லங்காராணி : பேரழிவுகளுக்கான வெள்ளோட்டத்தில்…. – மிஹாத் –

இலங்கையிலிருந்து வெளிவந்த போரிலக்கிய நாவல்களில் “லங்காராணி ” குறிப்பிடப்பட வேண்டியதாகும். 1978 ல் பதிப்பான இதனை எழுதியவர் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆங்கில ரெப் பாடகி மாதங்கி அருள்பிரகாசத்தின்
(M I A) தந்தையுமான அருளர்தான். தமிழ் ஆயுதப் போராட்டத்தின் தேவையை பேசிய முதல் நாவல் இதுவென கூறலாம்.

இடதுசாரி கொள்கைகளின் பின்புலத்தில் உருவான கற்பனைகளை தமது எதிர்கால கனவு தேசம் ஒன்றுக்கான அபிலாஷையாக்கிய கதைதான் “லங்காராணி “. 1977 ல் இடம்பெற்ற இன வன்செயல்களில் பாதிக்கப்பட்ட கொழும்பு வாழ் யாழ்ப்பாணத் தமிழர்கள் இலங்கையின் சரக்குக் கப்பலான “லங்காராணி”யில் அகதியாகி யாழ் நோக்கிப் பயணிக்கும் போது நிகழும் சம்பவங்களே இந்நாவலின் கதைப் பின்னணி.

சிங்கள அரசின் விரோதப் போக்கு, சிங்கள மக்களின் வன்முறை மனோபாவம், தமிழருக்கு எதிரான நிருவாக பாரபட்சங்கள் போன்றவற்றை பிரச்சாரமாக்கி போகிற போக்கில் முன்வைக்கும் கதைக்குள் தனிநாட்டுக்கான அபரிமிதமான ஆசைகளும் வழிந்தபடி இருக்கிறது.

இந்தக் கதை வெளிவந்து நாற்பதாண்டுகள் நிறைவு பெறும் தருணத்தில் எத்தனையோ மாற்றங்களும் அழிவுகளும் கடந்து சென்று விட்டன. ஆனால் பிரிவினைக்கான விருப்பமானது இந்த விதமான நாவல்களுக்குள் நங்கூரமிட்ட படியேதான் இருக்கிறது.

நாம் கப்பலில் நிகழும் கதைகளை சினிமாவாகப் பார்த்துப் பழகியவர்கள்தான். புதிய பறவை (1964) , சிரஞ்சீவி (1983) , டைட்டானிக் ( 1997) , குட்லக் (1999) என ஏகப்பட்ட மசாலாக்களை கப்பல் பயணக் கதைகளாக பார்த்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் Nicholas Wedimoff இயக்கிய சுவிஸ் நாட்டு படமான Clandestine (1997) எனும் அருமையான படம் கூட கப்பலில் நிகழ்வதுதான். இப்படியான வித்தியாசமான கதைச்சூழலை எப்போதோ ஒரு பிரதிக்குள் கொண்டுவர எண்ணிய வகையில் அருளர் பாராட்டுக்குரியவர்.

விடுதலை என்பதை வார அங்காடியில் தட்டுமுட்டுச் சாமான் வாங்குவதைப் போல அவசரமாக பெற அங்கலாய்க்கும் சராசரிப் புரிதலுடன் நகரும் இதன் கதைமொழியையும் பின்னணிகளையும் எனது வாசிப்புக்கூடாக எழுத விரும்புகிறேன்.

ஒரு நிகழ்வின் புலப்பாட்டை அதன் ஏகத் தோற்றத்திலிருந்து சிதைத்து பலதரப்பட்ட கருத்து மையங்களால் சிந்திப்பதே ஊக எதார்த்தம். இந்தப் புனைகதையில் கூட அவ்வகைப்பட்ட ஊக எதார்த்தங்கள் உருக்கொள்ளும் தருணங்கள் நிரம்பியுள்ளன. வாசிப்பின் போது அவ்வகையான dissociated objective அனுமானங்களை கண்டுபிடித்து முன்வைப்பதே இப்பிரதியின் முக்கிய பணியாக அமைகிறது.

தமது தனிநாட்டுக் கோரிக்கையை நியாயப்படுத்துவதற்கான தனிச்சிறப்புகளை முன்வைக்க முனையும் கதை சொல்லி அந்தத் தனிச்சிறப்புக் கதைகளினாலேயே ஜனநாயக விழுமியங்களுக்குப் புறம்பான சதிக் கிளைக்கதைகளை உருவாக்கிச் செல்வது வாசிப்பை தொய்வில்லாமல் நிலைப்படுத்த உதவுகிறது.

யாழ் நிர்வாக மேலாதிக்கத்தின் திமிர்த்தனம் குறையாத விவரிப்புகளினால் சிங்கள பொதுமக்கள்வெளி தொடர்பான எடுத்துரைப்புகள் கலவரத்துக்குப் பிந்திய கோபிப்புகளாக வளர்க்கப்படுகின்றன. // டாக்டர் திருமுருகன் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிரதம வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்தவர். இவருடன் மேலும் மூன்று தமிழ் டாக்டர்கள் கடமை புரிந்தனர். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த அந்த இடத்தில் ஏராளமான நோயாளிகள் இவரிடம் வந்து செல்வதுண்டு. பௌத்த பிக்குகள், பெரும் முதலாளிகள், தேர்தலில் நிற்பவர்கள், அங்கு திரியும் காடையர்கள், அந்தப் பகுதியிலுள்ள எல்லோரும் டாக்டரிடம் வந்து செல்பவர்கள்தான். அவர்களின் உடல் நோவை டாக்டரே முன்னின்று குணப்படுத்தி அனுப்பி விடுவார். // அங்கு வேலை பார்த்த சிங்களக் கங்காணிமார், எடுபிடிகள் டாக்டரின் உத்தரவுகளை முகத்தைச் சுழித்துக் கொண்டு செய்தனர். // அங்கு பணியாற்றிய இரு சிங்கள டாக்டர்களும் வேறு பணிகளில் இருந்த மற்றவர்களும் தமிழர்களை விரட்டி அடித்தால் தங்களுக்கு அந்தப் பதவிகள் வரும் என்பதை உணராமலுமில்லை.// என்பதன் மூலம் சிங்களப் பிரதேசங்களில் நிலவிய யாழ் தமிழ் அதிகாரிகளின் மேலாதிக்கம் மறைமுகமாக சித்தரிக்கப்படுகிறது. இக்கதையின்படி “லங்காராணி ” கப்பலின் கேப்டன் கூட ஒரு தமிழர்தான் என்பதும் கூடுதல் தகவல்.

இந்தக் கதையின் போக்கு முழுவதும் கப்பலுக்குள் நிகழும் சம்பவங்களாக அமையவில்லை. மாறாக பயணத்தின் சில தருணங்களை மட்டும் காட்சியாக விபரிப்பதும் பிறகு பிரிவினை நோக்கத்திற்கு வலு சேர்ப்பதுமான வரலாற்றுத் திரிபுகளை உணர்ச்சிகர மேடைப்பேச்சு வடிவில் கொட்டுவதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்குத் துணையாக சரவணன், குமார், வேட்டி கட்டிய இளைஞன் போன்ற இளம் விடுதலை வேட்கை கொண்ட பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாத்திரங்களின் பிரச்சார வெள்ளம் மூலம் பல்வேறு வரலாறுகள் தமது நியாயங்களுக்கு ஏற்ற வகையில் கால ஒழுங்கற்று எடுத்தாளப்படுகின்றது. மன்னர் காலத்து பெருமைகள் தொடக்கம் சுதந்திரத்திற்குப் பிறகான தேக்கம் வரைக்குமான அரசியல் சங்கதிகள் பிரசங்கமாகின்றன. பெரும்பாலான எடுத்துரைப்புகள் யாவும் பொதுவுடமையின் தயவில் சீர்செய்யப்படுவதற்கான நம்பிக்கைகளாக விதைக்கப்படுகின்றன. ஆனால் அந்த எடுத்துரைப்புகளுக்குள் மார்க்சீய சித்தாந்தம் தழுவிய அறிவுபூர்வமான பரிசீலிப்புகள் எதுவுமில்லை. முந்திய காலங்களில் மொஸ்கோ பதிப்பாக வந்த புத்தகங்களை மனனம் செய்து யாரோ ஒப்புவிப்பது போல இருக்கிறது.

கதையின் ஆரம்பப் பகுதிகளில் 1977 கலவரத்தின் சம்பவங்கள் கப்பலில் பயணிக்கும் பல்வேறு நபர்களின் தொடர்புப் பின்னணியோடு வெளிப்படுகிறது. டாக்டர் திருமுருகன், அவர் மனைவி சுகிதா, மலையகத்தைச் சேர்ந்த அவர்களது வீட்டு வேலையாள் முனியாண்டி ஆகியோரின் அல்லல் சம்பவங்களோடு முதலாவது கலவரச் சூழல் காட்சியாகிறது. அதில் தம்மைச் சுற்றி வாழும் சிங்களவர்கள் அனைவரும் நெருக்கடியான சமயம் வாய்க்கும் போது தம்மோடு பழகிய தமிழர்களைக் கொல்லத் துணிகிறார்கள் என்பது போல எடுத்துரைப்புகள் அமைகின்றன. இதேபோல கொழும்பு மத்திய தபால் நிலைய உத்தியோகத்தரின் அனுபவப் பகிர்வாக வெளிப்படும் கதையில் தன்னோடு கூட வேலை செய்த சிற்றூழியர்களே இரவு வேளையில் தேடி வந்து தாக்குதல்கள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அதேவேளை அப்போதைய யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவர் மூலம் தபால் திணைக்களத்தில் வேலை கிடைத்த தகவலும் எடுத்துரைக்கப்படுகிறது. அதாவது சிங்கள அசாங்கத்தில் வடமாகாண தமிழர் சகஜமாக வேலை பெற்ற தகவல் வெளிப்படுவது மிக முக்கியமானதாகும். அது போல ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் சகபாடியை கொல்லத் துணியும் சிங்கள ஊழியரை விபரிக்கும் இடமும் கவனிப்பைப் பெறுகிறது. சிங்களவர்கள் கூடி வாழ்வதற்குப் பொருத்தமற்றவர்கள் எனக் கூற வந்த இடத்தில் சிங்கள அரசு தமிழர்களுக்கு உத்தியோகங்களையும் வழங்குவதும் எதிர்பாராத வகையில் நிரூபணமாகி விடுகிறது. ஆனால் பல்வேறு கலவரங்களையும் முன்னின்று செயல்படுத்தும் அக்கிரமக்காரர்களையும் சாதாரண பொது மக்களையும் வேறுபடுத்திப் பார்க்க கதைச்சூழல் அனுமதிக்கவில்லை. அல்லது அவ்வாறு வகைப்படுத்தி விட்டால் முழு சிங்கள இனத்திற்கும் எதிரான உணர்வெழுச்சியைக் கட்டமைப்பதில் சிரமம் ஏற்படுமென கதை மாந்தர்கள் திட்டமிட்டிருக்கக் கூடும். எதுவான போதும் கலவரத்தில் எத்தனையோ அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றிய நற்குணம் கொண்ட சிங்களவர்களை நினைவு நீக்கம் செய்வதில் புனைவுத் திட்டம் அக்கறை கொண்டிருக்கிறது.

அடுத்த பகுதியில் இளைஞர்கள் தன்னிச்சையாக ஒன்றுபட்டு கப்பலில் உள்ள அகதிகளுக்குத் தொண்டுப்பணிகள் புரிவது போலவும், அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பது போலவும் கதை நகர்கிறது. அப்போது கப்பலில் உள்ள கழிவிடங்களை துப்பரவு செய்வதற்கு ஊழியர்கள் இல்லையென்பது தெரிய வருகிறது. அதனை நிவர்த்திக்க போராட்ட குணமுள்ள இளைஞர்களில் ஒருவனான குமார் தெரிவு செய்யும் நபர் மிக முக்கியமான கவனிப்பைப் பெற வேண்டியவராகிறார். மலையகப் பூர்வீகம் கொண்ட ராணி என்னும் தொண்டுப் பணிப்பெண் நியமிக்கப்படுகிறாள். இது வாசிப்பை சஞ்சலப்படுத்தி பல்வேறு சிந்தனைகளையும் கோரியபடி புதிய திடீர் விவாதங்களை உருவாக்கி விடுகிறது. மேலும் அந்த ராணி என்னும் பாத்திரம் போராட்ட குணமுள்ள இளைஞர்களின் எதிர்காலச் செயல்பாடுகள் முழுவதிலும் தொடர்ந்து பங்கேற்பதற்கான விருப்புறுதி கொண்டதாக கதை நெடுகிலும் வளர்த்தெடுக்கப்படுவது சமூகஒதுக்கல் பற்றிய ஐயங்களை உருவாக்கி விடுகிறது.

இந்த நாவலின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு அம்சம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் அரசியல் உரிமைகளில் ஏற்பட்ட பின்னடைவு என்பது 1948 களின் பின்னர்தான் ஏற்பட்டதாக அநேக இடங்களில் வருவதுதான் அது. அப்படியானால் இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் சிறப்பாக அரசியல் உரிமையுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஒரு புரிதல் உருவாக்கப்படுகிறது. இலங்கைச் சுதேசிகள் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய போது தமிழர்கள் அரசியல் உரிமைப் பொலிவுடன் வாழ்ந்ததாக உருவாக்கப்படும் புரிதலானது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்ப வல்லது. அவ்வாறு தமிழர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சுபீட்சமாக வாழ்ந்தார்கள் என கருதப்படுமாயின் அது முழு தமிழ் சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியாதது. ஏனெனில் வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த எண்ணற்ற தமிழ் மக்கள் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் நலிவடைந்து போனதற்கான சான்றுகள் பல உள்ளன. ஆனால் சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலக் கல்வியிலும், நகர்ப்புற பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேறியவர்கள் யாழ்ப்பாண சிறு மேட்டிமைக் கூட்டமே. சுதந்திரத்திற்குப் பிறகான அவர்களின் திடீர்ச் சரிவானது மொத்த தமிழினத்தினதும் பின்னடைவாக மாற்றி பிரபலப்படுத்தப்பட்டது என்பதே நிஜம்.

ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகான சிங்கள அரசாங்கங்களின் பல்வேறு நடவடிக்கைகள் இலங்கையின் சமூகங்களைப் பாதித்திருக்கிறது என்பதும் உண்மை. அது தமிழர்களுக்கு மட்டும் எதிரானதாகச் செயல்பட்டது என “லங்காராணி ” கூற முற்படுவது ஏற்க முடியாதது. அதேநேரம் சுதந்திரத்திற்குப் பிறகான சிங்கள அரசாங்கங்களின் மக்கள் நலத் திட்டங்களையும் இருட்டடிப்புச் செய்து விட முடியாது. சில வேளைகளில் தமிழ் பிரிவினைவாதத்திற்கு வலு சேர்க்கும் எனும் நோக்கில் பொதுக்கருத்தாக மாற்றப்பட்ட சிங்கள அரசாங்கங்களுக்கு எதிரான வாதங்கள் தமிழர்கள் உட்பட்ட அனைத்துப் பின்தங்கிய மக்களுக்கும் பலனளித்திருக்கிறது. தனிநாட்டுப் பசிக்காக அவை மறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாவலில் அரசியல் அடிப்படையில் கடுமையான எதிர் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் காலங்கள் சில முக்கியமானவை. அதில் பண்டாரநாயக்கவின் காலத்தில் சிங்களம் அரச மொழியாக கொண்டுவரப்பட்டமை, ஸ்ரீமாவின் பிந்திய ஆட்சிக் காலத்தில் இலங்கை குடியரசாக்கப்பட்டதும் அதனைத் தொடர்ந்து உருவான மாவட்ட தரப்படுத்தல் முறையில் அமைந்த பல்கலைக்கழக மாணவர் தெரிவு முறை, ஜே.ஆரின் காலத்தில் தீவிரமடைந்த அரசியல் குரோத மனோபாவம் என்பவை குறிப்பிடத்தக்கவை. இதில் ஸ்ரீமாவின் காலத்தில் துளிர்விட்ட வன்முறை மனோபாவமானது உள்ளூரக் கிளர்வான அனுபவமாக வெளிப்படுகிறது. உரும்பராயில் உதவி மந்திரிக்கு குண்டு வைத்தமை, அமைச்சர் குமாரசூரியரையும், மேயர் அல்பிரட் துரையப்பாவையும் துரோகிகளாக காட்டுவதற்கும் இந்த நாவலின் பாத்திரங்கள் துணை புரிகின்றன. சிவகுமாரன் என்னும் வன்முறைக்கு முன்னோடியான இளைஞனின் செயல்கள் கப்பலில் இடம்பெறுகின்ற பிரிவினைவாத அரட்டைக்குள் மகத்துவமானதாக வர்ணிக்கப்படுகின்றன. வேட்டியணிந்த இளைஞன் எனும் பாத்திரத்தின் பிரசங்கத்தில் தேசியக்கொடியைச் சிதைத்த சிவகுமாரன் புகழப்படுவது போலவே தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறை நிகழ்வுகளும் அரசாங்கத்தின் சதியாக எடுத்தியம்பப்படுகிறது. அத்துடன் புதிய இளைஞர்கள் சிவகுமாரனின் வன்முறைப் பாதையைத் தொடர்வதாகவும் அது நாளைக்கு நல்ல விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது.

இந்தக் கதையின் விடுதலை வேட்கைத் தொனியானது இடதுசாரி அபிலாஷை கொண்டதாக இருந்த போதும் இதன் அரசியல் பரிசீலனைகளுக்குள் பொதுவுடமைத் தத்துவச் சாரங்கள் எதுவும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள பாத்திரங்கள் இலங்கையின் அரசியலை அணுகும் விதமானது கீழ்மையான அறிவுப் பதட்டத்துடன் நெருக்கமுற்றதாக இருக்கிறது. பொதுவுடமைச் சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசொன்றை அமைக்க ஆசைப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆளுகைப் பிரதேசத்திலுள்ள மக்களை எவ்வாறு வர்க்க முறையில் அக்கறை கொள்வது என்பதில் கூடத் தெளிவற்றுப் போனார்கள். பல இனக் குழுக்களைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து இன்னொரு இனம் பிரிந்து செல்வதற்கான பிரத்தியேக நியாயங்கள் வர்க்கப் போராட்ட நியமங்களூடாக அணுகப்படவேயில்லை. இங்குள்ள மூன்று இனங்களையும் வர்க்க அடிப்படையில் எவ்வாறு ஒருங்கிணைப்பதெனும் சிந்தனை கூட விவாதிக்கப்படாமல் லங்காராணிப் பயணம் தொடர்கிறது. இங்கு இடம்பெறும் கருத்துப் பகிர்வில் தமிழ் இனவாதத்தை வளர்ப்பதற்காக சிங்கள இனவெறுப்பைக் கூர்மைப்படுத்தும் பாத்திரங்களே அழுத்தமான செல்வாக்குச் செலுத்துபவையாயுள்ளன.

பல்லினங்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் போராட்டங்களானவை இனவெறுப்பினூடாக தீவிரமாக்கப்படுவதால் பயனேதும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர லங்காராணி முப்பதாண்டுகள் பயணிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் ஒரு சமூகத்தின் தனிப்பட்ட விருப்பம் மட்டும் தழுவியதாக வடக்கிலும், கிழக்கிலும் முன்னெடுக்கபடும் யுத்தமானது மறு பிரதேசங்களிலுள்ள பிற சமூகங்களின் ஒத்துழைப்பைப் பெறாமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. அதனால் பிற இனங்களும் தென்னிலங்கையும் அனுசரித்துக் கொள்ளும் வகையில் செம்மையாக்கம் பெறாத போராட்டங்கள் பயனளிக்காதவை எனும் முன்கூட்டிய புரிதல் மார்க்சீய சித்தாந்தம் தழுவிய விமர்சன வழியில் ஆராயப்பட்டிருக்குமானால் தமிழர் போராட்டத்திற்கு விரிந்த அனுதாபம் கிடைத்திருக்கும். ஆனால் நாடு தழுவிய அளவில் உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்ற இனவெறுப்பற்ற போராட்டமொன்றை உருவாக்கத் தவறும் விவாதமாகவே லங்காராணி அரட்டைகள் அமைந்திருக்கிறது.

ஏனெனில் வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெறும் போராட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுக்கும் இராணுவமானது தென்னிலங்கையிலிருந்துதான் உருவாக்கம் பெறுகிறது. அப்படியானால் அங்குள்ள மக்களுக்குள் தமிழர் அரசியல் விடுதலைக்கான தேவையை உணர்த்தும் பட்சத்திலும், அதற்கான அரசியல் உபாயங்களை வகுக்கும் பட்சத்திலும் செயல்பட்டிருக்க முடியுமானால் யுத்தத்தின் மூன்று தசாப்தக் கொடுமைகளை ஓரளவு நீர்த்துப் போகச் செய்திருக்கலாம். அத்தோடு தென்னிலங்கையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் தவிர்த்திருக்க முடியும். அதன் மூலம் போராட்டமானது பிரத்தியேகமான ஒரு சூழலில் இராணுவம் × பிரிவினைவாதிகள் என்ற எல்லைக்குள் மட்டுப்பட்டிருக்கும். இந்த அணுகுமுறை ஆக்கபூர்வமான விடுதலையைப் பெற்றிருக்கும். ஆனால் பல்வேறு கலவரங்களிலும் சிங்கள அரச செல்வாக்குடன் அரங்கேறிய காடையர்களின் வன்முறைக்குப் பிரதியுபகாரமான தமிழர் வன்முறை மனோபாவமே போராட்டம் என்ற போலி முகமூடியினால் மறைந்து செயல்பட்டது. இது போன்ற வெறுப்புப் புள்ளியிலிருந்துதான் தென்னிலங்கை சிங்களவரைக் கொல்வதற்கான தர்மங்கள் உருவாக்கப்பட்டதற்கான பின்னணிகளைத்தான் லங்காராணியில் நிகழும் கலவரத்திற்குப் பின்னரான விவாதங்கள் சுட்டி நிற்கின்றன. இந்த அரசியல் தெளிவற்ற நலிவான உபாயங்கள்தான் சிங்கள வெகுமக்கள் மத்தியில் தமிழர் போராட்டம் மூர்க்கமாகச் சிதைக்கப்படுவதற்கான புதிய அறமொன்றை சிந்திக்கச் செய்தது.

இலங்கைச் சுதேசிகள் காலனிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிய காரணங்களினால் வெள்ளையரின் அனுசரிப்புக்குள் அகப்படவில்லை. குறிப்பிட்ட கரையோர மக்களே அக்கால சுகங்களை அனுபவித்தனர். அந்த குழுவினரின் வம்சங்களே அதிகாரங்களை தம்வசப்படுத்திக் கொண்டு செழித்து வளர்ந்தன. அந்தச் செழிப்பில் யாழ்ப்பாண சமூகப் பிரிவும் அடங்கும். அந்தப் பிரிவினரின் சுக வாழ்வானது எல்லாத் தமிழருக்கும் வாய்த்திருக்கவில்லை. ஆனால் “லங்காராணி ” நாவலானது அதனை எல்லா மக்களுக்கும் பொதுவான செழிப்புக் காலம் போல மடைமாற்றம் செய்து விடுகிறது. // ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் இருந்தான். உத்தியோகத்திற்குப் போனோம், கடைகளைப் போட்டோம் பாதுகாப்பாக இருந்தது. அந்தப் பாதுகாப்பு இப்ப இல்லை பாருங்கோ. நாங்கள் கெட்டித்தனமாகப் படிச்சம், வேலை செய்தம் // ( பக்கம் 78) இந்த சுகமானது காலனிய காலத்தில் எல்லாப் பிரதேசத்திலுள்ள தமிழருக்கும் வாய்த்திருக்கவில்லை. ஆனால் காலனிய ஆட்சிக் காலத்தில் எல்லாத் தமிழரும் கல்வியிலும், வர்த்தகத்திலும் முன்னேறி இருந்தது போன்ற சித்தரிப்பை இந்த உரையாடல் ஏற்படுத்தி விடுவதனால், சுதந்திரத்திற்குப் பிந்திய அரசியல் சீர்திருத்தங்களினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண உயர் குடிகளின் துயரங்களை எல்லாப் பிரதேச தமிழர்களினதும் அவஸ்த்தை போல பரப்பி விடுவது இலகுவாகி விடுகிறது.

தமிழர்கள் ஏன் தனியான அரசை அமைக்க வேண்டுமெனும் காரணமும், அக்காரணத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னரான ஜம்ப வியாக்கியானமும் நிஜமான அரசியல் களத்தின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் சிரிப்பையே வரவழைப்பவை. இந்த ஒப்பீட்டை இலங்கையின் எந்தக் காலச்சூழலோடு பொருத்தி நோக்கினாலும் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. முதலில் ஜம்ப வியாக்கியானத்தையும் பிறகு தனி அரசு தேவைப்பாட்டுக்கான காரணத்தையும் பார்க்கலாம். // டாக்குத்தர் என்ஜினியராக வர முடியவில்லை என்பதாலேயோ, அரசாங்க உத்தியோகத்திற்குச் சிங்களம் படிக்க வேண்டும் என்பதாலேயோ, சிங்களவன் யாழ்ப்பாணத்திலேயும் திருகோணமலையிலும் வந்து வாழ்கிறான் என்பதாலேயோ, ……, ….., நாங்கள் தனி நாடு கேட்டுப் போராட வேண்டிய அவசியமில்லை. உனது வீட்டின் பின்னாலுள்ள அரச மரத்தைப் புத்த கோவிலாக்கி விட்டார்கள் என்பதற்காகத் தனிநாடு கேட்கக் கூடாது. // ( பக்கம் 95) . தமிழர் பிரிவினைக்கான முனைப்பு என்பது இது போன்ற பல்வேறு நடைமுறைக் கோஷங்களால்தான் வெகுஜன அந்தஸ்தைப் பெற்றது. இந்தக் கோஷங்களைப் புறக்கணிக்கும் புனைவுச்செயல் மூலம் மரபான தமிழ் அரசியலுக்கு காயடிப்பு நிகழ்கிறது.
மேலும் தனிஅரசு அமைக்கப்படுவதற்கான காரணம் இவ்வாறு அமைகிறது. // “இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் வறுமையைப் போக்கிச் செல்வத்தை வளர்க்கவும், தங்கள் மொழியை, கலாசாரத்தை, பாரம்பரியத்தைப் பேணிக் காத்து வளர்க்கவும் தங்கள் நிலத்தில் ஒரு அரசை நிறுவ விரும்புகிறார்கள். //
( பக்கம் 96)
இந்த உரைகள் வழியாக தமிழர் பிரிவினைவாதத்தின் தெளிவற்ற கருத்தியல் தளம் உறுதிப்படுத்தப் படுவதாகவே கருத முடியும். ஏனெனில் இலங்கையின் ஒற்றையாட்சியிலிருந்து விடுபடுவதற்கான நியாயங்களை சிங்களவரினால் நிகழ்த்தப்படும் அநீதிகளுக்குள் இருந்து கட்டமைக்கும் கள அரசியலும், வலுவற்ற காரணங்களினால் கற்பனைப் பிரிவினைவாதம் பேசும் கதைகளுக்கும் இடையில் நிர்மாணம் பெறும் கும்பல் தனிநாட்டுப் பற்றானது அற்பமான அழிவுகளை உற்பத்தி செய்ய வல்லது.

பிரிவினைப் போராட்டத்துக்கான ஆயுதங்களை எந்தப் பிரிவினர் கையில் ஏந்துவார்கள் என்ற விபரத்தினை வேட்டியுடன் இருந்த இளைஞன் அடையாளப்படுத்தி விடுகிறான். இந்த வகைப்படுத்தலானது தமிழ் மக்களைப் பிரதேசவாரியாகவும் தொழில்முறை ஜாதியாகவும் அனுமானித்து அறிந்து கொள்ளவும் முடியுமாகிறது. // ” யார் கரங்கள் வேலெடுக்கும் ?”…
“உண்டு கொழுத்து திரண்டு போய்க் கிடக்கும் கரங்கள் இதைத் தொடாது! இதைத் தொடவும் முடியாது.
உழைத்து உழைத்து முறுகிப் போன கரங்கள்தான் இதை முதலில் எடுக்கும்.
ஏர் பிடித்துக் காய்ந்த கரங்கள்தான் இதை எடுக்கும்.
பேனா பிடித்துச் சோற்றுக்கு ஏங்கும் வெற்றுக் கரங்கள்தான் இதை எடுக்கும்.
இனத்தின் வீழ்ச்சியை நினைத்து நினைத்துத் துடிக்கும் கரங்கள்தான் இதை எடுக்கும் // (பக்கம் 97)
ஆக, இந்த அப்பாவிகளின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து விட்டு உண்டு கொழுத்துத் திரண்டவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் குடியேறுவது போர் காலத்தின் வாடிக்கை என்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதுமட்டுமல்லாமல் இனத்தின் வீழ்ச்சியை நினைத்துத் துடிக்கும் உண்டு கொழுத்துத் திரண்ட உடல்கள் பிரிவினைவாதத் தலைமைகளாகவும், மிதவாத அரசியல் தலைமைகளாகவும் உயர்வு பெறும் என்பதும் அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்கள்தானே.

சிங்கள இனவாத அரசியலின் மீது வழமையாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சில எவ்வித வித்தியாசங்களுமின்றி இங்கு ராணிக்காக காத்துக் கொண்டு கப்பலின் மேல் தளத்தில் நிற்கும் சரவணனின் சிந்தனை வழியாக எடுத்து விடப்படுகிறது. //வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளுடன் பேரம் பேசி நாட்டை விற்று வெளிநாட்டு வங்கிகளில் தங்கள் செல்வங்களைப் பெருக்கிக் கொள்ள பழகிக் கொண்ட சிங்களத் தலைவர்கள். … என்றொரு இடத்தில் (பக்கம் 142) வருகிறது. பிற சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளை இந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டமைக்கு வேறு நியாயங்கள் இருக்கக் கூடும்.

இலங்கை அரசின் தமிழர் ஒழிப்பு நடவடிக்கைகள் சிலவும் பட்டியலிடப்படுகின்றன. (பக்கம் 142) . தமிழர்களுக்கு குடியுரிமை இல்லாமல் செய்தது, மலைத்தமிழர்களை நசுக்குவது, வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திப் புறக்கணிப்பு செய்வதும் சிங்களவர்களைக் குடியேற்றுவதும், தமிழர் பாராளுமன்ற உறுப்புரிமையைக் குறைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் வழியாக இனநெருக்கடி வழியே பிரிவதற்கான அரசியல் எல்லை நோக்கி நகர்த்தும் காரியங்கள் திட்டமிடப்படுகிறது. இங்கு பட்டியலிடப்படும் தமிழருக்கெதிரான சிங்கள அரசின் வேலைத்திட்டங்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மீள் பரிசீலனை செய்யப்படாமல் மரபுத்தன்மையாக நம்பப்பட்டு பிரிவினைக்கான பேருண்மையாக மாற்றப்பட்டவை.

மலையகத் தமிழருக்காக சில பாத்திரங்கள் அக்கறை கொள்வது வலிந்து செருகப்பட்ட அரசியல் நேயம் என்றே கொள்ள வேண்டும். தமிழர் போராட்டங்களின் களச் செயல்பாடுகளில் மலையகத் தமிழர்களுக்கான அக்கறைகள் ஒரு போதும் இருந்ததில்லை. அவர்கள் உதிரியான போராடும் உடல்களாக மட்டுமே உள்வாங்கப்பட்டனர். அந்த மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதில் யாழ் தமிழருக்கும் பங்குண்டு. அதே போல கலவரங்களுக்குப் பயந்து வடக்கில் குடியேறிய மலைத்தமிழர்கள் போராட்ட இயக்கங்களாலும், வடக்கின் உயர் ஜாதியினராலும் சுரண்டிச் சீர்குலைக்கப்பட்டதற்கான தடயங்களை லங்காராணிப்பாத்திரங்களின் அக்கறைகள் அமுங்கச் செய்ய முயல்கின்றன.

” துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது ” என்னும் மாஓ வின் மேற்கோளை உருவகித்து மகிழ்வது போன்ற உரையாடலொன்றில் ஆயுதங்களின் மேன்மை உணர்த்தப்படுகிறது. // அகிம்சை, நீதி நியாயம் பேசும் ; மொழியை விளங்காதவன் விளங்கிக் கொள்ளும் மொழியைப் பேசுவது இந்தத் துப்பாக்கிதான். துப்பாக்கி பேசும் போது இலகுவில் புரிந்து கொள்கிறார்கள். //( பக்கம் 154)
துப்பாக்கி பேசும் மொழி கூட எல்லாக் காலத்திலும் ஒரே விதமாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பதை அழிவின் அனுபவங்கள் வந்து உணர்த்தி விட்டுச் செல்லும் வரை அந்த வார்த்தைகளைச் சரவணன் என்னும் பாத்திரம் வழியாக எத்தனை பேர் கேட்க வேண்டியதாயிற்று.

ராணி என்னும் பெண்ணிடம் கைத்துப்பாக்கியைக் காண்பித்து சரவணன் புரட்சி ஹீரோவாகும் தருணத்தில் அவள் “யாழ்ப்பாணத்தில் எல்லாப் பெண்களும் சுடப் பழகிக் கொண்டார்களா ” என்று கேட்கும் போது பேரழிற்கான விதைகள் தூவப்படுவதை உணர முடிகிறது. பெண்களை போராட்டத்தோடு இணைத்து விடுதல் என்பது மேலோட்டமான பார்வைக்கு முற்போக்கான நடவடிக்கை போல தோன்றினாலும் அது உருவாக்கும் விளைவுகள் கடுமையானவை. ஒரு கட்டத்தில் போராடும் உணர்வு சோர்வாகும் போதும், அரசியல் ரீதியான பின்னடைவுகள் ஏற்படும் போதும் நடைமுறை ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். இயக்கங்களுக்குள் நிலவுகின்ற குடும்ப நடத்தைகளுக்குப் புறம்பான சூழலானது சுதந்திரம் போன்றதொரு உணர்வைக் கொடுப்பதனால் பாலுறவுக் கலாசாரம் துரிதப்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் போராட்ட உணர்வின் பெயரால் பாலியல் சுரண்டல் பெருக வாய்ப்புமுள்ளது. அத்துடன் ஒரு கட்டத்தில் ஆண்களின் பற்றாக்குறையை நிவர்த்திக்க பெண்களே முழுமையான போராட்டத்தையும் தோழில் சுமக்கும் அவலம் உருவாகி விடலாம். அது மட்டுமல்லாமல் போராட்டம் வெற்றியடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும் போராடும் பெண்ணுடல்களை இங்குள்ள பண்பாட்டுவெளியானது விசாலமான புரிதலுடன் அனுசரித்துக் கொள்ளுமா எனும் கேள்விகளையும் செரித்துக் கொண்டதாகவே ராணியின் உரையாடலை நோக்க வேண்டியிருக்கிறது. ஹஸீனின் அண்மையில் வெளிவந்த முன்னாள் பெண் புலி போராளிகள் குறித்த ஆவணப்படமானது இந்த பார்வைக்கு வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளதைக் குறிப்பிட வேண்டும்.

சிங்களவருக்குப் புறம்பாக தாமும் ஒரு தனிநாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டுமெனும் ஆசையில் தமிழ் பாரம்பரியத்தை ஒருதலைப்பட்சமாகப் புகழும் சந்தர்ப்பங்கள் இந்நாவலில் பல இடங்களில் வருகின்றன. //தமிழர்களுடைய நாட்டில் பட்டினங்களும் கிராமங்களும் செழிப்புற்றிருந்தன. பிற நாடுகளுடன் வாணிபம் செழித்தோங்கி செல்வம் கொழித்தது. மேற்கே வெகு தூரத்திலுள்ள எகிப்து கிரேக்கம் ரோமம், கிழக்கே சீனம் முதலிய நாடுகளுடன் கடல் கடந்து சென்று வாணிபம் செய்தனர்.

தமிழர்கள் அரண்மனைகளையும், கோட்டைகளையும் கட்டினார்கள். கால்வாய்களையும், குளங்களையும் வெட்டினார்கள். சாலைகளையும், சத்திரங்களையும் உருவாக்கினார்கள். ….(பக்கம் 156)
இந்தப் புகழ்ச்சியானது இலங்கையின் ஏனைய புராதன சமூகங்களை தகுதி நீக்கம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அப்படியானால் அன்றிருந்த ஏனைய புராதன சுதேசிகள் மேற்குறித்த பணிகளை மேற்கொள்ளும் திறன் அற்றவர்களாக இருந்தார்களா என்று சிந்திப்பதற்கான சாத்தியங்களை இந்தப் புகழ்ச்சி உருவாக்குகிறது. அப்படியானால் சிங்களப் பண்பாடானது அக்காலப்பகுதியில் வளர்ந்திருக்கவில்லையா? இங்கிருக்கும் மிக அதிகமான புராதனச் சின்னங்களும், சிற்பங்களும், குகை ஓவியங்களும், எண்ணற்ற பண்டைய கோபுரங்களும் எந்தப் பண்பாட்டின் பெருமையை வலியுறுத்துகின்றன. இன்று சிங்களவர்கள் தமக்கு உரித்துடையதாகக் கருதும் பண்டைய சின்னங்களைப் போல தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் காணாமல் போனதன் மர்மம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பும் சூழ்நிலையும் இந்தப் புகழ்ச்சிக்குள் புதையுண்டிருக்கிறது. இது போன்ற பழம்பெருமை பேசும் நீண்ட வர்ணனைகள் கதையின் உணர்வெழுச்சியைச் சூடு தணியாமல் வைத்திருப்பதற்கான உத்தியாக பயன்படுத்தப்படாமல் கதையை நீட்டிக் கொண்டு செல்வதற்கான திட்டமாக இணைக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் அரசியல் பிணக்குகள் வழியாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் தமிழர் தரப்புகளின் பிரதான குற்றச்சாட்டைத்தான்
” லங்காராணி ” யில் பயணிக்கின்ற பிரிவினை எண்ணம் கொண்டவர்களும் கூறுகிறார்கள். ஒன்று எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்கு எதிரானது. மற்றையது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு எதிரானது. முதலாமவருடைய சிங்கள அரச மொழிக் கொள்கையும், இரண்டாமவருடைய பல்கலைக்கழக தரப்படுத்தல் கொள்கையும் இடம்பெற்றிருக்கா விட்டால் பிரிவினைக்கான அரசியல் முனைப்புகள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்பது போன்ற எண்ணப்பாட்டையே இந்த விவாதங்கள் அனைத்தும் தோற்றுவிக்கின்றன.

இந்த விவாத நியாயங்களின் அசல் தன்மைகளை அறிந்து கொள்ளாமல் போனால் தமிழ் பிரிவினைவாதம் குறித்த சரியான புரிதலுக்கு நாம் வந்து சேர்ந்து விட முடியாது.

தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பெரும்பான்மையினரால் நடத்தப்பட்டு வரும் பாரபட்சங்கள் காரணமாகவே 1977 ல் தமிழர் விடுதலைக் கூட்டணி வேறு வழியின்றி தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்ததாக சொல்லப்பட்டது. நாடு முழுவதும் தற்செயலாக இடம்பெறும் கலவரங்களை அரசியல் ரீதியிலான பாரபட்ச நடவடிக்கைகளோடு தொடர்பு படுத்தி நோக்குவது பொருத்தமானதா? எனும் கேள்விக்கு பதில் தேடுவதற்குப் பதிலான ஒரு புள்ளியை நோக்கி நகர்வதே எனது பார்வையாகும்.

ஒரு நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் பாரபட்சமான ஒதுக்கல் நடவடிக்கைகள் பல வகையான வழிகளில் இடம்பெற வாய்ப்புள்ளது. சட்டவாக்க ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரச நிருவாக ரீதியாக, கல்விச் செயல்பாடுகள் ரீதியாக, மொழி ரீதியாக, சமூக ரீதியாகவும் இந்தப் புறமொதுக்கல்கள் நடைபெற முடியும். இலங்கையைப் பொறுத்தவரை ” லங்காராணி ” முன்னிறுத்துகின்ற பாரபட்சங்களுக்குள் இந்த விதமான தவறுகள் எந்த வகையில் இடம்பெற்றதனால் அவர்கள் பிரிவினை அரிதாரம் பூசிக்கொள்கிறார்களென்பதை பரிசீலிப்பது அவசியமாகிறது.

சட்டம் சார்ந்த அடிப்படையில் இலங்கையில் தமிழர்கள் ஓரவஞ்சனைக்கு உள்ளாக்கப்படுகிறார்களா என்பதனை ஆராய்ந்தால் அது வலுவற்ற குற்றச்சாட்டாகவே இருப்பதைக் காணலாம். தனித்துவமான சமூகம் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான விசேட சட்ட திட்டங்கள் எதுவும் இலங்கையில் இல்லை. பாராளுமன்ற அதிகாரத்திலிருந்து உள்ளூராட்சி அதிகாரம் வரையான அனைத்துச் சட்டவாக்க மன்றங்களிலும் தமிழர்கள் பங்கேற்பதற்கான சம வாய்ப்புகளையும், அவற்றில் வாக்களிப்பதற்கான உரிமையையும் சட்டம் உறுதிப்படுத்தியிருப்பதோடு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பையும் வழங்குகிறது. தென்னாபிரிக்காவில் நிலவிய நிற ஒதுக்கல் கொள்கை போலவோ, ஐம்பது சத விகித சனத்தொகையைக் கொண்ட பிஜி தீவின் இந்திய வம்சாவளியினருக்கு நிலம் வாங்குவதில் இருந்த சட்டச் சிக்கல்கள் போலவோ, அல்லது மலேசியாவில் நிலவும் மலாயர்களுக்கு சாய்வான “பூமிபுத்ர ” கொள்கைகள் போலவோ இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான விசேட சட்டங்களில்லை. சட்டங்களை அமுல்படுத்துகின்ற நீதித்துறைகளில் கூட பணியாற்றுகின்ற உயர் அதிகாரிகளின் தொகையை ஆய்வு செய்தால் தரவுகள் வேறாகவே உள்ளன. “லங்காராணி ” நாவல் வெளிவந்த காலத்தை அண்மித்த சமயத்தில் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரத் தகவல்களின் பிரகாரம் இலங்கையில் 112 நீதித்துறை வல்லுனர்களில் 19 பேர் தமிழர்கள் என குறிப்பிடப்படுகிறது. இது 17% வீத அளவானதென கூறப்படுகிறது.

வணிகம் சார்ந்த துறைகளில் கூட தமிழர்களுக்கான இடம் மிக அதிகமாகவே இருந்துள்ளது. வர்த்தக விதிமுறைகள், காணிகளைக் கையாளும் உரிமை, பொதுப்பணித்துறை நுழைவு, தொழில்துறைகள் போன்ற எதிலும் தமிழர்களை இனப்பாகுபடுத்தலுக்கு உள்ளாக்கும் புறம்பான சட்ட விதிகள் எதுவும் இருந்திருக்கவில்லை.

தமிழர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதாக
“லங்காராணி “பாத்திரங்கள் அனைத்தும் தமக்கு வாய்க்கின்ற தருணங்களில் குற்றச்சாட்டாகப் புலம்புகின்றன. அடிப்படை ஜனநாயக உரிமை என்பது, ஒரு நாட்டின் சட்டவாக்க சபையில் உறுப்பினராக பங்கேற்பதற்கும் மற்றும் அதற்கான உறுப்பினரைத் தெரிவு செய்ய வாக்களிக்கும் உரிமையுமாகும். இது தமிழர்களுக்கு மறுக்கப்படவேயில்லை.

பொருளாதார ரீதியில் இலங்கையில் தமிழர்களுக்கு பாகுபாடு இடம்பெறுகிறதா என ஆராய்ந்தால் அதற்கான சட்டபூர்வச் சான்றுகள் எதுவுமில்லை. பெரும் கைத்தொழில் துறையிலிருந்து சிறு குறு வணிகம் வரை இதில் தமிழர்கள் மிக வலுவாகவே உள்ளனர் என்பது பல வகையிலும் நிரூபிக்கப்பட்டது.

அதேபோல தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுவதாகவும் “லங்காராணியில் “பேசப்படும் குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்கும் விதத்தில் 1982 ல் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டம் அமைந்திருந்தது. அதில் வட மாகாணத்திற்கு மட்டும் பிற மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக வழங்கப்பட்டிருந்தது. ஆகவே இங்கு பாத்திரங்கள் அரசியல் ரீதியிலான வெறுப்பை அதிகப்படுத்துவதற்குத் தேவையான குற்றச்சாட்டுகளை உருவாக்கின என்பது தெளிவாகிறது.

தொழில்துறை ரீதியில் கூட தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. இலங்கையின் உயர் தொழில்துறைகளில் தமிழ் ஆண்களும் பெண்களும் அதிகமாகப் பணிபுரிவது மறுக்க முடியாதது. வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், உயர்கல்வித்துறையினர், பொறியியலாளர்கள், கணக்காய்வாளர்கள், விலங்கு மருத்துவர்கள் மற்றும் இதர உயர் பதவிகள் அனைத்திலும் போதியளவு தமிழர்கள் பணி புரிந்து வந்திருக்கிறார்கள். இந்தத் துறைகள் எதிலும் தமிழர்களுக்கு எதிராக சட்ட ரீதியான தலையீடுகள் இருந்திருக்கவில்லை. பின்வரும் தொழில்துறை பிரிவுகளில் 1980 காலத்தில் 12.6 °/° வீதமாக இருந்த தமிழ் சமூகத்தினர் மொத்த சனத்தொகையிலும் எந்த அளவில் உள்ளீர்க்கப்பட்டிருந்தனர் என்பது இதோ :

பொறியாளர் – 34.9%
நில அளவையாளர் 29.9%
வைத்தியர்கள் 35.1%
பல் மருத்துவர்கள் 24.7%
மிருக வைத்திய நிபுணர்கள் 38.8%
கணக்காய்வாளர்கள் 33.1%

“லங்காராணி ” வெளியான அதே காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் தகவல்கள் பிரகாரம் பெறப்பட்ட புள்ளி விபரங்களை அடியொற்றியதாகவே இந்தப் பரிசீலனை அமைந்திருக்கிறது.

எண்பதாம் ஆண்டு காலப்பகுதியில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அரச நிருவாகத் துறையில் உள்ள 2303 உயர் பதவி இடங்களில் 367 பதவி நிலைகளுக்கு தமிழ் உயரதிகாரிகள் பணியாற்றுவதாக கூறப்பட்டிருக்கிறது. இது விகிதாச்சாரப்படி 15.9% ஆகும். குறிப்பிடக் கூடியளவு அரச திணைக்களங்களில், வெளிநாட்டு தூதுவராலய ராஜதந்திரப் பணிகளில், அரச நிறுவனங்களின் உயர் பதவிகள் உட்பட பல தளங்களிலும் தமிழர்கள் தமது விகிதாச்சாரத்திற்கு குறையாத வகையில் நியமிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் சிங்களப் பெரும்பான்மையினரின் அளவையும் தாம் சுதந்திரத்திற்கு முன்பு சுரண்டி அனுபவித்தது போல தொடர்வதற்கு அனுமதிக்கப்படாததை இனப்பாகுபாடு எனும் பிழையான அர்த்தப்படுத்தல் மூலம் பிரச்சாரம் செய்யவே “லங்காராணி “உரையாடல் பயன்படுகிறது.

ஆரம்ப பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரையான அனைத்து மட்டங்களிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளும் பாரபட்சமான ஒதுக்கல் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக வகுப்புவாத அரசியல்வாதிகள் கூறிவருகின்ற அதே தொனியை “லங்காராணி ” கப்பலில் பயணிப்பவர்களும் பிரதிபலிக்கிறார்கள். 1982 ம் ஆண்டு இலங்கையின் பாடசாலைகள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட புள்ளி விபரம் ஒன்று இவ்வாறு கூறுகிறது. அதில் மொத்தம் 3.37 மில்லியன் அரசாங்க பாடசாலை மாணவர்கள் இன அடிப்படையில் பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளார்கள்.

சிங்கள மாணவர்கள் – 77 %

தமிழ் மாணவர்கள் – 15 %

முஸ்லிம் மாணவர்கள் – 8 %

தமிழ் மொழியில் கல்விப் பொது தராதர உயர்தரம் பயில்கின்ற மாணவர்களின் தொகை 14.4 % ஆக இருக்கிறது. இரண்டாம் நிலைக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதிலிருந்து தடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் இலங்கையில் இல்லை. 1977 ல் இருந்து 1981 வரையிலான ஐந்து வருட காலப்பகுதியில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் தொகை 22109 ஆகும். இதில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற 18.5 வீத மாணவர்கள் தமிழர்கள்.

1971 க்கு முந்திய பல்கலைக்கழக அனுமதி முறைமையில் ஒருதலைப்பட்சமாக அதிகமான வரப்பிரசாதங்களை அனுபவித்த யாழ் மாவட்ட தமிழ் மாணவர்கள் பிறகு நாடு தழுவிய மாவட்ட தரப்படுத்தலினால் மிகையான பல்கலைக்கழக அனுமதியிலிருந்து மட்டுப்பட்டது போல சில நகர்ப்புற சிங்கள மாணவர்களும் மட்டுப்படுத்தப்பட்டனர். அதனை சிங்கள சமூகமும் ஏனைய மாவட்ட மக்களும் அனைத்து நாடு தழுவிய மக்களுக்குமான சீர்திருத்தமாக ஏற்றுக் கொண்டனர். ஆனால் யாழ்ப்பாணிகள் மாத்திரமே அதனை பகையுணர்வுக்கான செயற்கைச் சாதனமாக மாற்றினர்.

அப்போது நாடளாவிய அளவில் வேலைவாய்ப்பு பெற்ற முதன்மை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் விடயத்தில் கூட பாரபட்சம் இடம்பெற்றிருக்கவில்லை. அதில் தமிழர்கள் 12.9 % என்ற அளவில் உள்வாங்கப்பட்டிருந்தனர். அதே காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களிலும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றிய ஆசிரியர்களில் 25.3 % தமிழர்கள் இருந்தனர். எனவே கல்வித்துறையிலும், கல்விசார் வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் புறமொதுக்கப்படவில்லை என்பது கண்கூடு. ஆனால் தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் 41 வீதமான இட ஒதுக்கீடுகளைப் பெற்று வந்தனர். பின்னாளில் அந்தத் தொகையானது சிங்கள அரசினால் தடுக்கப்படுவதாக 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான குற்றச்சாடாக முன்வைத்தது. 12 வீதமான தமிழர்கள் எவ்வாறு ஏனைய சமூகங்களுக்குமான இட ஒதுக்கீடுகளை நியாயமற்ற முறையில் பெற முடியும் என எழுந்த வாதங்களை தமிழர் தரப்புகள் இனப்பாகுபாடாக காட்ட முற்பட்டன. அந்த மிகையான இட ஒதுக்கீடு கூட யாழ் மாவட்டத்திற்கு மட்டுமே வாய்ப்பாக அமைந்ததும் வேறு கதை.

மொழி அடிப்படையில் இலங்கையில் பாகுபாடு இடம்பெறுவதான சூழ்நிலை சட்ட வரம்புகளுக்குள் இருக்கிறதா என பார்த்தாலும் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகவே அமையும். “லங்காராணி ” கதையில் அநேக இடங்களில் இந்த குற்றச்சாட்டு பரிமாறப்படுகிறது. ஆனால் இங்கு பாலர் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை தாய்மொழியில் கல்வி கிடைக்கிறது. அரசியலமைப்பின் 19 வது சரத்தின் பிரகாரம் சிங்களமும், தமிழும் தேசிய மொழிகளாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளன. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிக்கு விசேட அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரச அறிவுறுத்தல்களும், அலுவலக ஆவணங்களும், சுற்றுநிருபங்களும் அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் இடம்பெற வேண்டுமெனவும் அரச ஆணை இருக்கிறது. ஆனால் நிருவாக ரீதியில் சில தடங்கல்கள் இடம்பெற்றதனை நீதித்துறை வாயிலாக தீர்க்காமல் பிரிவினைவாதத்திற்கான எரி நெருப்பாக மாற்றி விடுவதில் அனைவரும் கவனமாக இருந்தனர்.

சமூக ரீதியில் தமிழர்களுக்கு எதிரான விசேட சட்டங்கள் இலங்கையில் இருந்திருக்கவில்லை. பிரிவினைவாத கொள்கைகளை வலியுறுத்தும் “லங்காராணி” வெளியான தறுவாயில் கூட தமிழர்களை இன அடிப்படையில் நசுக்கும் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என பலரும் வாழ்கிறார்கள். இங்கு சமூகங்களுக்கிடையில் பெரும்பாலும் சுமூகமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது. இங்கு ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் நலவுகளுக்குக் குறையாத வகையில் தமிழர்களும் அனுபவிக்கிறார்களென்பது உண்மை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் சமூகக் குழுக்களுக்குள் பிணக்குகளும், ஓரவஞ்சனைகளும் தற்செயலாக உருவாகி விடுவதுமுண்டு. இது உலகம் முழுவதும் நடைபெறக் கூடிய நிகழ்வாகவே இருக்கிறது. இலங்கையின் சமூகங்களுக்குள் உள்ளக ரீதியில் இடம்பெறும் ஓரவஞ்சனைகள், சாதிப் பாகுபாடுகள் மற்றும் மத பாகுபாடுகள், பிரதேச பாகுபாடுகள் சகஜமாக உள்ளன. அந்த ஓரவஞ்சனைகள் அனைத்தின் பின்னாலும் பல அரசியல் அதிகாரக் கெடுபிடிகள் செயலாற்றுவதாயுள்ளன. அவற்றை ஒவ்வொரு நிகழ்வுக்குமான பிரத்தியேக பார்வை மூலமாக அணுகுவதே நியாயமாகும். இலங்கையின் சிங்கள அதிகார வர்க்கமானது 1971 லும், 1988 லும் தீவிரவாதத்தை முன்னெடுத்த பல்லாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்றொழித்த அனுபவத்தோடுதான் தமிழ் பிரிவினைவாதத்தையும் எதிர்கொண்டதென்பது மறக்க முடியாதது.

ஆனால் 1956 ல் தொடங்கி 2009 வரையான அரை நூற்றாண்டு காலத்திலும் தமிழ் அரசியல் களம் உருவாக்கிய சிங்கள அரசுக்கு எதிரான பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய தேவை உருவான போது அங்கு சட்டத்திற்குப் புறம்பான வன்முறைகளும், மனிதாபிமானத்திற்குப் புறம்பான சட்டங்களும் கொண்டுவரப்பட்டதும் நிகழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் அவை பெரும்பாலும் “லங்காராணி ” யின் வரவுக்குப் பிறகான காலத்திலேயே கொண்டு வரப்பட்டன. அதாவது தமிழ் பிரிவினைவாதமானது தீவிர வன்முறை வடிவம் எடுத்ததற்குப் பிற்பாடுதான் ஜே.ஆர். அவசரகாலச் சட்டத்தையும், பயங்கரவாத தடைச் சட்டத்தையும் கொண்டு வந்தார். ஆக, தமிழ் தீவிரவாதமே இவ்விரு கொடிய சட்டங்கள் உருவாக்கப்படுவதற்குக் காரணமாய் அமைந்தது. தமிழ் ஆயுதக் குழுக்களின் ஒவ்வொரு செயல்பாட்டின் விளைவாகவும் சிங்களப் படைகள் தம்மை நவீன முறையில் வளப்படுத்திக் கொண்டு எதிரிகளைக் கொன்றொழிக்க முனைந்தன. எனவே இலங்கையின் இராணுவம் நவீனமயப்படுவதற்கும் தமிழ் தீவிரவாதமே தூண்டுதலாய் அமைந்தது. ஆரம்ப காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்களின் வதிவிடப்பரம்பலானது மிக மந்தமாகவே இருந்தது. ஆனால் தமிழர் பிரிவினைவாதம் தலைதூக்கியதிலிருந்து வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள இனப்பரம்பலை ஊக்குவிக்கும் தேவையை சிங்கள அரசு உணர்ந்தது. அதன் காரணமாகவே பல்வேறு திட்டமிட்ட குடியேற்றங்களையும் அரச உதவியுடன் முன்னெடுத்தது. ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள மக்களின் தொகை மிகையாக அதிகரித்ததற்கு தமிழ் பிரிவினைவாதமே காரணமாகும்.

1983 ற்குப் பிறகு போர் மெதுவாகத் தீவிரமடைந்து தொண்ணூறில் அது கடும் போக்கை எட்டிய போது வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள இராணுவத்தின் பிரசன்னமானது மலையளவாக மாறியிருந்தது. இதன் மூலம் இவ்விரு மாகாணங்களிலும் சிறுபான்மை மக்களின் சனத்தொகை வீதம், பொருளாதார நிலை, பண்பாட்டுத் தனித்துவங்கள் அனைத்திலும் நெருக்கடிகள் உருவாகின. இராணுவத்தின் தயவில் புதிய சிங்கள குடியிருப்புகள் உருவாகின. அந்தக் குடியிருப்புகளுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கியதோடு உள்ளூர் கிராமவாசிகளும் ஆயுதமயப்படுத்தப்பட்டனர். இராணுவம் நிலைகொண்ட பிரதேசமெங்கும் பௌத்த மதத்தலங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை இராணுவமே பராமரித்தது. இதனால் வடக்கிலும், கிழக்கிலும் சிறுபான்மையினருக்கு நிகரான அளவில் சிங்களமும், பௌத்த கலாசாரமும் பேணப்படும் நிலை உருவானது. எனவே தமிழ் பிரிவினைவாதமும், போரும் தொடர்ந்தேர்ச்சியாக அதிகரித்துச் சென்ற காலம் முழுவதும் சிங்கள ஆதிக்கமானது அதிகரித்திருக்கிறது. இதனை தமிழ் பிரிவினைவாதத்தின் உப விளைவாக நோக்காமல் விடுவது தவறாகும்.

“லங்காராணி ” கதையில் கூறப்படும் சிங்கள அரசாங்கங்களின் தமிழர் விரோத நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் குறைவானதுதான். அதற்குப் பழியாக வீராப்புக் கொண்டு பிரினைவாதப் போராட்டத்தை முன்னெடுத்த போது அனுபவித்து இன்றுவரை தொடரும் அழிவுகளும், கொடுமைகளும் மிக அதிகமானது.

அவசரகால சட்டமும், பயங்கரவாத தடை சட்டமும் மேலோட்டமான பார்வைக்கு நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கும் பொதுவான சட்டம் போலவே தோன்றினாலும், தமிழ் பிரிவினைவாதத்தை கடுமையாக நசுக்க கொண்டு வரப்பட்ட கருவியாகவே கருத வேண்டும். ஆனால் 1977 வரை இந்தச் சட்டங்கள் தமிழரை நசுக்க உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்பது முக்கியமானது. இந்தச் சட்டங்களின் மூலமாக கொடூரமான அரச பயங்கரவாதம் நிகழாத காலத்தில்தான் “லங்காராணி ” பிரிவினைக்கான விதையை ஊன்றுகிறது.

பிரிவினைப் போராட்டத்தை தமிழ் இயக்கங்கள் ஆரம்பித்ததற்குப் பிற்பாடு தோன்றிய இக்கட்டான சூழலை சிங்கள அரசு தமிழ் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளூடாக அணுக முற்பட்டது. அந்த இன ஒதுக்கல் நடவடிக்கைகளுக்குத் துணை போன சட்டங்களாக அவசரகால சட்டமும், பயங்கரவாத தடைச் சட்டமும் அமைந்திருந்தன. அந்தச் சட்டங்களின் மூலம் இலங்கைச் சமூகங்களிலிருந்து தமிழர்கள் தனியாக வேறுபடுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். அந்த வகையில் தமிழர்களுக்கு எதிரான சமூக அடக்குமுறைச் சட்டங்களை இலங்கையரசு உருவாக்கிப் பிரயோகித்தமை உண்மை. ஆனால் அவற்றுக்கான தார்மீக உந்துதல்களை உருவாக்கியது தமிழ்ப்பிரிவினைவாதமே . “லங்காராணி” யின் விவாதங்களும் அதற்கு உரமூட்டுபவையாகவே அமைந்திருக்கின்றன.

எனவே எந்தவொரு பிரதிபலனையும் கொடுக்காத போர்க்களத்தை அகதிப் பயணத்தில் திட்டமிடுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும் ? இந்த வகையாகப் பல்கிப் பெருகும் அனுபவங்களின் அர்த்தத் திரட்சிகளினால் சிதறும் கேள்வியுடன் வாசிப்பை முடிப்பதுதான் பொருத்தமானது.

(சில தகவல்களும், தரவுகளும் Centre for Ethnic Amity எனும் நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட, THE ETHNIC PROBLEM IN SRILANKA, A Collection of Articles and Essays எனும் நூலில் இருந்து பெறப்பட்டவை.)

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *