தமிழ் அரசியற் சூழல் – சமகாலக்காட்சிகள் – கருணாகரன்

பாராளுமன்றத் தேர்தல் (திருவிழா) வரப்போகிறதல்லவா. அதை முன்னிட்ட ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. தமிழ்க் கட்சிகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. யாரோடு கூட்டு வைத்துக் கொள்ளலாம்? யார் யாருக்கு வெற்றி வாய்ப்புகள் உண்டு? எந்தத் தரப்புகள் மக்களிடம் செல்வாக்கோடுள்ளன? என்ற அடிப்படையில் தேர்தற் கூட்டுக்கான வியூகங்களை ஒவ்வொரு கட்சியும் வகுக்க முற்படுகின்றன. இதற்கான ரகசியச் சந்திப்புகள், பேச்சுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏழு கட்சிகளாக உடைந்து பலவீனப்பட்டிருப்பதால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தம்மை வளர்த்துக் கொள்ளலாம் என்பது எதிர்த்தரப்புகளின் நம்பிக்கை. விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் தரப்பு ஒரு முனையிலும் கஜேந்திரகுமார் தரப்பு இன்னொரு முனையிலுமாக இந்த நம்பிக்கையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பிலிருந்து பிரிந்த சக்திகளைத் தமது பக்கத்திற்கு இழுத்துக் கொள்ள வேண்டும் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் முயற்சிக்கிறார். குறிப்பாக ரெலோ, புளொட் ஆகியவற்றின் அதிருப்தியாளர்களை இந்த வியூகத்தில் விழுத்த வேண்டும் என்பது சுரேஸின் விருப்பம். ஐங்கரநேசனை இந்தக் கூட்டுக்குள் சேர்த்துக் கொள்ளும் எண்ணம் குறைவாகவே தெரிகிறது ஐங்கரநேசனுக்கும் சுரேஸ் தரப்போடு இணைந்து கொள்வதில் விருப்பக்குறைவுண்டு.

ஆனால், தன் வழி எப்போதும் தனி வழிதான் என்பதைப்போல கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்கு மாறாகப் பேசிக் கொண்டிருக்கிறார். தன்னோடு இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் வரலாம். தான் யாரோடும் போய்ச் சேரப்போவதில்லை என்பது கஜேந்திரகுமாரின் நிலைப்பாடு. ஏறக்குறைய பேரனார் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தைப்போல கஜேந்திரகுமாரும் சில இடங்களில் நடந்து கொள்கிறார் போலுள்ளது. தன்மையவாதத்தில். அல்லது தன்முதன்மைப்பாட்டில்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இந்தத் தடவை தனித்துப்போட்டியிடுமா அல்லது தமிழர் சமூக ஜனநாயக் கட்சியோடு இணைந்து தேர்லை எதிர்கொள்ளுமா? அல்லது அரசாங்கத்தோடு இணைந்து நிற்குமா என்று சரியாகத் தெரியவில்லை.

இன்னொரு முனையில் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சந்திரகுமார், புதிய ஜனநாயக மாக்ஸஸ லெினிஸக் கட்சியின் செந்தில்வேல் உள்ளிட்ட தரப்புகள் ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கான பேச்சுகளும் வேலைத்திட்டங்களை வரையும் நடவடிக்கையும் நடப்பதாகத் தெரிகிறது. கிழக்கிலும் தேர்தற் கூட்டணிக்கான முயற்சிகள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கினற்ன.

இதேவேளை, என்னதானிருந்தாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவது நல்லதல்ல. அதில் குறைபாடுகள், தவறுகளிருக்கலாம். அதைப் பேசித் திருத்திக் கொள்ளலாம். அல்லது அதில் குழப்படிக்காரராக இருப்போரை விலக்கிக் கொள்ளலாம். ஆனால், இந்தக் காரணங்களுக்காகக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தக் கூடாது. அது இன்று தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது. அதைச் சிதைப்பது நல்லதல்ல” என்ற அபிப்பிராயம் சிலரிடம் உண்டு. இதை அதிகமாக வயதானவர்களே சொல்கிறார்கள். அவர்களுடைய இதயத்தை இரண்டு விடயங்கள் தாக்குகின்றன. ஒன்று, ஏற்கனவே அறியப்பட்ட கூட்டை எதற்காக உடைக்க வேணும் என்பது. இரண்டாவது, அதற்கு நிகராக அடையாளங் காணப்படக்கூடிய அளவுக்கு எந்தத் தரப்பு இருக்கிறது என்பது?

இவ்வாறான ஒரு சூழலில்தான் இந்த மாபெரும் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்குக் கட்சிகள், ஊடகங்கள் மட்டுமல்ல, சிவில் சமூகத்தினர்(?), பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் போன்ற தரப்பினரும் தயாராகி விட்டனர்.

வழமையைப்போலவே இந்தத் தடவையும் தேர்தலை மட்டும் மையப்படுத்திய சிந்தனையே எல்லோரிடத்திலும் முதன்மைப்பட்டுள்ளது. மக்களுடைய பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கான தீர்வு என்ன? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதைப்பற்றி எந்த விதமான அக்கறையுமில்லாமல்தான் இந்தத் தேர்தலையும் இவை எதிர்கொள்ளப்போகின்றன. கூடவே, அரசியற் தீரவு விடயத்திலும் இவற்றிடம் தெளிவான எந்தச் சித்திரத்தையும் காண முடியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கையிலிருந்த அந்தப் பழைய சரக்கையே இவை வலியுறுத்துகின்றன. இதனால் என்ன பயன் விளையும் என்று தெரியவில்லை. எதிர்த்தரப்புக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய, எதிர்த்தரப்புத் தடுமாறக்கூடிய, புறக்கணிக்க முடியாத வகையில் தீர்வு யோசனையை முன்வைப்பது நல்லது. ஆனால், இதற்காக வேலை செய்வதற்கு யாரும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

ஆக, அடிப்படை மாற்றங்களைச் செய்வதைப் பற்றிச் சிந்திக்காமல் மேம்போக்கான முறையில் தேர்தல் கூட்டை உருவாக்குவதே எல்லோருடைய நோக்கமுமாக உள்ளது.

இது எந்த வகையிலும் புதிய நிலைகளைத் தொடாது. ஆனால் இதைப்பற்றி நாம் பேசினால், இந்த உண்மையை வலியுறுத்தினால், அதை ஏற்றுக்கொள்வதற்கும் பொருட்படுத்துவதற்கும் பலரும் தயாரில்லை. அந்தளவுக்கு கற்பனாவாத அரசியலில் திளைத்துக் கிடக்கிறது தமிழ்ச்சமூகம். இதை அண்மையில் ஒரு நண்பருடன் நடந்த உரையாடல் தெளிவாகக் காட்டுகிறது. இந்த நண்பர் தமிழ்ச்சமூகத்தின் அசல் பிரதிநிதி என்பதை இதைப்படிக்கும்போது உணர்ந்து கொள்வீர்கள். அப்படி உணர்ந்து கொள்ளத் தவறினால், நீங்களும் இந்தக் கற்பனைக் குதிரையில்தான் சவாரி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

நண்பர் சொன்னார் –

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட உறுதியான நிலைப்பாட்டைப்போல வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ் வாக்குகள் சிதைந்து போகாமல் திரண்டு ஒருமுகப்பட்டு, “தமிழ் அரசியல் அடையாளமாக” வாக்களிக்க வேண்டும். இதற்கேற்றவாறு ஒரு வலுவான கூட்டணி உருவாக்கப்படுவது அவசியம். அது பெரும்பாலும் தேர்தற்கூட்டாகத்தான் இருக்கும். அடுத்து வரவுள்ள மூன்று மாதங்களுக்குள் கொள்கை அடிப்படையில் ஒரு அரசியற் கூட்டை உருவாக்குவதென்பது கடினம். ஆகையால், இந்தக் கூட்டு, தேர்தற் காலங்களில் வகுக்கப்படும் தேர்தல் வியூகத்தின் அடிப்படையில்தான் பெரும்பாலுமிருக்கும். இதற்கான வேலைகளை பிந்தாமல் இப்போதே நாம் செய்ய வேணும்” என்று சொன்னார் அரசியல் ஆர்வத்தோடு செயற்படும் நண்பர் ஒருவர்.

இதைச் சொல்லும்போது அவரிடம் மெல்லியதொரு பதற்றத்தைக் கவனித்தேன்.

மேலும் அவர் சொன்னார், “ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள்(தமிழ்த்தரப்பினர்) மிகப் பிந்தியே அதைப்பற்றிச் சிந்தித்தோம். அதனால்தான் பல குழப்பங்கள் ஏற்பட்டன. அப்படியொரு தவறு இந்தத் தேர்தலில் ஏற்படக்கூடாது. அதனால் இப்பொழுதே சரியானதொரு இலக்கில் இந்தக் கூட்டை உருவாக்க வேண்டும். தமிழ்த்தரப்பிலுள்ள கட்சிகள், சிவில் சமூகத்தினர், பொது அமைப்புகள், மதகுருக்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள் என எல்லாவற்றின் ஆதரவோடும் இந்தக் கூட்டை நாம் உருவாக்க வேண்டும்” என்று.

“நல்லது. அப்படியென்றால் ஏற்கனவே சில கூட்டுக்கள் இப்படி உள்ளன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் – சுரேஸ் கூட்டணி உள்பட. இவற்றை விட இன்னொரு புதிய கூட்டைப்பற்றிச் சொல்கிறீர்களா? அல்லது இவற்றையும் சேர்த்து ஒரு பொதுக் கூட்டைப்பற்றிச் சொல்கிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கூட்டின் அரசியல் அடிப்படைகள் என்ன? அது எப்படி அதை முன்னெடுக்கப்போகிறது? இந்தக் கூட்டில் இணையவுள்ள கட்சிகள் எந்தளவுக்கு இதில் உறுதியாகவும் தெளிவோடும் செயற்படும்? இதற்குத் தலைமை தாங்குவது யார்? அதற்குப் பொருத்தமானவர்களாக யாரை அடையாளம் கண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பது கடினம். ஏனென்றால், இருக்கிற கட்சிகளில் நாங்கள் முழுமையாக நம்பிக்கை வைக்கக்கூடிய நிலை என்று எதுவுமில்லை. ஆனால், இவற்றை விட்டால் இப்போதைக்கு வேறு வழியுமில்லை. ஆகவே இவற்றை வைத்துக் கொண்டுதான் நாங்கள் எதையாவது செய்ய வேண்டியிருக்கு. உண்மையில் இதுவொரு மிகச் சிரமமான பணியே. ஆனால், இதைச் செய்துதான் ஆக வேணும். ஏனென்றால் தெற்கின் ஒருமித்த பலமான அரசியற் சிந்தனைக்கு நாங்கள் சிதறி நின்று கொண்டு பதிலளிக்க முடியாது. எங்களிடம் ஒரு சிறந்த – நிபுணத்துவமும் அரசியற் தீர்க்க தரிசனமும் உள்ள தலைமை இல்லை என்பது பெரிய குறையே. இது தமிழ்ச்சமூகத்துக்கு நேர்ந்த பெரிய துரதிருஷ்டம். இதற்குக் காரணம், கடந்த கால (முப்பது ஆண்டுகளுக்கு மேலான) அரசியல் தவறுகளே. இந்த அரசியல் தவறுகளையே இப்பொழுது நாங்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் இதற்குள்தான் நாங்கள் சிலதைச் செய்ய வேண்டியுள்ளது” என்றார் நண்பர்.

“ஒவ்வொரு தேர்தலின்போதும் இப்படிப் பதற்றப்படுவதும் அரசியற் கூட்டு, அரசியல் ஒருங்கிணைவு பற்றிப் பேசுவதும் வழமை. தமிழ்ச்சனங்களும் ஒற்றுமைக்கும் அடையாளத்துக்கும் ஆதரவளிக்க வேணும் என்று சொல்லித்தான் வாக்களிக்கிறார்கள். ஆனால், பிறகு மக்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. பதிலாக இன்னும் இன்னும் தெற்கு உறுதியாகவும் பலமாகவும் அல்லவா உருத்திரண்டு கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு தமிழ்த்தரப்புப் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2010 இல் ஒரு கட்சியாக ஏகப் பெருநிலையிலிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதறிப்போயுள்ளது. இப்பொழுது அது ஏழு கட்சிகளாகி விட்டது. ஈ.பி.டி.பி கூட இரண்டாகி விட்டது. இந்த நிலையில் எப்படிச் சனங்களிடம் ஒற்றுமையைப்பற்றிப் பேச முடியும்?” என்று அவரிடம் கேட்டேன்.

“உண்மைதான். ஆனால், வெற்றியைப் பெற்றவுடன் மக்களோடும் சமூகத்தில் உள்ளவர்களோடும் நம்முடைய (தமிழர்களுடைய) அரசியல் தலைமைகள் உறவைத் துண்டித்து விடுகின்றன. பிறகு அவை தங்களுடைய பாட்டில் அரசியலைச் செய்கின்றன. இதனால்தான் அரசியற் தவறுகளும் பின்னடைவுகளும் ஏற்படுகிறது. இந்தத்தடவை அந்தத் தவறுகளுக்கு இடமில்லாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமெடுக்க வேண்டும் என்று சிந்திக்கிறோம். பார்ப்போம்” என்றார் அவர்.

உண்மையில் அவர் பிடிகொடுக்காமலே பேச முற்பட்டதை எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொண்டேன்.

“சரி, நீங்கள் தெரிவு செய்ய விரும்புகின்ற அரசியல் தலைமை அல்லது அந்தக் கூட்டு எது? எப்படியானது” என்று திரும்பவும் கேட்டேன்.

“அதற்கான பேச்சுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள மத அமைப்புகள், சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணர்கள் போன்றோரிடம் ஒரு அபிப்பிராயத்திரட்டைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் ஒரு தலைமையைக் கண்டு பிடிப்போம்” என்றார்.

“ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த்தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் “தமிழ் வாக்குகளின் கேந்திர முக்கியவத்துவத்தை உணர்த்த முடியும்” என்று ஒரு தரப்பினரால் பேசப்பட்டது. (இது சிவாஜிலிங்கம் தன்னைத் தானே அறிவிப்பதற்கு முன்பு நடந்த கதை). இதைச் சிலர் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும் அதற்கு யாரை நிறுத்துவது? யார் பொருத்தமானவர்? என்று தீர்மானிக்க முடியாமல் இருந்தது. இதற்குப் பிறகுதான் சிவாஜிலிங்கம் தன்னைத்தானே ஜனாதிபதி வேட்பாளராகப் பிரகடனப்படுத்தினார்.

அந்தளவுக்குத் தமிழ்த்தரப்பில் தலைமைத்துவத்துக்குரிய தகுதியும் ஆளுமைக்குறைபாடும் நிலவுகிறது. இது எந்த வகையிலும் மறைக்கவே முடியாத உண்மை. அப்படியிருக்கும்போது இப்பொழுது நீங்கள் உருவாக்கப்போகும் புதிய கூட்டுக்கு யார் தலைமைத்தகுதியைப் பெறக்கூடியவர்?” என்று கேட்டேன்.

“இதைப்பற்றி நாங்கள் இப்பொழுது பேசுவது பொருத்தமானதல்ல. அப்படி ஒரு தலைமையை முன்னிறுத்திப் பேச முற்பட்டால் அதுவே நாம் உருவாக்க எண்ணுகின்ற கூட்டணிக்கு பாதகமாக அமைந்து விடும். மற்றவர்கள் குழம்பி விடுவார்கள். ஆகவே முதலில் ஒரு கூட்டை உருவாக்கி விட்டு, அதிலிருந்து ஒரு தலைமையை தெரிந்து கொள்ளலாம் என்றிருக்கிறோம்” என்றார் நண்பர்.

“தற்போது வட மாகாண ஆளுனரை நியமிப்பதற்குப் பொருத்தமான ஒருவரின் பெயரைச் சிபாரிசு செய்யுங்கள்” என்று அரசாங்கம் வைத்துள்ள பொறியைத் தோற்கடிக்க முடியாமல் இருக்கிறோம். இந்த நிலையில் புதிய கூட்டணிக்கான தலைவரைத் தெரிவு செய்வதற்குப் பொருத்தமான – தகுதியான ஆளுமைகள் யாராக இருக்கும்?” என்று திரும்பக் கேட்டேன்.

“இது ஒரு சிக்கலான விடயந்தான்” என்றார் நண்பர். நண்பருடைய முகம் வாடியது. ஏனென்றால் பொருத்தமான தலைமையை இனங்காண முடியாத தவிப்பின் வெளிப்பாடு அதுவல்லவா.

மேற்படி இந்த உரையாடல் சமகாலத்தில் தமிழ் அரசியற் பரப்பில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சில முன்னெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த முன்னெடுப்புகளோடு இணைந்து தீவிரமாகச் செயற்படும் அரசியல் ஆர்வமுடையவரின் பதில்களும் தகவல்களுமே இவை என்பது இதை ஒத்த ஏனையவர்களுக்கும் பொருந்தும்.

இதன்படி வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலை மட்டுமே இலக்கு வைத்து தமிழ்த்தரப்பில் புதியதொரு கூட்டினை உருவாக்கும் முயற்சிகள் அவசரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்று புலனாகிறது. ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு அரசியற் கூட்டாக இது இருக்கப்போகிறது என்றும் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே வந்து கொண்டிருக்கின்ற சேதிகளும் உறுதிப்படுத்துகின்றன. இதற்கான முன்னாயத்த ஏற்பாட்டில் தமிழ்ச்சிவில் சமூகத்தினர் என்று கூறுவோரும் சில கிறிஸ்தவ மதகுருக்களும் இதில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். இவர்ளோடு அரசியல் கருத்துருவாக்கத்தளத்தில் செயற்படுவோரும் கூடி நிற்கின்றனர். மற்றும்படி சமூக முன்னேற்றம், அரசியற் தீர்வு போன்ற விடயங்களில் இவர்களிடத்திலே எந்த அடையாளத்தையும் காண முடியவில்லை.

இதேவேளை இந்த ஒற்றுமைக்கு அல்லது கூட்டுக்கு மறுவளத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள்ளிருக்கும் புளொட், ரெலோ ஆகிய இரண்டு கட்சிகளும் ஏறக்குறைய கூட்டமைப்பை விட்டு வெளியேறக்கூடிய நிலைக்கு வந்திருப்பது தெரிகிறது. அல்லது கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக்கட்சியைத் தனித்து வெளியே விடுகின்ற நிலைப்பாடு ஒன்று உள்ளது எனலாம். இது கூட்டுக்கு எதிரான செயற்பாடு. ஆனால், தவிர்க்க முடியாத விளைவு.

இதற்கு கடந்த காலத்தில் கூட்டமைப்பினுள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த உட்கொதிப்புகள் பிரதான காரணம். அது இந்தத் தேர்தற் சமயத்தில் வெளிப்படத்தொடங்கியுள்ளது. அதாவது தமிழரசுக்கட்சியின் ஏகபோக நிலைப்பாடும் ஏனைய கட்சிகளைப் பிச்சைப் பாத்திரமேந்தும் தரப்புகள் என்று அது எண்ணுவதுமே பிரச்சினையாகும்.

ஆகவே கூட்டமைப்புக்கு வெளியே நிச்சயமாக ஒன்றுக்கு மேற்பட்ட அரசியற் கூட்டணிகள் உருவாகத்தான் போகின்றன. அதில் யாரெல்லாம் இணைந்து கொள்ளக்கூடும் என்று இப்பொழுது தெரியவில்லை.

இருந்தாலும் அரசியல் நிலைப்பாட்டில் எல்லாம் ஒன்றுதான் என்ற நிலையே காணப்படும் என்று இன்னொரு நண்பர் சொன்னதையே இங்கே நினைவு கொள்ள வேண்டியுள்ளது.

ஏனென்றால், இந்த அரசியற் கூட்டை யாழ்ப்பாணத்திலிருந்து சிந்திக்கும் வரையில் அதில் எந்தப் பெரிய வேறுபாடுகளையும் நாம் காண முடியாது. அப்படி ஒரு வேறுபாடு இருக்கவும் போவதில்லை. அது கிழக்கையும் பிற பிரதேசங்களையும் உள்ளடக்கிச் சிந்தித்தால்தான் புதிய அரசியல் உள்ளடக்கமாகவும் புதிய அரசியல் முறையாகவும் அமையும். குறிப்பாகக் கிழக்கின் யதார்த்தத்தை. கிழக்கு மாகாணத்தில் தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப்பற்றி ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் துணைத்தலைவர் இரா. துரைரத்தினம் தெரிவித்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் இதனைத் துல்லியமாக்குகின்றன. அங்கே அரசியல் அதிகாரம் என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. அது வழமையைப்போல இருக்க முடியாது. மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது. இதனால்தான் கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்கியோரெல்லாம் ஒரு கட்டத்திலிருந்து அதை விட்டு நீங்கி, அரசு சார்பான அரசியலுக்கு – அதிகாரத்தை நோக்கிய நகர்வுக்குச் செல்கிறார்கள்.

இலங்கை அரசு தமிழ் மக்களை அதிகாரமற்ற மக்களாக வைத்திருக்கவே விரும்புவதால், இதை மாற்றியமைக்க வேண்டும் என்கிறார் துரைரத்தினம். ஆனால், அரசாங்கத்தினதும் சிங்கள அதிகார வர்க்கத்தினதும் விருப்பத்துக்குச் சேவகம் செய்வதைப்போலவே எந்த அதிகாரத்திலும் பங்கேற்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு தமிழ்த்தலைமைகள் இருக்கின்றன. இது அரசுக்கு எவ்வளவு வாய்ப்பைக் கொடுக்கிறது?

இதைப் புரிந்து கொண்டு இதற்குரிய கூட்டினை உருவாக்குவது எப்படி? அதை மக்கள் மயப்படுத்துவது எப்படி? மக்களின் ஆதரவை அது பெறுவதெப்படி? இந்தக் கேள்விகள் பதில் காணப்பட வேண்டியவை.

ஆகவே உருவாக்கப்படவுள்ள அரசியற் கூட்டு என்பது இரட்டைக்குழல் துப்பாக்கியைப்போல மக்களின் தேவைகளையும் லட்சியத்தையும் ஒருங்கிணைக்கக் கூடியதாக இருந்தாலோ ஒழிய வேறு எதுவும் பயனுடையதாக இருக்காது.

இதை நோக்கிச் சிந்திப்பதே அவசியமானது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *