லண்டன் 1995 சிறுகதை விமர்சனம் – இதயராசன்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி லண்டன் 1995 – ஒரு வாசகர் நோக்கில்

.

அண்மைக் காலங்களில் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து நிறையவே சிறுகதைகள் வெளிவருகின்றன. குறிப்பாக ஈழத்து எழுத்தாளர்கள், புலம்பெயர் எழுத்தாளர்களிடமிருந்து புதிய கோணங்களில் பார்வையைப் படரவிடும் கதைகள் வெளிவருவது ஆரோக்கியமான அம்சமாகும். ரஷ்ய எழுத்தாளர்களின் நீண்ட பக்கங்களைக்கொண்ட சிறந்த சிறுகதைகளை தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கும்போது, மொழியின் இறுக்கமும் வரட்சியும் காரணமாக வாசிப்பதில் இடர்ப்படவேண்டியிருக்கின்றது. ஆனால் புதுமைப்பித்தனின் நீண்ட கதைகளைப் படிக்கும்போது அத்தகைய சோர்வு ஏற்படுவதில்லை. காரணம் அவரின் மொழிச் செழுமை என்றும் சொல்லலாம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் இத்தொகுதியில் உள்ள கதைகள் சராசரி 20 பக்கங்களைக்கொண்டவை. சில கதைகள் 32, 38 பக்கங்கள்வரை நீள்கின்றன. இருப்பினும் கதைகளை வாசிக்கத் தொடங்கியதும் கதையின் விபரிப்புமுறை வாசகர் ஆவலைத்தூண்டும் வகையிலிருப்பதால் நீண்ட பக்கங்கள் களைப்படையச் செய்யவில்லை. மேலும் இத்தொகுதியிலுள்ள பன்னிரண்டு கதைகளையும் அடுத்தடுத்து வாசிக்க முடியவில்லை. ஒவ்வொரு கதையையும் வாசித்தபின் அக்கதை வாசகரிடம் ஏற்படுத்துகின்ற அதிர்வலைகள் பல சிந்தனைக் கிளறலை ஏற்படுத்துவதால், அடுத்த கதையினை வாசிக்க கால அவகாசம் தேவைப்படுகின்றது. இந்த இரண்டு காரணங்களும் எழுத்தாளரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாக நிச்சயம் கொள்ளலாம்.

1980 இல் ஒரு கோடை விடுமுறை என்ற நாவல், அன்றைய காலகட்டத்தில் வாசகர் மத்தியில் கணிசமான கவனிப்புக்குரியவராக எழுத்தாளரை முன்னிறுத்தியது. அதனைத்தொடர்ந்து ஏழு நாவல்கள், 5 சிறுகதைத் தொகுதிகள் என்று ஓயாது எழுதிவரும் எழுத்தாளர், அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தில் தனது ஆறாவது சிறுகதைத் தொகுதியாக ‘லண்டன் 1995’ என்னும் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். அக்கதைகள் பெரும்பாலானவை ஒவ்வொன்றும் தனி நாவலுக்கான கருப்பொருளைக் கொண்டுள்ளன. அவற்றினை வாசகர் நிலை நின்று நோக்குகின்றேன்.

01. அந்த இரு கண்கள்:

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலட்சுமி என்ற தமிழ் மானவிக்கும், ஒவியத்தினை பட்டப்படிப்பாகவும் தனது ஆத்மார்த்தமாகவும் வரித்துக்கொண்ட றிச்சார்ட் என்ற ஆங்கிலேய மாணவனுக்கும் இடையிலேற்படும் எதிர்பாராத சந்திப்பும். அத்தருணத்தில் அவர்களின் மனப்போராட்டங்களும். இறுதியில் அவளது அறிமுகம் அவனது வாழ்கைத்துணையைத் தேடுவதுவரை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துதை மையமாகவைத்து, கதை நகர்த்தப்படுகின்றது.

ஒரு அந்நியனுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஓரிரவு தனித்திருக்க வேண்டிய தருணத்தில், தமிழ்பாரம்பரியத்தினை ஊட்டி வளர்த்த பெண்ணினதும், ஆங்கிலேய கலாசாரமுடைய ஆணினதும் உணர்வுப் போராட்டங்களை இயல்பாகவே எமது கண்முன் நிறுத்துகின்றார். கண்ணியமான ஆணும், பெண்ணும் இளமைக்கும் அதுசார்ந்த உணர்வுக்கும் முற்றுமுழுதாக இடம்கொடுக்காமல், அறிவுக்கும் வேலைகொடுப்பார்கள் என்ற சேதி சொல்லப்படுகின்றது.

அவள் ஆரம்பத்தில் அவனது அறைநிறைந்த கண் ஒவியங்கள் தன்னை ஊடறுத்துப்பார்ப்பதாக உணர்ந்து கூச்சமடைவதும், அவனது அண்மையை வெறுப்பதும், அவன் முரடர்களால் அடிபட்டு காயமடைந்த பொழுது, அவனது சுகநலனில் அக்கறைப்படும் ஒரு தாய்மையின் தவிப்பையும், அவனது பார்வையை நேராகவே எதிர்கொள்வதிலும் பெண்களின் இயல்பு வெளிப்படுத்தப்படுகின்றது.

அதேவேளை ஆரம்பத்தில் அவள் தன்னைச் சந்தேகித்து வெறுப்பதன் உளவியலைப் புரிந்துகொள்வதும், அவளது தாய்மை உணர்வில் ஈர்ப்புப் கொள்வதும், அவளது உறங்கும் விழிகளை ஓவியமாக்குவதும், அந்தப் பாசமான, பரிவான பார்வையால் வசீகரிக்கப்பட்டு அதே கண்கள் உடையவளை வாழ்க்கைத்துணையாக கொள்வதன்மூலம், யாவுமே பார்வைகளின் தீர்மானமே எனும் தனது ஓவியக் கண்ணோட்டத்துள் வாசகரும் உள்நுழைந்து நுகர்வது புதிய அனுபவமாகின்றது.

02. அந்தப் பச்சை வீடு:

இலங்கையில் மட்டக்களப்பு கிராமத்தில் பிறந்த இளம்பெண், சிறுவயதில் குடும்பத்தை இழந்து, அந்த நினைவுகளைச் சுமந்தவாறு, லண்டனில் கல்வி பயில்கின்றாள். அவள் அமானுஸ சக்தி தன்னை வழிநடத்துவதாக உணர்கின்றாள். அவளை கொழும்பில் வசித்து, லண்டனில் கல்விபயிலும் வாலிபன் காதலிக்கின்றான். இருவரது மனப்போராட்டமும், திருமணத்தின் பின்னரும் அந்த அமானுஸ சக்தியால் இருவரும் எதிர்கொள்ளும் சவால்களுமே கதை.

தமிழருக்கே உரித்தான கலாசார கட்டுக்கோப்பினை உடைக்காமல், பொறுமையாகவும், பொறுப்புடனும் காதலைச் சொல்வதற்கு அப்பால் அமானுஷ சக்திபற்றிய விபரிப்பும், கதையின் முடிவும் மரபுவழியான மித் (Myth), அறிவியல் நோக்கு இரண்டுமே இரண்டு தண்டவாளம்போல் முடிவின்றித் தொடர்வதாகக் காட்டுவதன் மூலம் ஆசிரியர் என்ன சொல்லவருகின்றார் என்பதைத் தெளிவாக முன்வைக்காமல் நழுவி நின்று, வாசகரைக் குழப்புகிறார் என்றே சொல்லலாம்.

03. இன்னுமொரு காதல்:

சமந்தா ஆங்கிலேயப் பெண். முரளி தமிழ் வாலிபன். இருவரும் முதல்நாள் பாடசாலையில் காலடி எடுத்து வைக்கும் போதே ஆதரவுடன் கரம் பற்றியவர்கள் நண்பர்களாக. இருவரது குடும்பமும் நெருக்கமானது. இருவரும் வாலிப வயதை அடைந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட உணர்வலைகள் கதையின் மையக்கரு.

ஒரு தமிழ்க் குடும்பம் தமது பிள்ளைகளுக்கு நல்ல பண்பினை, பழக்கவழக்கங்களை ஊட்டி ஊட்டி வளர்ப்பதால் தமது வாலிப உணர்வுகளை கௌரவத்திற்காகப் புதைத்து வைத்துப் படும்பாடுகளை முரளி என்ற வாலிபன் மூலம் வாசகரைச் சிந்திக்க வைக்கின்றார். எல்லாப் பெண்களும் இச்சைகளுக்கு அடிமைகள் என்ற ஆண்களின் பார்வையில் சுதந்திரமான பெண்கள் சந்திக்கும் அவமானங்களைச் சமந்தா மூலமும் ஆசிரியர் சொல்கின்றார். யாதார்த்தமானதாகவும் சில இடங்களில் இலட்சியம் சார்ந்ததாகவும் கதை நகர்த்தபடுகின்றது. வாசகர்களுக்கு நிச்சயமாக புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

04. சின்னச் சின்ன ஆசை:

ஹாமில்டன் என்ற ஆங்கிலேய பேராசிரியர். இவர் தனது காதலியைத் திருமணம் செய்து, நடுத்தர வயதில் அவளது விவாகரத்து கோரிக்கையால் வாழ்க்கையில் சலிப்புற்று பல்கலைக்கழகமும் மாணவர்களும் என்பதில் நிம்மதிபெற முயற்சிக்கின்றார். மைதிலி ஒரு இந்துமத தமிழ்ப்பெண். துணிச்சலான, முற்போக்குச்சிந்தனையுடைய மாணவி. இருவரும் தமது கல்வி, முற்போக்குச் சிந்தனைகளால் கவரப்பட்டு சந்தித்துக் கொள்வது, மைதிலியின் காதலனால் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இதுதான் கதைச் சுருக்கம்.

ஒரு தமிழ்ப்பெண் எங்கு வசித்தாலும் தமிழர் கலாசாரமும், ஆணாதிக்கமும் விடாது துரத்துகின்றது. அதனை எதிர்த்து கேள்வி கேட்பவர்களைப் பலவீனப்படுத்திப் பணியவைக்கவும், மீறுபவர்களை அடங்காப்பிடாரிகள் என்று ஒதுக்கவும் செய்கின்றது, என்பதை ஆசிரியர் சிறந்த கதைப் பின்னல் மூலம் சலிப்பூட்டாமல் சொல்லியிருக்கின்றார்.

05. மோகத்தைத் தாண்டி:

அலிசன் என்ற பெண்ணும், ஒலிவர் என்ற ஆணும் இங்கிலாந்தின் பாரம்பரியம் பேணும் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு குடும்பமும் நெருக்கமானது. ஒலிவரின் தம்பியை காதலித்தவளே அலிசன். அவன் விபத்தில் இறக்க ஒலிவர் திருமணம் செய்கின்றார். இவர்களது தாம்பத்தியச் சிக்கலே கதையின் கரு.

தமிழ் வாசகர்களுக்கு இத்தகைய கதைகளை ஆங்கில மூலமே வாசிக்கமுடியும். ஆனால் ஆசிரியர் மூலக்கதையாகவே தமிழில் எழுதியிருப்பது, புதிய ஒரு தளத்தினை தரிசிக்கும் வாய்ப்பினை தமிழ் வாசகர்களுக்கு வாய்க்கச் செய்தமைக்கு முதலில் ஆசிரியருக்கு நன்றி சொல்லவேண்டும்.

அடுத்ததாக இங்கிலாந்து உயர்வர்க்கக் குடும்பத்தின் வாழ்முறையையும், சிந்தனைப் போக்குகளையும் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஆங்கிலேயப் பெண்கள் தமது காதலை சட்டையை மாற்றுவதுபோல் மாற்றுபவர்கள் என்ற மனப்பாங்கில் சம்மட்டியால் அடித்ததுபோலுள்ளது அலிசனின் காதல் உணர்வுகள். அவள் கடைசிவரை தனது காதலை மறக்கமுடியாது, தனது காதலன் போன்ற தோற்றம் உடையவன் மூலம் குழந்தைபெற்று, தனது காதலன் பெயரையே குழந்தைக்கு வைப்பதும், தன்னால் தந்தையாகும் இயலுமை இல்லையென்று தெரிந்தும் தனது தம்பியின் காதலி, தனது மனைவி என்ற கௌரவத்திற்காக அக்குழந்தைக்குத் தந்தையாகும் பண்பும். கதையின் கனதியை உயர்த்துகின்றது.

06. த லாஸ்ட் ட்ரெயின்:

வரதன் என்ற தமிழ் வாலிபன் அஞ்சலீனா என்ற ஆங்கிலேயப் பெண்ணைக் காதலிக்கின்றான். இருவரது காதலுக்கும் வரதனின் தாய் தடைபோடுகிறாள். காதலர்கள் பிரிக்கின்றனர். குடிபோதையில் கடைசி றெயினில் போகும்போது ஏற்படும் அசாதாரண சம்பவம் காதலர்களை இணைத்துவைக்கின்றது. இதுதான் கதை.

காதல் தோல்வியால் ஒரு ஆண்படுகின்ற வேதனையை தத்துரூபமாக விபரிக்கின்றார் ஆசிரியர். காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் ஆத்மா, வரதனின் சிந்தனையில் தெளிவை ஏற்படுத்தியது என்பது, அறிவியல் நோக்கில் உதைக்கவே செய்கின்றது.

இருப்பினும் அம்மாக்கள் பொத்திப் பொத்தி வளர்க்கும் ஆண்பிள்ளைகள் பாவம். உணர்வுக்கும் உறவுக்கும் இடையில் உரலும் உலக்கையுமாக இடிபடுகின்ற துன்பத்தை மனக்கண்ணில் நிழலாடச் செய்கிறார். கதையின் எதிர்பாராத முடிவின் மூலம் வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றார். அவனது காதலி மீண்டும் தனது காதலைச் சொன்னபோது சந்தோஷம் அடைந்தான் என்பதற்கு அப்பாலுள்ள மூன்று வரிகளையும் நீக்கி இருப்பின் கதையின் முடிவைக் கடைசிவரை யூகிக்கமுடியாமலே இருந்திருக்கும்.

07. அக்காவின் காதல்:

இதுவும் ஒரு ஆங்கிலேய பெண்ணின் கதை. எல்லாவற்றினையும் தானே அனுபவிக்கவேண்டும் என்று எண்ணி வாழ்கின்றவள், தனது அக்காவின் லைவ் பாட்ணரை தனதாக்குவதை சொல்வது.

இது தற்போது தமிழ்ச் சூழலில் சாதாரண விடயமாகிவிட்டது. நாளும் பொலிஸ் நிலையங்களில் இத்தகைய வழக்குகளே மலிந்துவிட்டன. வறுமையும், பெண்களின் முன்னேற்றம் முடங்கியமையும், ஆண்களின் குரங்காட்டமுமே காரணமென்று இப்போதைக்குச் சொல்லிவைக்கலாம்.

08. காதலைச் சொல்ல:

இங்கிலாந்தில் பிறந்து கல்வி பயிலும் மாணவன் கண்ணன். தனது தங்கையின் சிநேகிதியாக அறிமுகமாகும் கவிதா. அவள் இந்தியாவிலுள்ள உயர்தட்டு தமிழ் இந்துப் பெண். இருவரும் காதலைச் சொல்லாமல் பழகுகின்றார்கள். அவளுக்கு இவனது காதல் புரிகின்றது. அவனுக்கு தனது தங்கையின் சினேகிதி என்பதால் காதலைச் சொல்லத் தயங்குகின்றான். இறுதியில் இருவரும் இணைவதே கதை.

காதலர் சேர்வதற்காக லண்டலிருந்து கோயம்புத்தூர் வரை பயணிப்பது காதலர்களுக்குச் சுகமாக இருக்கலாம். வாசகர்களும் அவ்வளவு செலவளித்துப் பயணிப்பது என்ன நியாயம்? இருவரும் தமிழ், இந்து கலாசார சூழலில் உயர்தட்டு வர்க்கமாகையினால் திருமணத்திற்கு எவ்வித தடையும் இல்லாத போதிலும், காதலுக்காக ஒரு ஆண்மகன் தனது கலாசார வேலிகளை உடைப்பதற்குப்படும் அவஷ்த்தைகளை நுட்டமாகச் சொன்னவகையில் சிறப்பான கதை.

09. லண்டன் 1995:

சந்திரசேகரம் என்ற குடும்பஸ்தர் தனது இருகுழந்தை, மனைவியைப் பிரிந்து லண்டன் வந்து, மனைவி பிள்ளைகளை லண்டனுக்கு அழைக்கின்றார். பிள்ளைகள் தகப்பனை அந்நியனாகப் பார்க்கின்ற வேதனையும், மகன் தகப்பனுடன் ஆங்கிலத்தில் கதைத்தால் ஆத்திரமுற்று கைநீட்டி விட்டு, அவர் படுகின்ற துயரமே கதையின் மையப்புள்ளி.

இலங்கையில் சிங்கள மேலாதிக்கத்தால் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்று, ஆயுதப் போராடடமாகி பின்னர் வன்முறையாக பரிணமிக்கின்றது. இந்தப்பின்னணியில் தமிழ் மொழிபேசுபவர் என்ற காரணத்தால் சிங்கள இனவாதிகளால் கொலை செய்யப்படுகின்றார்கள் என்ற வலிசுமந்துவந்த சந்திரசேகரத்தால், மகன் தன்னுடன் ஆங்கிலம் பேசியதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனது செயலுக்காக மகனை அணைத்து மன்னிப்புக் கேட்கும்போது, மகன் விம்மி விம்மி அழுதவாறு, ஏன் அப்பா சிங்களவரும் தமிழ் பேசினதுக்குத்தானே கொலை செய்தார்கள்? நீங்களும் தமிழ் பேசவில்லை என்றுதானே அடிக்கிறீர்கள்? என்ற ஆழமான அர்த்தம் பொதிந்த கேள்வி, சிங்கள வெறிமட்டுமல்ல தமிழ் வெறியும் கேடுதான் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கின்றது கதை.

10. ஓர் உளவாளியின் காதல்:

சித்திரா கல்லூரியின் தமிழ் மாணவி. இவளது பெற்றோர் லண்டனில் உயர்பதவி வகிக்கின்றனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். மகளும் அதில் சேர்கின்றாள். சித்திராவின் தோழியொருத்தியும் அத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டபோது, உளவாளி ஒருவன் அந்தத் தோழியைப் பணியவைத்து, தானும் போராளியாக நடித்து, சித்திராவின் காதலனாகி, சித்திராவின் குடும்பத்தை உளவுபார்க்கின்றான். சித்திரா கர்ப்பமாக அவன் மறைகின்றான். இதுதான் கதையின் சாரம்.

இந்தக்கதையின் மூலம் உண்மையான போராட்டங்களில் போலிகள் உள்நுழைந்து, போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்துச் சீரழிக்கும் நடைமுறை யதார்த்தத்தினை நுட்பமாகச் சொல்கின்றார். இராகவன் என்ற தமிழ் அகதி நல்ல உள்ளம் கொண்டவன். ஆனால் தனது அகதிநிலையால் அத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவதை சூழ்நிலை தடுக்கின்றது. அதனைப் பொருத்திப் பார்க்காத சித்திராவுக்கு அவன் சுயநலவாதியாகப் படுகின்றான். ஆனால் உளவாளியாக வந்தவன் அதிதீவிரவாதியாகின்றான். அதன் ஆபத்து உடனடியாகப் புரியாது, பின்னர்தான் புரியும் என்பதற்கு சிம்போலிக் சித்திராற்வின் வயிற்றில் வளரும் கருவோ? என்று சிந்திக்கவைக்கின்றது.

11. பரசுராமன்:

இந்தக் கதையில் நிறைய விடயங்களை உட்பொதிந்து சொல்கின்றார். தகப்பன் துரோகி என்று கொலை செய்யப்பட்டபின்னர். விதவைத்தாய் இரண்டு குழந்தைகளுடன் லண்டன் வந்து, பல சவால்களை எதிர்கொண்டு முன்னேறுகின்றாள். ஆனால் மகனும் மகளும் பதினெட்டை அண்மிக்கும்போது, இவளுக்கு வயது 42. இருபது வயதில் விதவையாகி வாழ்க்கை பறிக்கப்பட்டவள். தனது உடலியல் தேவையை புறம் தள்ளி பிள்ளைகளை வளர்ந்தவள். இப்போது பிள்ளைகள் வளர்ந்து திருமணமாகும் வயதினை அடைந்தபின்னர், இவளது நிலை என்ன? ஏன் அவளொரு வாழ்கைத்துணையைத் தேடக்கூடாது? என்ற விவாதத்தை கதை எழுப்புகின்றது.

தமிழர்கள் தமிழின் பெருமையென்று சீழ்வடியும் புண்களையும் சுமந்து வந்து, கட்டிக்காத்து, அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதன் கேட்டினை நச்சென்று வாசகர் செவிப்பறையில் ஓங்கி ஒலிக்கச் செய்கின்றார். மகன் கலாசாரத்தின் பேரால் தாயைக் கொலைசெய்த பரசுராமனின் நவீன வடிவமாக விஷ்வரூபமெடுத்து நிற்கின்றான்.

12. இப்படியும் கப்பம்:

தனது குடும்பத்தினரை தன்னுடன் வரவழைத்த ஏஜென்சிக்குக் கொடுக்கவேண்டிய கடன் சுமையில் கையறு நிலையில் நிற்கும் கணவன். கடனுக்காக மனைவியினை பாலியல் இலஞ்சமாகக் குதறிவிட்ட காமுக ஏஜென்சிக்காரன். பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணின் மனப்போராட்டமே கதையின் மையம்.

நரியூருக்குப் பயந்து புலியூரில் பதுங்கிய கதையாகத்தான் இன்று ஈழத்தமிழர்களின் நிலை என்பதை கதை சொல்லி நிற்கின்றது. தலைக்குமேல் கடன்பழுவை எப்படித்தான் சுமக்கமுடியும். இலங்கையில் நுண்கடன் துன்பியலை நினைவூட்டுகின்றது. பாதிக்கப்பட்ட தம்பதிகள்போல் இலங்கையின் இனவன்செயல்களினால் பலப்பல. முகைவெடித்த மொட்டென்ற வரதரின் சிறுகதைத் தொகுதியின் கதையொன்றும் ஞாபகத்திற்கு வருகின்றது. உயிர்ப்பாதுகாப்பு ஒருபுறம் இருக்க வெளிநாட்டு மோகமும் இத்தகைய இடர்களைத் தேடிப்போக வைக்கின்றது.

லண்டன் 1995 சிறுகதைகள் பன்னிரண்டினையும் வாசித்து முடித்தபோது, ஒரு நாவலை வாசித்த உணர்வு மேலோங்குவதை என்னால் நிராகரிக்கமுடியவில்லை. ஒவ்வொரு கதைகளும் ஈழத்தமிழரின் மேற்கத்தைய கலாசாரத்துடனான மோதுகை, தமிழ் கலாசாரத்தை மேற்கிலும் பொத்திவளர்க்க வேண்டுமென்ற ஆதிக்கத்தின் தாக்கம், ஆங்கில கலாசாரத்தின் சாரலில் நனைதல், காதல், துரோகம், ஏமாற்றம், ஆண் பெண் உணர்வுகளின் விரிசல்கள் என்று பரந்து விரிந்து, தனித்தனிக் கதைகளாக சொல்லப்பட்டாலும் இவற்றுக்கிடையே ஒரு நுண்ணிய இளையோடி, இணப்பதனை தவிர்க்கமுடியாதுள்ளது. கதையின் வசனங்கள் அலட்டல் இல்லாமல் வாழ்வியலைச் சொல்வதன் மூலம் வாசகரைக் கருத்தூன்றி வாசிக்கச் செய்கின்றது. இருப்பினும் சில வசனங்களைச் சுருக்கியிருக்கலாம், சில சில எழுத்துப்பிழைகளைத் திருத்தி, வசனங்களைச் செம்மைப்படுத்தியிருப்பின் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இவையாவும் மறுபதிப்பில் ஈடேறும் என்று எதிர்பார்க்கின்றேன்.

நீண்ட காலத்தின் பின்னர் காத்திரமான சிறுகதைத் தொகுதியை வாசித்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நல்ல சிறுகதைகளைத் தேடிவாசிக்கும் வாசகர்கள் கட்டாயம் இதனை வாசிக்கவேண்டும் என்ற எனது விருப்புடன், நூலாசிரியர் இதே பின்புலத்தில் இன்னமும் நிறைய எழுதவேண்டும் என்றும், அதற்கான தேவை நிறையவே உள்ளது என்றும் சொல்லி நிறைவு செய்கின்றேன்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *