13ஏ யாப்புத் திருத்தமும் சிறுபான்மையினரும் – கலாநிதி அமீர் அலி,மேர்டொக் பல்கலைக்கழகம்,மேற்குஅவுஸ்திரேலியா


ஜனாதிபதி ராஜபக்ஸ அண்மையில் இந்தியப் நரேந்திரபிரதமர் மோடியைச் சந்தித்ததும் அங்கேபிரதமர் 13ஏ யாப்புத் திருத்தத்தை காலதாமதமின்றி அமுலாக்குமாறு ஜனாதிபதியை வேண்டியதும் யாவரும் அறிந்த ஒருவிடயம். இந்தவேண்டுகோள் சிறுபான்மை இனங்களுக்கு ஒருமன ஆறுதலைக் கொடுத்திருந்தது. ஆனால் இலங்கைக்குத் திரும்பியவுடன் ஜனாதிபதி அவர்கள் அத்திருத்தத்தை முற்றாக அமுல்படுத்துவதற்கு பெரும்பான்மைச் சமூகம் இணங்காதென்று கூறியது பெரும் ஏமாற்றத்தைஅளித்துள்ளது. நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தியுள்ள அரசியற் சிக்கலின் பிரதிபலிப்பே இந்தநிலை.
முன்னர் எப்போதும் இல்லாதவாறு நாடு இனரீதியாக இன்று பிளவுபட்டுக் கிடக்கிறது.‘தனிச் சிங்களவாக்குகளினாலேயே நான் வெற்றிபெற்றேன். ஆதலால் அவர்களின் விருப்பத்தை மீறிநான் செயற்படமாட்டேன். விரும்பினால் எனக்கு ஆதரவாய் இருங்கள், இல்லையேல் பரவாயில்லை’ என்பதுபோல் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொனிக்கின்றன. நாட்டைப் பொறுத்தவரை அவர் பதவியேற்ற சொற்பவாரங்களுக்குள் அமுல்படுத்திய சில மாற்றங்கள் வரவேற்கத் தக்கவையெனினும் சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரை அவரிடமிருந்துஎந்தவொரு சுமுகமான வார்த்தைகளேனும் இதுவரை வெளிவராதிருப்பது ஏமாற்றமே.


வடக்கையும் கிழக்கையும் பொறுத்தவரை அப்பிரதேசங்களுக்குத் தேவை அதிகாரப் பரவலல்ல, பொருளாதார அபிவிருத்தியே என்றும் பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மையினரின் தொழில்வாய்ப்பும் வருமானமும் பெருகுவதைத் தடுக்கமாட்டாது என்றும் அவர் அடிக்கடி வலியுறுத்திவருவது 13ஏ திருத்தத்துக்கு அவர் ஆதரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறதல்லவா? தன்மானத்துடனும் சமநிலையிலும் வாழவிரும்பும் எந்தஓரினமும் வாழ்க்கையின் சுகபோகங்களுக்காக அவற்றை விட்டுக்கொடுக்காதென்பதை ஜனாதிபதி ஏன் உணரமறுக்கிறாரோ? அதுமட்டுமல்ல, இன நல்லிணக்கமும் சமாதானமும் நிலைபெறாதபட்சத்தில் சீரழிந்துசெல்லும் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பலாமென அவரோ அவரின் ஆலோசகர்களோ நினைத்தால் அதுதவறென்பதையும் ஜனாதிபதி உணரவேண்டும். இலங்கையின் அண்மைக்கால அரசுகள் இழைத்த தவறுகளால் ஏதேச்சையான ஆட்சியொன்று தேவையென்பதைச் ஜனாதிபதியின் சிலஅபிமானிகள் சரிகாண்கின்றனர். ஆனால் அந்த ஆட்சி தனது ஆதரவாளர்கள் கேட்பதற்கெல்லாம் கண்மூடித்தனமாக ‘ஆமா’போடுவதல்ல, ‘இல்லை’ என்று சொல்லும் துணிவும் அதற்குவேண்டும்.


உதாரணமாக, சிங்கப்பூரை லீகுவான் யூ பிரதமராக ஆண்டபோது இலங்கையைப் போன்றும் மலேசியாவை ப்போன்றும் பாஷைப் பிரச்சினை தலைதூக்கியது. பெரும்பான்மை இனமான சீனர்கள் அவர்களின் மொழியே உத்தியோமொழியாகவேண்டுமெனக் கோஷமெழுப்பினர். தூரநோக்கும் நாட்டுப்பற்றுமுள்ள அந்தத் தலைமகன் அவர்களின் கோரிக்கையைத் துணிவுடன் மறுத்தார். அதன் விளைவை இங்கே விபரிக்கத் தேவையில்லை.
இந்தநிலையில் 13ஏ திருத்தம், திரு. விக்னேஸ்வரன் அண்மையில் கொழும்பு தெலிகிராப் மின்னிதழில்,வெளியுட்டுள்ளது போன்று சிறுபான்மை இனங்களின் அபிலாஷைகளை முற்றாக நிறைவேற்றாவிடினும் ஓரளவுக்காவது தீர்த்துவைக்கும் என்பது உண்மை. ஆதலால், அத்திருத்தத்தை அமுலாக்கக்கூடிய வழிவகைகளைக் கையாள்வதில் இரு சிறுபான்மை இனங்களும் ஒன்றுபடவேண்டும். அதன் தொடர்பாக திரு. விக்னேஸ்வரன் தனதுகட்டுரையில் முஸ்லிம்களைப ;பற்றி ஒருவார்தையேனும் கூறாதது கவலைக்குரியது. இணைந்து நிமிர்வதா பிரிந்து குனிவதா? இதுவே இன்று தமிழரையும் முஸ்லிம்களையும் எதிர்நோக்கும் ஒரேகேள்வி.


13ஏ திருத்தத்தைஅமுல் படுத்துவதற்கு இரண்டு வழிகளே உண்டு. ஒன்று இன்றுள்ள சூழலில் சாத்தியமாகாது. மற்றது இரு இனங்களும் ஒன்றிணைந்தால் சாத்தியமாகக் கூடிய வாய்ப்புண்டு. அடுத்த பொதுத்தேர்தலில் ஜனாதிபதித் தோதலில் தோல்வியுற்ற எதிர்க்கட்சிகளெல்லாம் ஒரே குடையின்கீழ் நின்று வெற்றிபெற்று அரசாங்கமொன்றை அமைக்கமுடியுமெனின் அத்திருத்தத்தை அமுலாக்கக்கூடிய வாய்ப்புண்டு. ஆனால் இனவாரியாகப் பிளவுபட்டுது வேஷத் தீயில் எரிந்துகொண்டிருக்கும் தோதற்களச் சூழலில் மகிந்த ராஜபக்ஸவின் இலங்கைப் பொதுஜன முன்னணியே ஆட்சியமைக்கும் வாய்ப்புகளே உண்டு. அதுமட்டுமல்ல,அந்த அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையான நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுமெனின் 13ஏ அமுலாக்கம் ஒருபுறமிருக்க,பத்தொன்பதாவது திருத்தமும் முற்றாக நீக்கப்பட்டு ராஜபக்ஸ யுகமே நீடிக்கக்கூடியஆபத்தும் உண்டு. ஆதலால் அந்த ஆபத்தையேனும் தவிர்க்கக்கூடியவாறு இரு சிறுபான்மையினரும் அடுத்த பொதுத் தேர்தலில் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயம்.


அதுஒருபுறமிருக்க, 13ஏ அமுலாக்கம் பற்றிப் பாரதப் பிரதமர்மோடி ஜனாதிபதிக்கு விடுத்தவேண்டுகோள் உண்மையிலேயே அவருக்கு இலங்கைத் தமிழர்மீதுள்ள பற்றுதலினாலா ( முஸ்லிம்கள ;மீது அவருக்குப் பற்றில்லை என்பது உலகறிந்த உண்மை) அல்லது தமிழ் நாட்டவரின் நெருக்குதலினாலா அல்லது இலங்கையின் சீனஉறவைக் குலைப்பதற்கு அவர் கையாளும் ஒரு ராஜதந்திரயுக்தியாஎன்பது தெளிவில்லை .இருந்தும் இந்தவேண்டுகோளுக்கு உரமூட்டுவது தமிழரினதும் முஸ்லிம்களினதும் தலையாய கடன். எவ்வாறு?
முதலாவது, மோடியின் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் தமிழ் நாட்டில் செல்லுபடியாகா. அங்கே வரலாறு காணாத ஒற்றுமையொன்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவுகின்றது. அங்கு வாழும் தம்மை இஸ்லாமியத் தமிழரென்று இனங்கண்டுள்ளமை இலங்கை முஸ்லிம்களுக்கு அதிசயமாக இருக்கலாம். ஆனால் அதுதான் யதார்த்தம். இருப்பினும், தமிழ்நாடோ இலங்கைத் தமிழரின் தமிழீழப் போராட்டம் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்தவேளை அம்போஎன்று கைவிட்டதை யார்தான் மறுப்பர்? யார்தான் பொறுப்பர்? அவர்கள் ஏன் தமிழீழம் வருவதை இதயபூhவமாக விரும்பவில்லை என்பதற்குரிய காரணங்களை நான் வேறு சந்தாப்பங்களில் விளக்கியுள்ளேன். அவற்றை இங்கு மீட்கவிரும்பவில்லை. ஆனால் இன்றோ நிலைவேறு. தமிழ்ப் பேசும் இலங்கையரும் தம்மைப்போன்று ஒற்றையாட்சியின் அடிப்படையில் பிரதேசவாரியான அதிகாரப் பகிர்வுடன் வாழ்வதை அவர்கள் நிச்சயம் விரும்புவர் எனத் துணிந்து கூறலாம். ஆகவே அவர்கள்மூலமே இந்திய மத்தியரசுக்கு அழுத்தம்கொடுத்து இலங்கை பற்றிய பிரதமர் மோடியின் வேண்டுகோளைச் சாத்தியப்படுத்தல ;வேண்டும். இந்த அழுத்தத்தினால் தமிழ்நாடு இழக்கப்போவது எதுவுமே இல்லை.
இரண்டாவது, இலங்கை முஸ்லிம் தலைவர்களுக்கும் ஒரு முக்கியகடமையுண்டு. ஆதனை விளக்குவதற்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தின் இன்றையநிலை தமிழ்ச்சமூகத்தின் நிலையைவிடவும் மோசமான அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தவேண்டியுள்ளது. பெரும்பான்மைச் சமூகம் தமிழருடன் ஆயுதப்போர் புரிந்தவேளையிலும் அவர்களை அன்னியரென்று அழைக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களை அன்றும் அன்னியரென்று அழைத்தார்கள், இன்றும் அழைக்கின்றார்கள். முஸ்லிம்களைப் பார்த்து“அரேபியாவுக்குப் போங்கள்” என்று பௌத்தபேராதிக்கவாதிகள் கூச்சமின்றிக் கூக்குரலிடுகின்றனர். அதனைத் தவறென்னு பெரும்பான்மை இனத்தலைவரெவரும் இதுவரை கூறவில்லை. முஸ்லிம்கள் பிறந்ததும், வாழ்வதும் மரணிப்பதும் இலங்கை மண்ணில்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தி முஸ்லிம்;கள் இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகத்தின் பிரிக்கமுடியாதஓர் அங்கம் என்பதை தமிழ்ச் சமூகத்துடன் இணைந்துதான் உணர்த்தவேண்டியுள்ளது. இத்தேவையைதமிழ்ச் சமூகமும் உணரவேண்டும்.


இதுவரைமுஸ்லிம் தலைவர்கள் தமக்குள்ள அரபுநாடுகளுடனான உறவை சிறுபான்மை இனங்களுக்களின் அரசியல் ஈடேற்றத்துக்காகப் பயன்படுத்தவேயில்லை. அந்த அளவுக்குச் சிந்தித்துச் செயலாற்றக்கூடியதிறமை அவர்களிடம் இருக்கவில்லை. அத்தலைவர்கள் தமது தனிப்பட்ட நலனுக்காகவும் தமதுசமூகத்தின் நலனுக்காகவும் மட்டுமே அவ்வுறவை வளர்த்துக் கொண்டார்களே ஒழிய தாமும் சிறுபான்மை என்ற ஒருகுடையின கீழ் நிழல்தேடும் ஓர் இனம், ஆதலால் அந்தக் குடை பெரும்பான்மையின் துவேஷப் புயலிற் சிக்குண்டு கிழிந்து பறந்தால் எங்களுக்கும் கதியில்லை எங்களுடன் நிழல்காயும் மற்றவர்க்கும் கதியில்லை என்பதை அரபுநாட்டுத்தலைவர்களுக்கு உணர்த்தத் தவறிவிட்டனர். இனிமேலாவது இந்தப் போக்கினைத் தவிர்த்து தமிழ்த்தலைவர்களுடன் இணைந்து 13ஏ திருத்தத்தை அமுலாக்குவதற்கு அழுத்தம்கொடுக்குமாறு அரபுநாடுகளை முஸ்லிம் தலைமைத்துவம் வலியுறுத்தவேண்டும். அந்தநாடுகளின் அழுத்தமும் பாரதப் பிரதமரின் அழுத்தமும் இணைகையில் அதனை இலங்கை அரசு எழிதில் தட்டிக் கழிக்கமுடியாது.
மூன்றாவது, புகலிடம் வாழும் இலங்கைத் தமிழரும் முஸ்லிம்களும் ஏன் துவேஷ மனப்பான்மையின்றி சுபீட்சமான தாயகத்தை நாடும் சிங்களநண்பர்களும்கூட தம்மாலியன்றவரை தாம் வாழும் நாட்டரசுகளை இலங்கை அரசுக்குஅழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தல் வேண்டும். இவ்வாறு வெளிநாட்டுச் சக்திகளின் அழுத்தங்கள்தான் 13ஏ திருத்தம் அமுலாக்குவதற்கு வழிசெய்யும். இலங்கைஅரசியல் இன்றுள்ள நிலையில் ஜனாதிபதியோ வரப்போகும் அரசாங்கமோ அதனை அமுலாக்கும் என்பது வெறும் கனவே. இது சம்பந்தமாக புத்திஜீவிகளடங்கிய தமிழ்-முஸ்லிம் குழுவொன்று தமிழ்நாட்டுக்கும் அரபுநாடுகளுக்கும் சென்றாலென்ன?


இறுதியாகஒன்று. வடக்கும் கிழக்கும் இணைவதா தனித்தனியே இயங்குவதாஎன்பது இன்றையநிலையில் ஒருவீண் பிரச்சினை. வீடேஎரியும்போது யாருக்குவேண்டும் பாகப்பிரிவினை? இரு சிறுபான்மை இனங்களும் இணையவேண்டுமென்பதை பலகட்டுரைகளில் வலியுறுத்த வந்துள்ளேன். அரசியல் தலைவர்களின் குறுகியநோக்கங்கள் அந்தவேண்டுதலை பகற்கனவாக்கிவிடுமோ என்றபயம் இப்போது எழுந்துள்ளது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *