள் சகல தேசிய சிறுபான்மை இனங்களுக்கும் நன்கு உணர்த்தியிருந்தன. இதன் விளைவே 2015 இலும், 2019 இலும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் முடிவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இதில் கூட்டமைப்பை வலிந்து இணைத்து அரசியல் செய்வதாகவே தெரிகிறது.

இத் தேர்தல் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கவல்ல வாக்குகள், வியூக முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகள் என்ற பார்வைகள் முற்றிலும் தவறானவை என்கிறார். இந்த வாதம் தனி ஒரு தேர்தல் முடிவுகளை மட்டும் எடுத்து வாதிப்பதாக உள்ளது. கடந்த 71 ஆண்டுகால அரசியலில் இவ்வாறான நிலை ஏற்பட்டதில்லை. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க தனிச் சிங்கள சட்டத்தை அமுலாக்கிய வேளையில்கூட இவ்வாறு நிகழ்ந்ததில்லை.

இவ்வாறான நிகழ்வு முதன்முதலாக நிகழ்ந்துள்ளது. தனிச் சிங்கள பௌத்த பேரினவாதம், ராணுவத்தின் பங்களிப்பு, பௌத்த பிக்குகளின் அரசியல் தலையீடு, குடும்ப வாரிசு அரசியல், எதிர்க்கட்சிகளின் பலவீனம், அரசாங்க கட்சிக்கும் எதிர்க் கட்சிக்குமிடையே தெளிவான கோட்பாட்டு அடிப்படையிலான வேறுபாடு அற்ற தன்மை, கட்சித் தாவல்கள், நவதாராளவாத பொருளாதார கட்டுமானம், வெளிநாடுகளின் தலையீடு, தேர்தல் அரசியலில் அரசு அதிகாரிகளின் பங்களிப்பு, முன்னாள ராணுவ அதிகாரிகளின் ஈடுபாடு, பணப் பட்டுவாடா போன்றன முற்றிலும் புதிய பரிமாணங்களாகும். வெளிநாட்டுத் தலையீடு உள்நாட்டுத் தரகர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே தேசிய அரசியல் என்பது எப்போதும் ஒரே விதமாக அமையப் போவதில்லை. பாராளுமன்ற அரசியலில் எதிர்க்கட்சி பலமுள்ளதாக அமைதல் அவசியம். தற்போது அந்த நிலை இல்லை. அதனால் இவை நிரந்தரம் எனக் கருதி அறுதியிட்டுச் சொல்வது ஆரோக்கியமான ஆய்வாக இருக்க முடியாது. இத் தேர்தலைப் பொறுத்த மட்டில் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதியற்றுப் போயுள்ளதாகக் கருதுவது ஜனநாயகத்தைக் கேலியாக்குவதாகும். நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் தேசத்தின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியுள்ளன. அரசு என்ற வகையில் தேசிய கட்டுமானத்தில் சகல இனங்களையும் இணைப்பதை ஆளும் தரப்பினரே முடிவு செய்ய வேண்டும். தென்னிலங்கையில் சமநிலையான போட்டி நிலவுகின்ற போது மட்டும்தான் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் வாக்குகள் தீர்மானிக்கும் வாக்குகள் என்ற தகுதியைப் பெறுகின்றன என வாதிக்கிறார்.

இவ்வாறான வாதம் பத்தியாளர் ஜனநாயகம் குறித்துக் கொண்டிருக்கும் புரிதலை உணர்த்துகிறது. உதாரணமாக இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் இடம்பெற்ற தேர்தலில் பா ஜ க வும், சிவசேனவும் கூட்டாக போட்டியிட்டன. இந்திய காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் என்பன தனித்தனியாகப் போட்டியிட்டன. அத் தேர்தலில் பா ஜ க , சிவசேன கூட்டணி பெரும்பான்மையாக வெற்றி பெற்ற போதிலும் உள் முரண்பாடுகள் காரணமாக பிளவு ஏற்பட்டது. இப் பிளவு சிவசேன, இந்திய காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்பவற்றில் கூட்டை ஏற்படுத்த உதவியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்திய தேசிய அரசியலில் இது ஓர் புதிய மாற்றம் எனக் கருதப்படுகிறது. எனவே சமநிலை அரசியல் என்பது எப்போதும் மாறக்கூடியது. தேர்தலால் மட்டும் தீர்மானிக்கும் செயலாக இன்றைய அரசியல் இல்லை. புதிய சமநிலை எவ்வேளையும் தோற்றலாம்.

இப் பத்தியாளர் தேர்தல் குறித்த பார்வையை வெறுமனே தமிழர் தரப்பிலிருந்து பார்த்திருப்பது துர்அதர்ஸ்டமானது. நாடு முழுவதும் உள்ள அரசியல் பின்புலத்தை கவனத்தில் கொள்ளாமல் ஆய்வை மேற்கொள்வது பக்கச் சார்பானது. பிரச்சார நோக்கம் கொண்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் அரசியல் கட்டுமானத்தின் ஜனநாயகத் தன்மை குறித்து அல்லது தேசிய ஜனநாயக் கட்டுமானத்தின் கோட்பாடு குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. தேசப் பாதுகாப்பு என்பது நாட்டின் ஜனநாயக கட்டுமானங்களில் மேலும் ஜனநாயக நெறிகளைப் பலப்படுத்துவது, அரச பிரதான கட்டுமானங்களின் சுயாதீனத்தைப் பலப்படுத்துவது என்பன போன்றனவே தேசத்தின் பாதுகாப்பு என்பதன் பொருளாக அமைய முடியும். பதிலாக நாடு முழுவதும் பொலிசார், ராணுவத்தை நிறுத்துவது, உளவுப் படையை வலுப்படுத்துவது ஜனநாயகமாக அமைய முடியாது.

இவை இன்றைய அரசியலில் காணப்படாத நிலையை பத்தியாளர் தவிர்த்து, பெரும்பான்மை சிங்கள மத்தியதர வர்க்கம் என்ற பெயரில் ஒளிவட்டம் காட்டுவதும், அதே வேளை தமிழ் மத்தியதர வர்க்கத்தினரை அவமானப்படுத்துவதும், ‘ ஆடுகளாக இருப்பதற்கு தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றபோது அவர்களை மேய்ப்பதிலும் எவருக்கும் சங்கடங்கள் இருக்கப் போவதில்லை’ என அவமானப்படுத்தும் விதத்தில் தெரிவிப்பதும் ‘ உண்மையைப் பேசுங்கள். உண்மையாகப் பேசுங்கள்’ எனக் கூறத் தோன்றுகிறது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *