கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை! மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்?

கேரளாவைச் சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சிறுபான்மையினருக்கு எதிராக கொடுமைகள் தொடர்வதை இந்த உலகிற்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது. 

‘பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பிதான் வட மாநிலங்களைத் தேர்வு செய்யாமல் சென்னை ஐஐடியை தேர்வு செய்தோம். படிக்க வேண்டும் என்று வெறியுடன் பல தடைகளைத் தாண்டிய எனது மகள் எப்படி தற்கொலை செய்து கொண்டாள்’ என்று பாத்திமாவின் பெற்றோர்கள் கதறுவது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. 

இந்நிலையில், சென்னை ஐஐடியில் தற்கொலை நடப்பது புதிதல்ல என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது. அதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 8 ஐஐடி-களில் 52 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 

இதில், ஐஐடி-மெட்ராஸில் 14 தற்கொலைகள் அரங்கேறி, முதல் இடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் மெட்ராஸ் ஐஐடியில் நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன பாத்திமா லத்தீப்பின் தற்கொலை உள்பட. தனது தற்கொலைக்கு பேராசிரியர்கள் மூவர் தான் காரணம் என்று பாத்திமா தனது மொபைல் நோட்டில் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை விபரம்:

மெட்ராஸ் – 14 

கராக்பூர் – 13

கவுகாத்தி – 8

ரூர்கி – 5

டெல்லி – 4

கான்பூர் -4

ஹைதராபாத் – 2

மும்பை -2

உயர்தர பொறியியல் நிறுவனங்களில் நடக்கும் இதுபோன்ற தற்கொலைகளுக்கு என்ன காரணம் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. சாதி, மதம் என பொது பாகுபாடு மட்டுமின்றி, எதிர்பார்ப்புகள், தனிமை, அதிக போட்டி, அக்கறையின்மை மற்றும் சக மாணவர்கள் கொடுக்கும் அழுத்தம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் அவர்களின் மனநல பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது என்று மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

ஏற்கனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சென்னை ஐஐடியில் ஒரு கவுன்சிலிங் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மனநல மருத்துவர்கள், மூத்த ஆசிரியர்கள் பலர் நேரடியாக மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள் என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பல மனநல ஆலோசகர்கள் அல்லது உளவியலாளர்கள் பலரை நியமித்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார். 

பிறப்பினால் ஒருவன் கல்வியறிவு பெறுவதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்று அந்தக் காலத்தில் இருந்தே பல தலைவர்கள் வலியுறுத்தி வந்த போதிலும், உயர்தர கல்வி நிறுவனங்களிலேயே படிப்பறிவு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மத, சாதிய பாகுபாடுகள் காணப்படுவது வேதனைக்குரிய விஷயம். முக்கியமாக மாநிலம் தாண்டி உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாவது சாதாரணமாகி விட்டது. 

இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐஐடி போன்ற உயர் நிறுவனங்களில் இருக்கும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள், பொது மக்கள் என அனைவருமே வலியுறுத்தி வருகின்றனர்.