தேர்தல் ! கொண்டு வருமா ? மாறுதலை – சக்தி சக்திதாசன் லண்டன்

அடுத்த வியாழன் அதாவது 12.12.2019ம் ஆண்டு இங்கிலாந்தின் அரசியல் களத்தில் ஒரு மாற்றம் நிகழவிருக்கிறது,

ஆமாம் இங்கிலாந்தின் வரலாற்றில் அது தனது 57வது பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது.

1923ம் ஆண்டுக்கு பின்னால் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தேர்தல் இதுவேயாகும். டிசம்பர் மாதம் என்பது இங்கிலாந்தின் காலண்டரில் மிகவும் பரபரப்பான மாதமாகும்.

டிசம்பர் 25, அதாவது கிறீஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை நோக்கியே மக்களின் எதிர்பார்ப்புகள் இருக்கின்றது. அப்பண்டிகயை ஒட்டி வரும் விடுமுறைத்தினங்களை நோக்கிய இங்கிலாந்து மக்களின் ஆயத்தங்கள் அமோகமாக நிறைவேற்றப்படும் மாதமாகும்.

மலிவு விற்பனைகள் அமோகமாக அறிவிக்கப்படும் மாதம் . அனைத்து மக்கள் மனங்களிலும் அடுத்தவரை நோக்கிய பார்வையில் ஒருவித கனிவும், நட்பும், பரஸ்பர புரிந்துணர்வும் முன்னிற்கும் ஒரு வேளை.

ஆனால் இவ்வருட டிசம்பர் மாதத்தில் நாட்டின் மக்களிடையே பிளவுகள் காணப்படும் ஒரு மாதமாகத் தென்படுகிறது.

ஜாடியில் அடைக்கப்பட்ட ஒரு பூதத்தைத் திறந்து விட்டு விட்டு அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஒரு நிலையிலேயே இங்கிலாந்து இன்று தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வுக்கான சர்வஜன வாக்கெடுப்பின் தாக்கம் கடந்த மூன்றரை வருடங்களாக நாட்டினையே பிளவு படுத்தி வைத்திருக்கின்றது என்பதுவே உண்மையாகிறது.

இதுவரை காலமும் ஐனநாயகத்தின் வரைவிலக்கணமாகத் திகழ்ந்த இங்கிலாந்து அரசியல் மேடை இன்று ஒரு சங்கடமான சுழலுக்குள் பிரயாணித்துக் கொண்டிருக்கிறது.

“ எனது கருத்தை எதிர்ப்பதற்கான உனது உரிமையை நான் பாதுகஅப்பேன் ” எனும் வகையில் இயங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்தின் அரசியல் நாகரீகம் இன்று அவசர கட்டத்தை எட்டியிருப்பது போலவே தென்படுகிறது.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல தன்னலமற்ற அரசியல் விமர்சகர்களின் கருத்தும் கூட .

ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாண அணியும் , பிரெக்ஸிட்டுக்கு எதிரான அணியும் எனும் வகையில் நாடு இன்று பிளவுபட்டு அணிவகுத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தான் இந்த ப்ரெக்ஸிட் எனும் துருப்புச் சீட்டை வைத்து பிரதமராகிய பொரிஸ் ஜஅன்சன் அவர்கள் இந்தப் பொதுத்தேர்தலை நடத்த முன்வந்திருக்கிறார்..

பொதுத்தேர்தல் நடத்தப்பட்டாலன்றி நாட்டின் நிலையைச் சீராக்க முடியாத நிலையை எட்டி விட்டது என்பது ஓரளவு உண்மையே.

ப்ரெக்ஸிட்டுக்கான சர்வஐன வாக்கெடுபுக்கு வாக்களித்த தொகையில் 52% மானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பது உண்மையே. அவர்களின் ஜனநாயக வெளிப்பாட்டினை நடைமுறைப்படுத்த முடியாத வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலவிதமான முட்டுக்கட்டைகளை போட்டதினால் பாராளுமன்றம் முடப்பட்டதும் உண்மையே..

இதற்குக் காரணம் அரசமைத்து இருந்த கன்சர்வேடிவ் கட்சி அரசு ஒரு சிறுபான்மை அரசாக இருந்ததுவே. வட அயர்லாந்துக் கட்சியான டீ.யூ.பி எனும் கட்சியின் அரசுக்கு வெளியிலான தார்மீக ஆதரவின் அடிப்படையினால் தான் அவர்களது அரசு இயங்கிக் கொண்டிருந்தது.

ப்ரெக்ஸிட்டுக்கு எதிரான அரசைச் சேர்ந்த பல பராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்த அரசினால் ப்ரெக்ஸிட் சம்பந்தமான எந்தப் பிரேரணையையும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது…

நாம் தெரிவு செய்தனுப்பிய பாராளுமன்ற அங்கத்தினர்கள் தானே எமது ஐனநாயக கோரிக்கையை நிறைவேற்றுவதுதானே அவர்களது கடமை என்பது ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவான மக்களின் கோஷம்.

அது எப்படி முடியும் ? 48% மான நாம் ப்ரெக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்திருக்கிறோமே ! எனவே எங்களது அபிலாஷையை யார் நிறைவேற்றுவது ? ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் முட்டுக்கட்டைகள் சரியானதே என்கிறார்கள் ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்கள்.

சரி பாராளுமன்றத்தில் இந்த முட்டுக்கட்டைகளை போடும் உறுப்பினர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் ?

பெரும்பான்மை மக்களின் அபிலஅஷை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எனும் ப்ரெக்ஸிட் தான் என்றாலும் அவ்வெளியேற்றம் எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்பதில் அவர்களுக்குள் பேதமை இருக்கிறதே !

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவிதமான உடன்படிக்கையுமின்றி , இப்போதுள்ள பொதுச்சந்தையின் அனுகூலங்களை விட்டு எதுவித வர்த்தக உடன்படிக்கையுமின்றி வெளியேறுவது ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தைப் பொறுத்தவகையில் தற்கொலைக்குச் சமமானது. எனவே மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை , ப்ரெக்ஸிட்டை நிறைவேற்றலாம் ஆனால் அதற்குரிய தகுந்த உடன்படிக்கையுடன் மட்டுமே. அதுவரை பாராளுமன்ற ஜனநாயகக் கோட்பாடுகளுக்கமைய நாம் ப்ரெக்ஸிட்டை தடுப்போம் என்று வாதிடுகிறார்கள்.

இத்தனை இக்கட்டுக்களுக்கும் மத்தியில் இப்போது நாம் பொதுத்தேர்தல் எனும் சந்தியில் நிற்கிறோம். இந்தப் பொதுத்தேர்தலின் மூலம் தான் மக்கள் நாம் அடுத்துச் செல்லப்போகும் வழியைத் தெரிவு செய்யப்போகிறார்கள். அவ்வகையில் இப்பொதுத்தேர்தல் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொன்று..

சரி இனி இந்தப் பொதுத்தேர்தலின் நிலைப்பாட்டைப் பார்ப்போம்..

இந்தப் பொதுத்தேர்தலின் முடிவினை நிர்ணயிக்கப் போகும் அன்றி இதிலே தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் கட்சிகள் ஒரு ஐந்து என்பதுவே உண்மை.

 1. கன்சர்வேடிவ் கட்சி
 2. லேபர் கட்சி
 3. லிபரல் டெமகிரட்ஸ் கட்சி
 4. ப்ரெக்ஸிட் கட்சி
 5. ஸ்கொட்லஅந்து தேசிய முன்னனிக் கட்சி.

இவை தவிர வேறும் சில உதிரிக் கட்சிகள் போட்டியிடுகின்றன ஆயினும் கடந்தகால தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிற்கும் இரு கட்சிகளும் ஏறக்குறைய ஒரு தொங்கு பாராளுமன்ற நிலையை அடைந்தாலொழிய இந்த உதிரிக் கட்சிகளின் முடிவுகள் தாக்கத்தைக் கொடுப்பதற்கு சாத்தியமில்லை.

இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றில் கூட்டாட்சி அரசாங்கம் என்பது இரண்டு அல்லது மூன்றுமுறையே இடம்பெற்றிருக்கிறது…

ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வு மட்டும் தானா இந்தப் பொதுத்தேர்தலின் நோக்கம ? தெரிவு செய்யப்படும் அரசாங்கம் ஐந்துவருட கால ஆயுள் கொண்டது, ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வினத் தவிர்த்து இன்றைய ஐக்கிய இராச்சிய மக்களின் வாழ்க்கை பிரச்சனைகள் எத்தனையோ இருக்கிறன. அவைகளில் சில,

 1. வைத்தியசாலகளில் சிகிச்சைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கையின் அதிகரிப்பு, வைத்தியர்கள், தாதிகள், வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரச் சேவையாளர்களின் பற்றாக்குறை
 2. நாட்டின் குற்றச்செயல்கள் அதிகரிப்பு, போலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை
 3. நாட்டின் கல்வித் தராதரப் பாதிப்பு
 4. நாட்டின் போக்குவரத்துத்துறையில் ஏற்படும் ஐன நெருக்கடி. புகையிரத சேவையில் சீர்கேடு.

நான் மேலே குறிப்பிட்டவை சிலவே , இப்பிரச்சனைகளுக்கான முடிவை யார் சரியான முறையில் கையாளப் போகிறார்கள் என்பது இந்தத் தேர்தலில் நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியம். ஆயினும் ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வு மட்டும் இந்தத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்குமேயானால் அது எவ்வகையிலான ஒரு தீர்வை மக்களுக்கு அளிக்கப் போகிறது என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே.

சரி இனி நான் மேற்குறிப்பிட்ட கட்சிகளின் நிலைப்பாட்டினைப் பார்ப்போமா?

கன்சர்வேடிவ் கட்சி – கடந்த பத்து வருட காலமாக கன்சர்வேடிவ் கட்சியே அதிகாரத்திலிருந்திருக்கிறது, 2008ம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவினால் ஐக்கிய இராச்சியம் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டதையடுத்து பதவிக்கு வந்த கன்சர்வேடிவ் கட்சி அமைத்த கூட்டரசாங்கம் பொருளாதாரச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலையிருந்தது. அதனால் அவர்கள் பொதுச்சேவைக்காகச் செலவு செய்யப்பட்ட நிதியின் அளவை மிகப்பெரும் அளவில் கட்டுப்படுத்தினார்கள். அதன் விளவாக போலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை சுமார் 20000 இனால் குறைக்கப்பட்டது. அதேபோல வைத்திய சுகாதாரம், கல்வி, மற்றும் வேலையற்றோருக்கு அளிக்கப்பட்ட உதவித்தொகை என்பன மிகப்பாரிய அளவில் மட்டுப்படுத்தப்படது, இவர்களின் இந்தப் பொருளாதாரத் திட்டமே இன்று நாடு கண்டிருக்கும் பின்னடைவுக்குக் காரணம் என்பது எதிர்க்கட்சியினரின் வாதம்.

தாம் பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தால்

 1. பிரதமர் பொரிஸ் ஜான்சன் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டியிருக்கும் வெளியேற்ற உடன்படிக்கையின் அடிப்படையில் 2020 ஜனவரி 31ம் தேதி ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.
 2. 20000 அதிக போலிஸ் உத்தியோகத்தர்களை பணியிலமர்த்துவோம்
 3. 50000 அதிக தாதிமாரை பணியிலமர்த்துவோம்
 4. 50 மேலதிக வைத்தியசாலைகள் அமைப்போம்
 5. வைத்தியத்துறை உத்தியோகத்தர்களின் உடனடிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாடுகளிலிருந்து தகுதியானவர்களின் விண்ணப்பத்திற்கான கட்டணத்தைக் குறைத்து விரைவாக விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்

என்று பல திட்டங்களைச் சாராமாரியாகப் பொழிந்து தள்ளுகிறார்கள் . சரி கடந்த 10 வருடங்களாக நீங்கள் தானே அதிகாரத்திலிருந்தீர்க:ள் அப்போது ஏன் இதையெல்லாம் நிறைவேற்றத் தோன்றவில்லை எனும் கேள்வி எழத்தான் செய்கிறது..

லேபர் கட்சி – பத்து வருட காலமாக எதிர்க்கட்சி எனும் ஸ்தானத்தையே தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் . லேபர் கட்சிக்கு இருக்கும் முதல் பிரச்சனை அவர்களது தலைவரே ! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? பத்து வருடங்களுக்கு முன்னால் ஜெர்மி கோர்பன் அவர்களிடம் நீங்கள் லேபர் கட்சியின் தலைவராகப் போகிறீர்கள் என்று யாராவது சொல்லியிருந்தால் அவரே தரையில் விழுந்து சிரித்திருப்பார். சரியான நேரத்தில் சரியான இடத்திலிருந்ததால் அவர் தலைவராகி விட்டார். லேபர் கட்சியைப் பொறுத்தவரை அது அவர்களைப் பற்றிய பிழையான பொழுதே ! ஜெர்மி கோர்பன் சிறுமான்மை மக்களுக்கஅக குரல் கொடுக்கக்கூடிய ஒரு ஒற்றை மனிதர். அவருக்கு லேபர் கட்சியைப் போன்ற ஒரு பெரிய அமைப்பினை பிரச்சனையின்றி நடத்தக்கூடிய அளவுக்கு தலைமைத்துவம் இருக்கிறதா? என்பது சந்தேகமே ! அவரை ஐக்கிய இராச்சியம் போன்றதொரு ஒரு நாட்டின் பிரதமராக வைத்துப் பார்க்கும் அளவுக்கு ஐக்கிய இராச்சியம் மக்களின் மனப்பான்மை மாறிவிட்டதா என்பது கேள்விக்குறியே ! எது எப்படி இருப்பினும் அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மாற்ற முடியாது.. மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்யும் அவர்மீது இருக்கும் மற்றொரு பெரிய குற்றச்சாட்டு அவர் யூத மக்களுக்கு எதிரானவர் என்பதுவே ! அவர் உண்மையிலே அத்தகைய எண்ணம் கொண்டிருப்பவராகத் தெரியவில்லை ஆனால் பாலஸ்தீனிய போராட்டத்துக்கு அவர் கொடுக்கும் நிபந்தனையற்ற ஆதரவும், சில பாலஸ்தீனிய பயங்கரவாத இயக்கங்களெனக் கருதப்பட்ட இயக்கங்களின் தலைமைத்துவத்துடன் அவருக்கிருந்த கடந்தகால நட்பும் அவருக்கு இத்தகைய ஒரு நிலைப்பட்டைக் கொண்டிருப்பவர் எனும் பட்டத்தைச் சூட்டியிருக்கிறது. அவரது கட்சியைச் சேர்ந்த சிலரது இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பட்டையும், யூத மக்களையும் ஒன்றிணைக்கும் சமூகவலைத்தள கருத்துக்கள் இத்தகைய அபிப்பிராயத்துக்கு வழிகோலுகின்றன,. இத இவரது வெற்றிக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கப்போகிறது. ஆனால் அவர் இதை முற்றுமுழுதாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் லேபர் கட்சி பல வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது

தாம் வெற்றியீட்டி அரசமைத்தால்

 1. ப்ரெக்ஸிட்டைப் பொறுத்தவரை லேபர் கட்சி தாம் ஒரு புது வெளியேற்ற உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்துடன் மூன்று மாத கஅலத்துக்குள் எட்டுவோம் என்றும் ஆறுமாத காலத்துக்குள் இவ்வெளியேற்ற உடன்படிக்கையையும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதில்லை எனும் நிலையையும் ஒன்றாக வைத்து மற்றொரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவோம் என்று கூறுகிறார்கள். குறிப்பாகத் தலைவர் ஜெர்மி கோபன் தான் பிரதமராகும் பட்சத்தில் ப்ரெக்ஸிட்டைப் பொறுத்தவரை நடுநிலை வகிப்பேன் என்கிறார். ஒரு நாட்டின் தலைவர் அந்நாட்டின் மிக முக்கிய பிரச்சனையில் எப்படி நடுநிலை வகிக்கலாம் என்பது இவரின் எதிர்ப்பாளர்களின் வாதம்
 2. போலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகரிப்பு
 3. வைத்திய, சுகாதார சேவையாளர்களின் அதிகரிப்பு
 4. கல்வித்துறையின் நிதி அதிகரிப்பு
 5. இலவச இணையத் தொடர்பு வசதி

என சுமார் 80 பில்லியன் பவுண்ட்ஸ் வரையிலான பல திட்டங்களை அள்ளி வீசுகிறார்கள்.

இதற்கெல்லாம் இவர்களுக்கு பணம் என்ன மரத்திலா காய்க்கிறது எனும் கேள்வி எழாமலில்லை

லிபரல் டெமகிரட்ஸ் : இக்கட்சி தனது புதிய தலவியான ஜோ ஸ்வென்சன் என்பவரின் கீழ் இத்தேர்தல் களத்தில் குதித்திருக்கிறது. இவர்களுக்கு இருக்கும் அனுகூலம் கன்சர்வேடிவ் கட்சியின் அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகிய சிலரும், லேபர் கட்சியிலிருந்து விலகிய சிலரும் இக்கட்சியில் இணைந்திருப்பதே ஆகும். இக்கட்சி அரசமைப்பது என்பது நடைபெற முடியாத ஒரு விடயம் என்பதை இக்கட்சியினரே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தர்ப்பம் பெரும்பான்மை பலமற்ற அரசமைக்க வேண்டிய கட்டத்துக்கு இரு பெரிய கட்சிகளில் ஒன்று வருமேயானால் இவர்கள் தமது செல்வாக்கை ஒரு கூட்டரசாங்கம் அமைக்க உபயோகிக்கலாம்.

 1. பிரக்ஸிட்டைப் பொறுத்தவரையில் இவர்களது கொள்கை தெளிவான ஒன்று. அதாவது எப்பாடுபட்டாவது ப்ரெக்ஸிட்டைத் தடுத்தே தீருவது

மற்றைய கட்சிகளைப் போன்று இவர்களும் பல கவர்ச்சியான திட்டங்களை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் நிறைவேற வேண்டுமானால் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலை வர வேண்டுமே என்று இவர்களது ஆதரவாளர்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது.

தமக்கு வாக்களிப்பது ஒன்றே ப்ரெக்ஸிட்டை நிறுத்துவதற்கு வழி எனும் இவர்களது வாதம் எவ்வளவுதூரத்துக்கு ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்..

ப்ரெக்ஸிட் கட்சி – இக்கட்சியின் பெயரே இதன் முக்கிய நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது. எவ்வித உடன்படிக்கையுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி விட்டு பின்பு உடன்படிக்கைகள் பற்றிப் பேசலாம் என்பதுவே இவர்களது நிலைப்பாடு. இக்கட்சியின் தலைவர் நைஜல் வெராஜ் அவர்களுக்கு ப்ரெக்ஸிட் ஆத்ரவாளர்கள் மத்தியில் பலமான ஆதரவு இருக்கிறது.

இவரது கட்சியின் தேர்தல் பிரவேசம் கன்சர்வேடிவ் கட்சியின் வாக்குகளைப் பிரித்து விடும் எனும் எதிர்பார்ப்பு இருந்தது. அதன் காரணமஅக இவர்கள் எந்தெந்தத் தொகுதிகளில் கடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றியீட்டியிருந்ததோ அந்தத் தொகுதிகளில் தாம் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டார்கள். லேபர் கட்சி வெற்றியீட்டிய தொகுதிகளில் சில ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது அந்தத் தொகுதிகளில் தாம் போட்டியிட்டால் லேபர் கட்சியின் வாக்குகளைப் பிரித்து கன்சர்வேடிவ் கட்சி வெற்றியீட்ட வாய்ப்புண்டு என்பது இவர்களது கணிப்பு . ப்ரெக்ஸிட் எனும் பூதத்தைக் கண்ணாடி சீசாவில் இருந்து வெளிக்கொணர முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் நைஜல் வெராஜ் என்று கூறினால் அது மிகையில்லை

ப்ரெக்ஸிட் நிகழ வேண்டும் என்பதைத் தவிர வேறு முக்கியமான திட்டங்களை இவர்கள் கொண்டிருக்கவில்லை..

ஸ்கொட்லாந்து தேசிய முன்னனிக் கட்சி – இந்தக் கட்சியின் முக்கிய நோக்கம் ஸ்கொட்லஅந்து நாட்டினைத் தனிநாடாக்க வேண்டும் என்பதே. இக்கட்சியினரே ஸ்கொட்லாந்து மாநில அரசமைத்திருக்கிறார்கள். அது தவிர கடந்த பாராளுமன்றத்தில் ஸ்கொட்லாந்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 39 பாராளுமன்ற அங்கத்தினர்களை இக்கட்சி ஐக்கிய இராச்சிய பராளுமன்றத்தில் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கொட்லாந்து ப்ரெக்ஸிட்டுக்கு எதிராகவே வாக்களித்திருந்தது. ப்ரெக்ஸிட் நிகழ்ந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமான ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்படுமாயின் அது ஐனநாயக விரோதச் செயல் என்றும் அப்படி நிகழ்ந்தால் தாம் ஸ்கொட்லாந்து பிரிந்து போவதற்கான ஒரு சர்வஐன வாக்கெடுப்பை ஸ்கொட்லாந்தில் நடத்துவோம் அதுவே தமது திட்டம் என்று கூறுகிறார்கள். இப்படி ஒரு வாக்கெடுப்பு 2014ம் ஆண்டு நிகழ்ந்து மிகவும் குறுகிய பெரும்பான்மையினால் அவர்களது கோரிக்கை தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்து மக்கள் பெரும்பான்மை பலத்துடன் தம்மை அடுத்த பராளுளுமன்றத்துக்கு அனுப்பும் பட்சத்தில் ப்ரெக்ஸிட்டை நிறுத்துவதற்கான சகல முனைப்புகளையும் தாம் எடுப்போம் என்று கூறுகிறார்கள்.

அனைத்துக் கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், காலநிலைச் சீர்கேட்டைத் தடுப்பதற்கான தடவடிக்கைகளையும் முக்கிய திட்டங்களாக அறிவித்திருக்கின்றன.ௐ க்ரீன்ஸ் எனும் உதிரிக் கட்சி இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பையே தமது பிரதான கொள்கையாக முன்வைத்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார்கள்.

எந்தத் தேர்தலிலும் இல்லாதவாறு இம்முறை ஐக்கிய இராச்சியத் தேர்தலில் பல இனவிரோதக் கோஷங்கள் தலைதூக்கியிருக்கின்றன.. இதற்கு முக்கிய காரணம் ப்ரெக்ஸிட்டினால் விளைந்த பிளவுகளே எனக் கருதப்படுகின்றது. அரசியல்வாதிகள் தேர்தல் வெற்றியொன்றையே முன்னிலைப்படுத்தி பல நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதால் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்ட மக்களின் கோபம் வெளிநாட்டவர் மீதும், சிறுபான்மையினர் மீதும் திரும்புகிறது என்பது பண்பட்ட அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

நேற்றிரவு தொலைக்காட்சியில் பிரதமராகக் கூடிய சாத்தியக்கூறு உள்ள பொரிஸ் ஜான்சனுக்கும், ஜெர்மி கோர்பனுக்கும் இடையிலான விவாதம் பல எதிர்பார்ப்புகளுக்கிடையில் நடந்தேறியது. இவ்விவாதத்தில் வெற்றியீட்டியவர் பிரதமர் பொரிஸ் ஜான்சன் என்பது பல பத்திரிகைகளின் கணிப்பு.

நடக்கும் என்பார் நடக்காது ! நடக்கஅது என்பார் நடந்து விடும் !

டிசம்பர் 13 அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்

சக்தி சக்திதாசன்

லண்டன்

7.12.19

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *