நடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்

‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக சமீபகாலமாக தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.


‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக சமீபகாலமாக தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ‘பேஸ்புக்’கில் போலி கணக்குகளை உருவாக்கி தேவையற்ற மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ‘பேஸ்புக்’ நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் நடப்பு ஆண்டில் இதுவரை மட்டுமே 540 கோடி போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக ‘பேஸ்புக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. தவறான தகவல்களையும், வெறுப்பை பரப்பும் விதமாகவும் பதிவுகளை வெளியிட்ட கணக்குகள் போலி கணக்குளாக கண்டறியப்பட்டு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ‘பேஸ்புக்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘போலி மற்றும் தவறான கணக்குகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை கண்டறிந்து தடுக்கும் திறனை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். அதன் மூலம் ஒவ்வொரு நாளும் போலி கணக்குகளை உருவாக்க நினைக்கும் லட்சக்கணக்கான முயற்சிகளை தடுக்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.