வருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா? வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்!

சென்னை: வருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களை தங்களது தளத்தில் இருந்து நீக்க யூட்யூப் முடிவெடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடியோ ஒளிபரப்பு தளங்களில் யூட்யூப்  உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் ஒரு தளமாகும். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான விடியோக்கள் இங்கு பதிவேற்றப்படுகின்றன. தங்களுக்கு என தனியாக சேனல் ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் வருமான ஈட்டுபவர்கள் இங்கு அதிக அதிக அளவில் உள்ளனர்.

இந்நிலையில் வருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களை தங்களது தளத்தில் இருந்து நீக்க யூட்யூப் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யூட்யூப் தளத்தில் உள்ள சேனல்கள் போதிய அளவு சம்பாதிக்கவில்லை என்றால் அத்தகைய சேனல்களை எல்லாம் நீக்கப்போவதாக யூட்யூப் புதிய விதிமுறையை வடிவமைத்து வருகிறது.

வணிக ரீதியாக வெற்றி பெறாத யூட்யூப் சேனல்களை மட்டுமல்லாது அவை பதிவிட்ட அத்தனை வீடியோக்களும் யூட்யூப் தளத்திலிருந்து நீக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது உலக அளவில் பல ’யூட்யூபர்களை’ பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

சின்ன, வளர்ந்து வரும் யூட்யூபர்களைப் பலியாக்கி பெரும் சேனல்களை மட்டும் மீண்டும் வளர்க்க யூட்யூப் உதவுகிறது என சர்வதேச அளவில் பலரும் யூட்யூப் தளத்தின் மீது சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டுக்குள்ளாகவே இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என யூட்யூப் சேனல்கள் மெயில் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறதாம். யூட்யூப் தளம் இப்புதிய விதியை வருகிற டிசம்பர் 10-ம் தேதி முதலே செயல்படுத்தத் தொடங்கும் எனக் கூறப்படுது.

ஆனால் அவ்வாறு வெளிவரும் செய்திகள் உண்மையில்லை என்று யூட்யூப் நிறுவனம் மறுத்துள்ளது