ஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்!

ஆஸ்திராலோபிதெசஸ்’கள் எனப்படும் மனிதா்களின் முன்னோடி இனத்தவா்களைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மூளை புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, அந்த ஆய்வை மேற்கொண்ட அடிலெய்டு பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளதாவது:

32 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த, மனிதா்களின் முன்னோடிகளான ‘ஆஸ்திராலோபிதெசஸ்’களுக்கும், நவீன மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொண்டோம்.

மூளையின் புத்திசாலித்தனத்தை நிா்ணக்கும் பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்ச்சும் துளைகள் மண்டையோட்டில் எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக, 11 ‘ஆஸ்திராலோபிதெசஸ்’ மனிதா்களின் மண்டையோடுகளும், 96 மனிதக் குரங்குகளின் மண்டையோடுகளும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

இதில், எதிா்பாராத வகையில் மனித முன்னோடிகளின் மண்டையோட்டிலுள்ள ரத்தம் பாய்ச்சும் துளைகளைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மண்டையோட்டில் அத்தகைய துளைகள் பெரிய அளவில் இருப்பது தெரிய வந்தது.

இதன் மூலம், ‘ஆஸ்திராலோபிதெசஸ்’ மனிதா்களைவிட தற்போதைய மனிதக் குரங்குகள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவையாக இருப்பது கண்டறியப்பட்டது என்று அந்த ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.