போருக்குப் பிந்திய அரசியல்: முன்னெடுப்பும் சறுக்கலும் – கருணாகரன் (04)

போருக்குப் பிந்திய அரசியலுக்கான முதல் அடையாளமாக இரண்டு விடயங்களைத் தெளிவாக்கியது மக்களிடம் திரட்டப்பட்ட விடயங்கள். முதலாவது, மக்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் இனங்காண்பது. அதற்குரிய தீர்வுகளைக் கண்டறிவது. இதற்கான பொறிமுறைகளை, வழிமுறை, அணுகுமுறை, செயன்முறைகளை உருவாக்குவது. இதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அணிகளையும் அரசியற் சக்திகளையும் கண்டு, அவற்றை வலுப்படுத்துவது. கூடவே ஒருங்கிணைப்பது. அல்லது புதிய சக்திகளை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள அரசியற் சக்திகள் புதிய நிலைமைக்கு ஏற்றவாறு தம்மைத் மாற்றித் தகவமைத்துக் கொள்ளவில்லை என்றால் புதிய சக்திகளை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திப்பது. இது மிகமிகக் கடினமான ஒரு அகபுறப் பிரச்சினைதான். ஆனாலும் இதைச் செய்வது அன்றைய நிலையில் அவசியமானது என்பதால் எப்படியாவது இதை நிறைவேற்றுவோம் என்று முடிவெடுத்தோம்.

இரண்டாவது, போருக்குப் பிந்திய அரசியல் என்ன? அதனுடைய முறைமை, இலக்கு, அதற்கான தந்திரோபாயம், அதற்கான செயற்பாட்டு வடிவம், அதை முன்னெடுக்கும் தரப்புகள், அவற்றை வலுவாக்கம் செய்தல் என வகுக்கப்பட்டது. இதுவும் கடினமான – சவாலான ஒரு காரியமே. தமிழ் அரசியற் சிந்தனையும் அரசியல் முறைமையும் போருக்கு முந்திய (1960, 1970 களில்) போர்க்கால (1980 – 2009) அடிப்படையைக் கொண்டேயிருக்கிறது. இது மாறுதலடைய வேண்டும். ஏனெனில் போருக்குப் பிந்திய சூழல் என்பது உள்நாட்டிலும் உலக அளவிலும் கொண்டிருக்கும் மாற்றங்களின் அடிப்படையிலானது. அதாவது புதிய யதார்த்தத்தைக் கொண்டது. இதனைக் கவனத்திற் கொள்ளாத அரசியல் செயற்பாடுகள் எப்போதும் பிரச்சினைக்குரிய ஒன்றாகவே இருக்கும்.

எதற்கும் இந்த இரண்டைப்பற்றியும் ஒரு தெளிவான வரைபை முதலில் உருவாக்க வேண்டும். இதற்கு கள யதார்த்தத்தைத் தெரிந்தவர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர், பெண் ஆளுமைகள், இளைய தலைமுறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், புலம்பெயர் தேசத்தில் மாற்று அரசியல் பிரக்ஞையோடு உள்ளவர்கள் என பல்வேறு ஆளுமைத் தரப்புகளை ஒரு கட்டமைப்பாக உருவாக்கம் கொள்ளுவது அவசியம். அப்படி இருக்கும்போதுதான் ஒரு விரிவான அறிதலையும் திட்டத்தையும் உருவாக்க முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் இதைச் செய்வது அப்போதைய சூழலில் இலகுவானதாக இருக்கவில்லை. ஏனென்றால் அப்பொழுதுதான் வன்னி மாவட்டங்களில் மீள்குடியேற்றம் நடந்து கொண்டிருந்தது. அங்கே போரிலும் அகதி முகாம் வாழ்க்கையிலும் களைத்துப்போனவர்களும் கையில் எதுவுமில்லாதவர்களுமே அதிகமாக இருந்தனர். மறுபக்கத்தில் சந்தேகத்தின்பேரில்  இராணுவ நெருக்கடியும் புலனாய்வுப் பிரிவும் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தன. 

இதனால் இவர்களை இந்தப் பணிகளில் வெளிப்படையாக இணைத்துக் கொள்வதில் நடைமுறைப்பிரச்சினைகளிருந்தன. எதையாவது நல்லபடியாகச் செய்ய வேண்டும் என்ற விருப்பமிருந்தாலும் இந்த நெருக்கடிகளால் இவர்களால் உரியவாறு பங்களிப்பைச் செய்ய முடியவில்லை. அல்லது அதில் போதாமைகளிருந்தன. ஆனாலும் பலரும் ஆர்வத்தோடிருந்தனர். பட்டறிவு இந்த ஆர்வத்தைக் கொடுத்திருந்தது. அதேயளவுக்கு இவர்களிடம் சில கேள்விகளும் இருந்தன. எல்லாம் சரிதான். இருந்தாலும் இது எந்தளவுக்குச் சாத்தியம்? இதனை யாழ்ப்பாணச் சமூகம் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளும்? என்ற கேள்விகள் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்தது. தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இன்னும் யாழ்ப்பாணச் சமூகத்தின் உணர்நிலையும் தீர்மானமுமே ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் என மாறுவதாக உள்ளது. என்பதால் தவிர்க்க முடியாமல் யாழ்ப்பாணச் சமூகத்தின் உணர்நிலையும் நிலைப்பாடும் என்னவாக இருக்கும் என்று பார்ப்பது இவர்களைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியவில்லை.

இதேவேளை யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற நகரங்களில் வாழ்ந்தவர்கள் இன்னொரு வகையான மனநிலையிலிருந்தனர். ஒன்று, இது எந்தளவுக்குச் சாத்தியமானது? இரண்டாவது, இது இப்போதைக்கு – (அன்றைய சூழலுக்கு) எவ்வளவு பொருத்தப்பாடுடையது? மூன்றாவது இதை எப்படி வளர்த்தெடுப்பது, பலப்படுத்துவது என்பது? நான்காவது, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாறாக இன்னொரு தெரிவை நாம் செய்து வெற்றிகாண முடியமா? என்ற சந்தேகம்.

இப்படிப் பலவிதமான குழப்ப நிலையில் இவர்களிற் பலரும் இருந்தனர்.

அன்றைய நிலையில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீது பெரும்பாலான தமிழர்களுக்கு இருந்த கசப்பான மனநிலையில் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வலுவான சக்தியாக வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் சர்வதேச ரீதியாக தமிழர்களுடைய அரசியலுக்குச் சாதகமான நிலையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடிருந்தனர்.

ஆனாலும் மாற்று அரசியல் தேவை ஒன்று அவசியம் என்ற உணர்வு இதில் பாதிப்பேருக்கும் அதிகமானோரிடமிருந்தது. குறிப்பாக கூட்டமைப்புத் தொடருகின்ற அரசியல் யதார்த்த நிலைக்கு பொருத்தப்பாடுடையதில்லை என்பபோர் இந்த மாற்று அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தனர். அதனால் இந்த முயற்சியை அவர்கள் வரவேற்றனர். இது ஒரு வெற்றியே. எனவே, முடிந்தளவுக்கு வேலைகளைச் செய்வோம் என்ற தீர்மானத்தோடு மெல்ல மெல்ல அங்குமிங்குமாக வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள். ஆனாலும் தயக்கம் ஒரு தடித்த நிழலைப்போல இவர்களின் அசைவைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது.

இருந்தாலும் ஆரம்ப கட்டச் சந்திப்புகளிலும் உரையாடல்களிலும் கணிசமான தொகையினர் ஈடுபட்டு வந்தனர். பங்கேற்றனர். இது ஓரளவுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்தது. இதை வைத்துக் கொண்டு நாம் அரசியற் கட்சிகளில் உரையாடக் கூடிய தரப்புகளோடு மெல்ல மெல்ல தொடர்பாடலை ஆரம்பித்தோம். இதற்கு ஒரு சினேகபூர்மான அணுகுமுறை தேவை என்று அறியப்பட்டது. அப்படியென்றால்தான் பலரும் நெருக்கமாக வருவார்கள். நாம் எண்ணுவதையும் நமது நோக்கத்தையும் அவர்களால் நம்பிக்கையோடு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே, அதற்கேற்ற மாதிரி அரசியற் கட்சிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் தமக்கு நெருக்கமான அரசியற் கட்சிப் பிரதிநிதிகளிடம் மிகப் பக்குவமாகச் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றிச் சொல்லி விளக்கமளிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. பிறகு அடுத்த கட்ட வேலைகளைப் பற்றித் திட்டமிட்டுக் கொள்ளலாம் எனவும். அத்துடன், சமூகச் செயற்பாட்டுத்தளத்தில் இயங்குவோருக்கு அணுக்கமாக இருப்போருடனும் தொடர்புகளும் உரையாடல்களும் தொடங்கப்பட்டன.

அரசியற் பிரதிநிகளையோ தலைவர்களையோ உரையாடல் வலையமைப்புக்குள் கொண்டு வருவதாக இருந்தால் அது நம்முடைய நோக்கத்துக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும். அந்த வெற்றி மக்களுக்குரிய வெற்றியாக அமையும். ஏனென்றால் நமது நோக்கம் “மக்கள் அரசியல்” ஒன்றை இங்கே வலுவாக்கம் செய்வதே. ஆனால், இது பிரமுகர் அரசியலுக்கு எதிரானது, மாறானது. என்பதால் பிரமுகர் அரசியல் வழியில் பயணிப்போர் இதனை உடனடியாக அங்கீகரிக்க மாட்டார்கள். அப்படி அங்கீகரித்தாலும் அதைப் பகிரங்க வெளியில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதோடு பிரமுகர் அரசியல் என்பது ஒரு வகையில் அவர்களுடைய இருப்பு, அடையாளம், நலன் என்ற சுய நோக்கங்களோடு பின்னிப்பிணைந்தது என்பதால் இதைச் செய்வதில் நிறைய நடைமுறைச் சவால்கள் உண்டெனத் தெரிந்திருந்தோம். முதற்கட்டத்தில் ஒத்துழைப்பவர்கள் கூடப்பிறகு மெல்ல மெல்ல நிறம் மாறி உருமாறுவர் என்பதையும் உணர்ந்திருந்தோம்.

ஆகவே, இதையும் கவனத்திற் கொண்டே நம்முடைய வேலைத்திட்டம் வகுக்கப்பட்டது. யாரையும் புறமொதுக்குவதில்லை. அதேவேளை எல்லோரையும் ஒரே கூடைக்குள் கொண்டு செல்லவும் முடியாது. முதலில் ஒரு புரிந்துணர்வோடு மக்கள் அரசியலைப்பற்றி, மாற்று அரசியற் தேவையைப்பற்றி  எல்லோரையும் சிந்திக்கப் பண்ணுவோம். கடந்த காலத் தவறுகளுக்கு ஆளை ஆள் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக நம்முடைய (தமிழ் மொழிச் சமூகங்களுடைய) நிலை எப்படி உள்ளது. ஆகவே அதிலிருந்து நம்முடைய அரசியலை எப்படிப் புதியதாக, பலம் பொருந்தியதாக வளர்த்துச் செல்லலாம் என்று பேசுவோம் என முடிவு செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டவர்கள் தொடக்கப்புள்ளியாக அமையக் கூடிய வகையில் தமது பணிகளைச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பமாகின. இதன் சாதக – பாதக அம்சங்களை மதிப்பிட்டுக் கொள்வதற்கு ஒரு சுயாதீனக்குழுவும் உருவாக்கப்பட்டது. இதன் வளர்ச்சி எப்படி என்று அவதானித்து ஆய்வு ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கையைச் செய்யலாம் எனவும் பங்காளிகள் கேட்டுக் கொண்டனர். இந்த அவதானிப்புச் சொல்கின்றவற்றின் அடிப்படையில் அதற்குப் பிறகு சிக்கலான விடயங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது நம்முடைய எண்ணமாக இருந்தது.

இதொன்றும் புதியதல்ல. ஏற்கனவே இடதுசாரிகள் மேற்கொண்ட அரசியற் செயல்முறைக்கு நெருக்கமானது. அதாவது மக்கள் நலன் மையப்படுத்திய அரசியல். பின்னாளில் விடுதலை இயக்கங்கள் இதைத் தமக்கேற்ற வகையில் மக்கள் இயக்கமாகக் கட்டமைத்துச் செய்த, செயற்படுத்திய மாதிரியேயாகும். ஆனால், யுத்தம் முடிந்த பிறகு மேற்கொள்ளப்பட்டு வரும் வினைத்திறனும் தூர நோக்குமற்ற அரசியலை (அன்று 2013, 14 க்குப் பிறகான அரசியலை) ஆபத்து அரசியலை – எப்படி முறியடிப்பது? எப்படி எதிர்கொள்வது? அரசியலில் ஒரு ஒதுங்கல் நிலை மக்களிடம் காணப்படுகிறது. அதை எப்படி இல்லாமல் செய்து, அவர்களை முழு ஆர்வத்தோடு ஈடுபட வைப்பது எனவும் சிந்திக்கப்பட்டது.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளிலும் பேச்சுகளிலும் எல்லோரும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து இரண்டு மூன்று சுற்றுகள் பலரோடும் பேசப்பட்டது. ம

ஆனால், மூன்றாவது சுற்றோடு நிலைமை சேடமிழுப்பதைப்போல ஆகி விட்டது. இந்த அரசியல் முன்னெடுப்புக்கு அரசியற் கட்சிகளிடத்திலே ஆர்வம் குறைந்து காணப்பட்டது. அவர்கள் சனங்களிடம் இறங்கி வேலை செய்வதற்கு தயக்கம் காட்டினர். சில தரப்புகள் அதற்கான நிதி, ஊடகப் பலம் போன்றவை போதாது என்ற காரணங்களை முன்வைத்தன. நிதி இல்லாமல் எதைப்பற்றித் திட்டமிடுவதும் பொருத்தமானதல்ல. இன்றைய சமூக பொருளாதார நிலை வேறாக இருப்பதால், அரசியல் அமைப்புக்கும் அதன் வேலைகளைச் செய்வோருக்கும் உதவியாக நிதி வேணும். வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு சிறிய அளவிலேனும் நிதி இல்லாமல் எந்த உயர்ந்த நோக்கத்தையும் உன்னதமான திட்டத்தையும் செயற்படுத்த முடியாது. முன்னகர்த்த முடியாது என்று தெரிவித்ததன. இது மறுக்க முடியாத உண்மையே. ஆனால், தொடக்கத்தில் சிறிய அளவிலேனும் வேலை செய்து நம்பிக்கையை ஊட்டினால்தான் அதன் மீது நம்பிக்கை வைத்து யாரும் நிதிப்பங்களிப்பைச் செய்வார்கள். ஆகவே தொடக்கத்தில் சிரமங்களை எதிர்கொண்டே தீர வேண்டும் என்று சிலர் தமது அபிப்பிராயங்களைச் சொன்னார்கள். ஆனாலும் இன்றைய நிலையில் அதற்கான சாத்தியங்கள் குறைவு. முன்னரைப்போல ஆதரவாளர்களின் வீடுகளில் முழுத்தேவைகளையும் பெற முடியாது. சைக்கிள்களை மட்டும் பாவித்து அரசியற் பணிகளைச் செய்த சூழல் மாறி விட்டது. தொலைபேசிப் பாவனை, பயணச்செலவு போன்றவற்றுக்கேனும் நிதி வேணும். இவ்வாறு நியாயமான காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இதற்கான வழியைக் கண்டறிவதில் திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை. என்பதால் இந்த முயற்சியில் மெல்ல மெல்ல பின்னடைவு ஏற்பட்டது. அது சலிப்பை மட்டுமல்ல, கோபத்தையும் விரக்தியையும் பழியுணர்ச்சியையும் ஊட்டியது.

(தொடரும்)

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *