அருளர் – ஒரு முன்னோடியின் நினைவுகள் – கருணாகரன்

ஈழப்போராட்டத்தின் முன்னோடியான அருளர் (அருளப்பு அருட்பிரகாசம்) 03.12.2019 அன்று மறைந்து விட்டார். ஈழப்புரட்சி அமைப்பு என்ற “ஈரோஸ்” இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் இன்னுமொருவரின் மறைவு இது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இன்னொரு முன்னோடியான கைலாஷ் என்ற மாதவன் மறைந்திருந்தார். அதுவும் ஒரு பேரிழப்பே. இப்போது அருளர். இறக்கும்போது அருளருக்கு வயது 71. மரணத்துக்கு வயதில்லை. யார் என்ற தெரிவும் இல்லை. அது அருளரையும் தன்னோடு அணைத்துக் கொண்டது.

03.13.1948 இல் பிறந்த அருளர், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் படித்திருந்தார். புலமைப்பரிசில் பெற்று, ரஷ்யாவிலுள்ள லுமும்பா பல்கலைக்கழகத்தில் அபிவிருத்திப் பொறியல்துறையில் பட்டம்பெற்ற பிறகு, லண்டனுக்குச் சென்ற அருளருக்கு ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர் இளையதம்பி இரத்தினசபாபதியுடன் அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகத்தினால் இரத்தினசபாபதி, சங்கர் ராஜி, அருளர் ஆகிய மூவரு் இணைந்து ஈரோஸை ஆரம்பித்தனர். அது ஈழத்தமிழரின் அரசியலை ஆயுதப்போரட்டத்தின்மூலமே முன்னெடுக்க முடியும் என்ற எண்ணம் இளைய தலைமுறையினரிடத்தில் மேலெழுந்திருந்த காலம். அதனால் ஆயுதப்பயிற்சியைப்பற்றியே அன்றைய இளைஞர்கள் கூடுதலாகச் சிந்தித்தனர். இதற்காக முயற்சித்தபோது, லண்டனில் செயற்பட்டுக் கொண்டிருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தொடர்பு இரத்தினசபாபதிக்குக் கிடைத்தது. இந்தத் தொடர்பின் வழியாக முதலாவது ஆயுதப்பயிற்சி அணியில் இணைந்து பலஸ்தீனத்துக்குச் சென்று பயற்சி பெற்றார் அருளர். அந்த அணியில் மொத்தமாக மூன்றுபேர் மட்டுமே பங்குபற்றியிருந்தனர். பிறகு மேலும் சில அணிகள் பயிற்சிகளைப் பெற்றன. அவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றது அருளரே. அந்த அணிகளில் பயிற்சி பெற்றவர்கள் பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள். இவர்கள் எல்லோரும் அப்பொழுது ஈரோஸ் இயக்கத்தின் மாணவர் பிரிவான GUYS இல் அங்கம் வகித்தனர். மற்ற இருவர் புலிகளைச் சேர்ந்த உமா மகேஸ்வரன், விச்சுவேஸ்வரன் ஆகியோர்.

பலஸ்தீனத்தில் பயிற்சியை முடித்த அருளர் 1977 இல் வவுனியா – மன்னார் வீதியில் உள்ள கன்னாட்டி என்ற இடத்துக்கு வந்து, விவசாயச் செய்கையில் ஈடுபடப்போவதாகச் சொன்னபோது பெற்றோருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

ரஷ்யாவில் பொறியியல் படித்துவிட்டு வேலை செய்வதற்காக லண்டன் சென்ற மகன், இப்படித்திடீரென்று ஊரில் வந்து விவசாயம் செய்யப்போவதென்றால் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது. கன்னாட்டியில்தான் அருளரின் பெற்றோர் இருந்தனர். அவர்களுடைய சொந்த ஊர் தீவுப்பகுதியாக இருந்தாலும் (தந்தை நெடுந்தீவைச் சேர்ந்தவர். தாய் நாரந்தனை, ஊர்காவற்றுறையில் பிறந்தவர்) அவர்களுக்கு அங்கே ஒரு விவசாயப் பண்ணை இருந்தது. அருளரின் தந்தை ஆசிரியராக இருந்து கொண்டே பண்ணையையும் நடத்தி வந்தார்.

அருளர் சொன்னார், “என்னதானிருந்தாலும் வெளிநாட்டில் வேலை செய்வதை விடவும் இங்கே ஊரில் வந்து விவசாயம் செய்வது மேல். எங்களுக்கு நல்லதொரு பண்ணை இருக்கு. இதை நவீன முறையில், விஞ்ஞான முறைப்படி) செய்யவேணும் என்று விரும்புகிறேன்” என்று.

மகனுடைய இந்த நிலைப்பாடு பற்றிச் சற்றுக் குழப்பமாக இருந்தாலும் தந்தையார் இதைப்பற்றி எதையுமே பேசவில்லை. அருளரின் திட்டப்படியே விட்டு விட்டார்.

சில மாதங்களில் பலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர்களும் லண்டனில் ஈரோஸின் உறுப்பினர்களுமாக இருந்தவர்கள் அந்தப் பண்ணைக்கு வரத் தொடங்கினார்கள். ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின்படி இதெல்லாம் நடந்தன. இப்படி ஒவ்வொருவராக வெளியிலிருந்து ஆட்கள் (இளைஞர்கள்) வருவதைப்பார்த்த அருளரின் பெற்றோருக்கு சந்தேகமாக இருந்தாலும் அதை அருளர் வெகு சாமர்த்தியமாகச் சமாளித்துக் கொண்டார். தொடர்ந்து உள்ளுரில் இயக்கத்தொடர்பில் இருந்தவர்களும் அங்கே வந்து பண்ணையில் சேர்ந்தனர். பண்ணையில் வேலை செய்வதோடு உடற்பயிற்சியும் நடந்தது. இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதுதான் கன்னாட்டிக்குப் பக்கத்திலுள்ள முருங்கன் காட்டில் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்த படையினர், சந்தேகத்தின் பேரில் கன்னாட்டிப் பண்ணையில் இருந்த ஈரோஸ் உறுப்பினர்கள் அத்தனைபேரையும் கைது செய்தனர். கூடவே அருளரின் தந்தையையும் சகோதரர்களையும் பிடித்துச் சென்றனர். இப்படிக் கைது செய்யப்பட்ட அருளரின் குடும்பத்தினர் கண்டி போகம்பரச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எல்லோர் மீதும் விசாரணைகளுக்குப் பிறகு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகே அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும் கன்னாட்டி பண்ணை தொடர்ந்தும் போராட்டக் களத்துக்கான பயிற்சித் தொட்டிலாகவும் அரசியல் பயில்வுக்கான பல்கலைக்கழகம் போலவும் தொழிற்பட்டது. இது இன்று ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான அடையாளமாகி விட்டது. போராட்டத்தின் தொடக்ககால (கருவறைக்கால) செயற்பாடுகளுக்கு அது ஒரு பெரிய தளமாக இருந்ததே இதற்குக் காரணமாகும்.

1977 இல் இலங்கையில் நடந்த இனவன்முறையின்போது கொழும்பிலிருந்த அருளர், அங்கிருந்து “லங்கா ராணி” என்ற கப்பலின்மூலம் அகதிகளோடு அகதியாக காங்கேசன்துறைக்கு வந்திறங்கினார். இந்த அனுபவத்தை வைத்து, ஈழப்போராட்டத்துக்கு உந்து சக்தியை வழங்கக் கூடியவிதமாக “லங்கா ராணி” நாவலை எழுதினார். அகதிகளை ஏற்றி வந்த அந்தக் கப்பலின் பெயரை ஒரு குறியீடாக வைத்து எழுதப்பட்ட அந்த நாவல், ஈழப்போராட்டத்தின் முதலாவது நாவலாகக் கருதப்படுகிறது. அந்த நாவலைப்பற்றிய இன்றைய இலக்கிய மதிப்பீடு வேறாக இருக்கலாம். ஆனால் அந்த நாட்களில் அந்த நாவல் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு ஒரு முக்கியமான அறிதல் வழியாக இருந்தது. பெரும்பாலும் எல்லா இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளும் அந்த நாவலைப்படித்தனர். ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள் ஒருவர் கூட லங்கா ராணியைப் படிக்கத் தவறியதில்லை. இனப்பிரச்சினையின் அடிப்படை, அதனுடைய உளவியல், ஈழப்போராட்டத்தின் அவசியம், இலங்கையின் அரசியல் வரலாறு, பிராந்திய, சர்வதேச அரசியல் பொருளாதார நலன்கள், அவற்றின் உறவு, உழைக்கும் மக்களின் நிலை, அவர்கள் தவிர்க்க முடியாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய சூழல் எனப் பல கோணங்களில் அந்த நாவல் பல விடயங்களைக் குறித்தும் பேசியது. ஆராய்ந்தது. அது போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துவதையே மையப்படுத்தி எழுதப்பட்டதால் இவற்றுக்கு அதில் முக்கியத்துவமிருந்தது. 1978 இல் முதல் பதிப்பாக வெளிவந்த லங்கா ராணி, 1988 இல் இரண்டாவது பதிப்புக் கண்டது. 2008 இல் மூன்றாம் பதிப்பு வெளிவந்தது.

இதேவேளை 1977 இன வன்முறையைத் தொடர்ந்து கன்னாட்டி மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த 67 குடும்பங்களை பண்ணையில் கே.சி நித்தியாநந்தா அவர்களின் தலைமையிலான அகதிகள் புனர்வாழ்வு கழகத்தின் உதவியுடன் குடியேற்றும் செயற்பாட்டில் மாணவர்கள், இளைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றினார் அருளர். அதனை ஒரு கூட்டுறவு மாதிரிப்பண்ணையாக நிர்மாணிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அப்படி அன்று குடியேறிய மக்கள் இப்பொழுது அந்தப் பிரதேசத்தின் நிரந்தரவாசிகளாகி விட்டனர்.

இதற்குப் பிறகு லண்டனிலும் இந்தியாவிலும் தன்னுடைய செயற்பாட்டுத் தளத்தை மாற்றிக் கொண்டார் அருளர். 1980 இல் ஈரோஸ் இயக்கத்திலிருந்திருந்து ஒரு தொகுதியினர் பத்மநாபா தலைமையில் பிரிந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வை உருவாக்கியபோது அருளர் எல்லாவற்றிலிருந்தும் சற்று ஒதுங்கியிருந்தார். ஆனாலும் இரு தரப்புகளோடும் உறவைக் கொண்டிருந்தார். இதுதான் அருளருடைய இயல்பு. இந்தக் காலப்பகுதியில் அவர் சென்னையில் பல இயக்கத்தினரையும் சந்தித்து எல்லா இயக்கங்களுக்குமிடையில் ஒற்றுமை அல்லது ஒருங்கிணைவை ஏற்படுத்த முயற்சித்தார். இதற்காக விசுவானந்த தேவா (என்.எல்.எவ்.ரி), உமா மகேஸ்வரன் (புளொட்), பிரபாகரன் (விடுதலைப்புலிகள்), பாலகுமாரன் (ஈரோஸ்), பத்மநாபா (ஈ.பி.ஆர்.எல்.எவ்), சிறிசபாரத்தினம் (ரெலோ) ஆகியோருடன் பேச்சுகளில் ஈடுபட்டார். அருளரின் இந்த முயற்சி எதிர்பார்த்த பயனைக் கொடுக்கவில்லை. ஆனால், அப்படியான ஒரு ஒற்றுமையும் ஒருங்கிணைவும் ஈழப்போராட்டத்துக்கு வேணும் என்ற உணர்வை பலருக்கும் உண்டாக்கியதில் அருளின் பங்களிப்புப் பெரியது. பின்னாளில் விடுதலைப்புலிகள், ஈரோஸ், ரெலா, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இயக்கங்கள் இணைந்து ஈழதேசிய விடுதலை முன்னணியை உருவாக்குவதற்கு அருளரின் அந்த முதற்தூண்டல் ஒரு அடிப்படை என்று கூடச் சொல்லலாம்.

சில காலம் எந்த இயக்தோடு செயற்படுகிறார் என்று தெரியாத நிலையில் அருளர் இருந்தார். ஆனாலும் ஈ.பி.ஆர்.எவ்.எவ்வோடு சற்று நெருக்கமான தொடர்பிலிருந்தார். அதேவேளை ஈரோஸ் இயக்கத்தினரோடும் நெருக்கமாக இருந்தார். என்றபோதும் எந்தத் தரப்பிலும் முக்கியமான எந்தப் பொறுப்புகளிலும் அவர் அமர்த்தப்படவில்லை. ஆனால், ஈழத்துக்கான பல்துறை ஆய்வுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்தப் பணிகள் பொருளாதாரத் துறைசார்ந்தும் வரலாற்றுத்துறை சார்ந்ததாகவும் இருந்தன. பொருளாதாரத்துறையிலும் உயர்கல்வியைப் படித்திருந்ததால் ஈழத்தில் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஈழத்துக்குத் தேவையான சுதேசியப் பொருளாதாரச் சிந்தனையை வலுப்படுத்தி, அதன்மூலம் சொந்தக் காலில் நிற்கக்கூடிய சூழலை ஈழத்தமிழ்ச்சமூகத்திடம் உருவாக்க வேண்டும் என்ற வேட்கை அருளருக்கிருந்தது. இதனால் ஈரோஸின் ஈழ ஆய்வு நிறுவனத்தோடு நெருக்கமாகி, அதில் சில பொறுப்புகளையும் பின்னாளில் வகித்தார். இதேவேளை ஈழத்தமிழர்களின் இருப்புத்தொடர்பான சிங்கள மேலாதிக்கச் சிந்தனையாளர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சில நூல்களையும் வரலாற்று ஆதாரங்களோடு எழுதிக் கொண்டிருந்தார். இதற்காக அவர் தொடர்ச்சியான ஆய்வுகளிலும் கற்கையிலும் ஈடுபட்டார். இதில் வடக்குக் கிழக்கில் தமிழரின் குடிப்பரம்பல் தொடர்பாக அவர் எழுதியவை குறிப்பிடத்தக்கன. முக்கியமாக The Traditional Home Land Of The Tamils – The miing Pages Of Sri Lankan History, Monetary Exploitation, Global Sustainnability Initiative போன்ற நூல்கள் முக்கியமானவை. இதைத் தவிர நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வேறுண்டு.

இதேவேளை இலங்கை இந்திய உடன்படிக்கையின்போது உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணசபையில் அருளர் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆய்வும் அபிவிருத்தியும் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றினார். அந்தச் சொற்ப காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. இதற்காக திருமலை கப்பல் துறை என்னும் பிரமாண்டமான நிலப்பரப்பில் ஒரு பாரிய கைத்தொழில் பேட்டையை நிறுவுவதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான ஆவணமொன்றைத் தயார்படுத்தி யிருந்தார். அவருக்குப் பக்கத்துணையாக மண்ணியல் பொறியாளர் திரு விக்னேஸ்வரன், தொழினுட்ப அலுவலர் திரு ஜெகநாதன், நகர அபிவிருத்தி பொறியாளர், மற்றும் துறைசார் நிபுணர்கள் செயற்பட்டனர். ஆனால் பின்னர் ஏற்பட்ட அரசியற் சூழலால் அதனை முழுமைப்படுத்த முடியவில்லை.

யுத்தத்தின்போதும் சரி, யுத்த நிறுத்த காலத்திலும் சரி அருளர் ஒரு சமாதானப் பறவையாகப் பல்வேறு திசைகளுக்கும் பறந்து திரிந்தார். இயக்க மோதல்கள் அருளரைத் திகைப்படைய வைத்தன. இதை அவர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தார் என்றபோதும் இந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் சில காலம் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியமாதிரி மௌனமாக இருந்தார். பிறகு நிலவிய அரசியற் சூழலில் பல தடவைகள் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார். அதேவேளை டக்ளஸ் தேவானந்தாவோடும் பிற இயக்தினரோடும் சமநேரத்தில் உறவாடிக் கொண்டிருந்திருக்கிறார். இதையெல்லாம் இவர் ஒரு போதும் ரகசியமாகச் செய்ததேயில்ல. எல்லோருடனும் பகிரங்கத்தளத்தில் – வெளிப்படையாக – இருந்தார். இதனால் அருளரை எல்லோரும் அன்புடன் அரவணைத்தனர். மதித்தனர். இதுவே அருளரின் பலம்.

இப்படி சோர்வற்று எப்போதும் சமூகச் சிந்தனையோடும் செயற்பாடோடும் இருந்தது அருளரின் சிறப்பு என்றே சொல்ல வேணும். அதுவே அருளரின் அடையாளம். இறக்கும் தருணத்திலும் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்தார். பல்வேறு அறிக்கைகளைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். தமிழ்ச்சமூகத்தின் அடையாளம், அரசியல், அதனுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கிறார்.

அருளருடைய பின்னாள் அரசியல் நிலைப்பாடுகளில் பலருக்கும் விமர்சனங்களுண்டு. அவருடைய செயற்பாடுகளிலும் முரண்பாடுகளிருந்தன. ஆனால், அவர் சமூகத்தை விட்டு விலகியிருக்கவில்லை. சமூகத்தை வைத்துப் பிழைக்கவும் இல்லை என்பது முக்கியமானது. மட்டுமல்ல தன்னுடைய கல்வித் தகுதி, தனக்கிருந்த செல்வாக்கு, அறிமுகம், புகழ், வரலாற்றப் பங்களிப்பு போன்றவற்றைச் சுய நன்மைக்கான முதலீடாக்கிக் கொள்ளவுமில்லை. சற்றுத் தன்மையவாதம் சற்று மேலோங்கியிருந்ததுண்டு.

மக்கள் மீதான நேசிப்பும் சமூகச் சிந்தனையும் ஒருவருக்கிருந்தால் அவரால் ஒரு போதும் சோர்ந்திருக்க முடியாது. மட்டுமல்ல, பதவியோ பிரதிபலன் குறித்த சிந்தனையோ அவர்களைத் தீண்டாது. அதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டுமல்ல என்பதற்கு அருளர் ஒரு சாட்சி. ஒரு சான்று. ஆனால், அருளரின் மரணத்துக்குப் பிறகு அவருடைய முகநூலை ஆதாரப்படுத்தி வெளியிடப்படும் செய்திகள் அருளரைப் பலவீனமான ஒருவராகவே அடையாளப்படுத்துகிறது. சாதியம் குறித்துத் தாழ்வான மனப்பாங்கைக் கொண்டவராக, சாதிய மனோநிலை உடையவராக அருளர் குறிப்பிடப்படுகிறார். ஆனால், அவர் இறக்கும் தறுவாயிற்கூட இதைப்பற்றி யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அல்லது யாருடைய கவனத்திலும் அது தட்டுப்படவில்லை. இப்பொழுது அருளரின் மரணத்துக்குப் பிறகு இதெல்லாம் அருளரைக் குறித்துப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், அருளருக்குப் பெற்றுக் கொடுத்திருந்த நன்மதிப்பையெல்லாம் கெடுத்துள்ளது. ஆனாலும் அருளர் போன்றவர்களின் தியாகத்தை இது எந்த நிலையில் வைத்துப் பார்க்கப்போகிறது என்பது வரலாற்றுக்கான கேள்வியாகும்.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் (ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான) சுகு சிறிதரன் குறிப்பிட்டுள்ளதைப்போல, “அதிதீவிர தேசியவாத சூழல் செல்வாக்குச் செலுத்தினாலும் அருளர், ஈழ இயக்கங்கள் மத்தியில் தீண்டாமை பாராட்டியதில்லை. உரிமையுடன் சகலருடனும் பழகியவர். அவருடைய சகோதர சகோதரிகள் குடும்பத்தினர் அந்த அபாயகரமான நாட்களிலும் ஆதரவளித்தார்கள். போராட்டத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் பங்களித்தவர்கள். மறைந்தும் வாழும் பலதோழர்கள் கன்னாட்டி பண்ணை அனுபவம் பெற்றவர்கள். அவருடைய இளையசகோதரர் செல்வின் (குணம்) உட்பட அந்த கன்னாட்டி சுற்றயல் கிரமங்களை சேர்ந்த பலதோழர்களும் இப்போராட்டத்தில் உயிர்தியாகம் செய்தவர்கள். அருளருடைய இன்னொரு சகோதரர் ராசநாயகம் அருளரைப்போலப் போராளியாக இருந்தார். அருளரின் தேடலும் அலைக்கழிவுமான வாழ்வில் அவருடைய மனைவி பிள்ளைகள் பெரும் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களைப் பல சந்தர்ப்பங்களில் விட்டு விட்டுத் தன்னுடைய பணியின் விட்டேத்தியாகத் திரிந்திருக்கிறார். ஆனாலும் அருளரும் சரி, அவருடைய சகோதரர், மனைவி உள்ளிட்டோரும் சரி என்றும் எதிலும் பின்னின்றதில்லை” என்பது நமது சமூகம் தன்னுடைய நினைவில் வைத்திருக்க வேண்டியது.

அருளரைப்பற்றி இளைய தலைமுறையினர் நிறைய அறிய வேண்டும். அதற்கான வாசல்கள் பலவுண்டு. லங்கா ராணி தொடக்கம் ஏராளம் வழிகள் உள்ளன. சமூக அரசியற் சிந்தனை உள்ளவர் என்ற வகையில், இடதுசாரித்துவத்தின் வழியாக போராட்ட அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் என்ற அடிப்படையில், தமிழர் அரசியலில் இன்னொரு மாற்றுப் பயணம் உண்டென்பதை உணர்த்தியவர் என்பதால்.. இப்படிப் பல காரணங்கள் உண்டு. அதில் இன்னொன்று, சர்வதேச அளவில் புகழ் பெற்ற பாடகியான மாயா பற்றியதாக, அண்மையில் வெளிவந்த Matangi/Maya/M.I.A என்ற ஆவணத்திரைப்படத்தில் அவரது கடந்தகாலம் பற்றிய சில தகவல்கள், காட்சிகள் உள்ளன. மாயா வின் தந்தையே அருளர்.

நமது துயரமென்னவென்றால், தங்களின் இளவயதில் மக்களின் விடுதலையைக் கனவாகக் கொண்டவர்கள், அந்தக் கனவுக்காகத் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், அதற்காக இறுதிவரையில் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்கள், அந்தக் கனவு சிதைந்த நிலையில் மறைவது என்பதே. அது அவர்களுக்கும் துக்கம். நமக்கும் துக்கமே. இந்தத் தீராத் துக்கத்தைப்போக்குவதே அவர்களுக்கு நாம் செலுத்துகின்ற மெய்யான அஞ்சலியாகும். அருளருக்கான அஞ்சலி அவருடைய மனதில் கொண்டிருந்த நல்லெண்ணங்களைச் செயலாக்கி வெற்றிகளைச் சனங்களுக்குச் சமர்ப்பிப்பதே. அதுவே நம் கடன். அதுவே நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதை. அது அவருக்கு மட்டுமானதல்ல, அனைத்து முன்னோடிகளுக்குமானது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *