ஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள்! நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்

கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் நடைபெற்று வரும் ஜப்பானிய திரைப்பட விழாவில் ஏழாவது நாளான நேற்று நட்பையும், அன்பையும் பாராட்டும்விதமாக உருக்கமான ஒரு படம் திரையிடப்பட்டது. Little Love Song என்ற அந்த திரைப்படம் நான்கு டீன் ஏஜ் பொடியன்கள் மற்றும் இசையின் மீதான அவர்களின்  பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக கதைகளனை கொண்டது. நேற்று மாலை 7;30 மணிக்கு திரையிடப்பட்ட இப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஒகினவா மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் சிறிய மியுசிக் பேண்ட் வைத்திருக்கும் நான்கு நண்பர்கள். அவர்களுக்கு தங்களின் குழு மிகப்பெரிய மியூசிக் பேண்டாக உருவெடுக்கவேண்டும் என்பது இலட்சியம். அவர்கள் பாடினால் ஒட்டுமொத்த இளசுகளும் தங்களை மீறி ஆடத்தொடங்கிவிடுவார்கள். சில நேரங்களில் பள்ளிக்கட்டுபாடுகளை மீறி இவர்களின் இசை உற்சாகம் வெளிப்பட பள்ளியில் அடிக்கடி குட்டுபடுகின்றனர். இருப்பினும் இசையின் மீதான கவனத்தை அவர்கள் குறைத்து கொள்ளவில்லை.

அதே மாகாணத்தில் அமெரிக்க ராணுவம் ஒரு விமானதளத்தை அமைத்திருக்கிறது. இந்த நான்கு நண்பர்களில் இருவரான ரியாடோவும், ஷிம்ஜியின் ஒருநாள் சைக்கிளில் வெளியெ செல்லும்பொழுது மோதும் அடையாளம் தெரியாத வாகனம் ஷிம்ஜியின் உயிரை பறிக்கிறது. தொடர்ந்து அவர்களின் குழுவில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. மோதியது அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான வாகனம் என்று ஒருபுறம் ஒகினாவா மக்கள் எதிர்ப்பை தெரிவித்து ஆர்பாட்டம் செய்துகொண்டிருக்க, இறந்து போன ஷிம்ஜிக்கும் ஒரு அமெரிக்க பெண்ணிற்குமான நட்பை இங்கு  பார்வையாளர்களுக்கு தெரியவருகிறது.

கடுமையான பாதுகாப்பு காரணங்களால் கம்பி வேளிக்கு அந்தபுறமாக விமான தளத்திற்குள் அந்த அமெரிக்க டீன் ஏஜ் பெண் லிசா நிற்க இந்தப்பக்கமாக ஷிம்ஜியும் அவன் நண்பன் ரியோடாவும் நிற்க அவர்களுக்குள் இசையின் அடிப்படையில் இரு ஈர்ப்பு ஏற்படுகிறது. லிசா ஷிம்ஜியின் மரணத்தை கேள்விப்பட்டு மனவேதனை அடைகிறாள். ஷிம்ஜியின் தங்கை மியுசிக் பேண்டில் ஷிம்ஜி ஏற்படுத்திய வெற்றிடத்தை நிறைவு செய்ய வருகிறாள். அவள் கிதார் வாசிக்க பிரிந்து சென்ற மற்ற நண்பர்கள் ஒன்று கூட மிகப்பெரிய இசைவிருந்தை வழங்க  திட்டமிடுகின்றனர். ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை.

அதே நேரம் ஷிம்ஜிக்கு விபத்து ஏற்படுத்தியது லிசாவின் தந்தையாக கூட இருக்கலாம் என்கிற அனுமானத்தை தருகிறார் இயக்குனர். ஒருகட்டத்தில் லிசா குடும்பத்துடன் அமெரிக்கா திரும்பி செல்ல தீர்மானிக்க , அவர்கள் அங்கிருந்து செல்லும் முன்பு லிசாவிற்கு மிகப்பெரிய இசைவிருந்தை தர முடிவெடுக்கின்றனர் நண்பர்கள்.

கம்பி வேலியின் அந்தப்பக்கமாக லிசா இருக்க, இந்த பக்கம் இசைபேண்டுடன் நண்பர்கள் இசைக்க, ஒருபுறம் போலிஸ் கைது செய்ய காத்திருக்க கடைசி அந்த நிமிடங்கள் திக் திக் திரில்லுடன் நகர்கிறது. இதன் முடிவு என்னவாக இருக்கு என்பதை சொல்கிறது Little Love Song.

அமெரிக்கா ஜப்பான் இருநாடுகளிடையேயான அரசியல் உடன்பாடுகள், முரண்பாடுகள், இந்த தலைமுறையினர் எல்லையற்ற பேரன்பையே விரும்புகின்றனர் என்ற  உண்மையை மிகத்தெளிவாக சொல்கிறது இந்த திரைப்படம்.

இதே ஒகினாவா மாகாணத்தில் பத்தொன்பது வயது டீன் ஏஜ்  இளைஞர்களால், 1998 ல் உருவாகி மிகவும் புகழ்பெற்ற Mangol800 என்ற பேண்ட் இசைக்குழுவினர் வாழ்வில் நிகந்த உண்மைச் சம்பவத்தின அடிப்படையில் Little Love Song ஐ உருவாக்கியுள்ளார் இயக்குனர் கொஜிரோ ஹொஷிமொட்டோ. அந்த  பேண்டின் புகழ்பெற்ற மூன்று பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

ஜப்பான் திரைப்பட விழா வரும்  ஞாயிறு அன்று நிறைவுபெறுகிறது. வார இறுதியை முன்னிட்டு இன்று, நாளை, ஞாயிறு ஆகிய தினங்களில் நண்பகல் 12 மணிக்கே திரையிடல் ஆரம்பிக்கிறது. Samurai Shifters, Shoplifters,We are little Zombies ஆகிய படங்கள் இன்று திரையிடப்படுகின்றன. ஜப்பான் திரைப்பட விழாவிற்கான அனுமதி முற்றிலும் இலவசம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

-Dunamani